ஏறாவூர்ப்பற்று (செங்கலடி) பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படும் உட்கட்டுமான அபிவிருத்திப்பணிகளுக்கு ஏறாவூர்ப்பற்று (செங்கலடி) பிரதேசசெயலாளரின் நடவடிக்கைகள் இடையூறு ஏற்படுத்துவதாக பிரதேச சபையில் நடைபெற்ற மாதாந்த அமர்வில் கண்டனத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சபையின் 13 ஆவது உறுப்பினர் தவிசாளர் நாகமணி கதிரவேல் தலைமையில் 21.02.2019 நடைபெற்றது.
இவ்வமர்வில் பிரதேச செயலாளருக்கெதிரான கண்டனத்தீர்மானம் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது.
சபையின் 31 உறுப்பினர்களும் அமர்விற்கு சமுகமளித்திருந்தனர்.
இதன்போது, சபையினால் முன்னெடுக்கப்படும் உட்கட்டுமானப்பணிகள் தாமதம் ஏற்படுவதாக மக்கள் பிரதிநிதிகள் விசனத்துடன் சுட்டிக்காட்டினர்.
தவிசாளர் இக்கருத்துக்களுக்குப் பதிலளிக்கையில்- வீட்டுத்திட்டங்கள் மற்றும் சிறிய வீதிகள் அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை மற்றும் உட்கட்டுமானப்பணிகளுக்காக கிறவல் பெற்றுக்கொள்வதற்கான அனுமதியை வழங்காது பிரதேச செயலாளர் இழுத்தடிப்புச்செய்வதனால் அபிவிருத்திப்பணிகளைச் செய்யமுடியாதுள்ளதாக குறிப்பிட்டார்.
அவ்வாறான நிலையில் சபை உறுப்பினர்களில் பலர் உரத்த குரலில் கருத்துக்களை வெளியிட்டனர். ' ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் எமது பகுதிக்கு வருகைதரும்போது பிரதேச செயலாளர் ஊடாக பிரதேச சபையின் முழுமையான ஒத்துழைப்பு பெறப்படுகிறது.
ஆனால் எமது சபையின் நடவடிக்கைகளுக்கு பிரதேச செயலாளர் ஒத்துழைப்பு வழங்குவதில்லையென தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து கண்டனத்தீர்மானம் ஒன்றை ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பான பிரதிகள் மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்புவதாக முடிவுசெய்யப்பட்டது.
இச்சபை அமர்வில் மேலும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.