கிழக்கு மாகாண முன் பள்ளி ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவின் வழிகாட்டலுடன் தீர்வுகாண்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கிழக்கு மாகாண முன்னால் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை
எம்.ஜே.எம்.சஜீத்-
நீண்டகாலமாக கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் னுச. எம்.எல்.ஏ.எம்.
ஹிஸ்புல்லாவின் வழிகாட்டலுடன் தீர்வுகள் பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. என கிழக்கு மாகாண முன்பள்ளி பாடசாலைகள் கல்விப்பணியகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் மாவட்ட ரீதியான முன்பள்ளி ஆசிரியர் சங்கம் அமைக்கும் நிகழ்வு அம்பாறை நகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது இந்நிகழ்வுக்கு தலைமை வகித்து உரையாற்றிய கிழக்கு மாகாண முன்னால் அமைச்சரும், கிழக்கு மாகாண முன்பள்ளி பாடசாலைக் கல்விப்பணியகத்தின் தவிசாளருமான எம்.எஸ்.உதுமாலெவ்வை தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் உள்ளுராட்சி மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சருமான திருமதி. சிரியாணி விஜய விக்ரம கலந்து கொண்டார்.
தொடர்ந்து உரையாற்றுகையில்......
கிழக்கு மாகாணத்தில் 30 வருட யுத்த சூழ்நிலையால்; இயங்கி வந்த முன்பள்ளி பாடசாலைகளையும் முன்பள்ளி ஆசிரியர்களையும் ஒழுங்கு படுத்திய செயற்பாடுகள் நமது கிழக்கு மாகாணத்தில் இருந்திருக்கவில்லை. முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் எஸ். சந்திரகாந்தனினால் 2010ம் ஆண்டு கிழக்கு மாகாணத்திற்கு என முன்பள்ளி கல்விப்பணியகம் உருவாக்கப்பட்டு அதன் செயற்பாடுகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
கிழக்கு மாகாணத்தில் 1800 முன்பள்ளிப் பாடசாலைகள் இயங்கி வருகின்றன 4000 முன்பள்ளி ஆசியர்களும், 47,029 மாணவர்களும் உள்ளனர். இதில் அம்பாறை மாவட்டத்தில் மட்டும் முன்பள்ளிகள் 800 இயங்கிவருவதுடன் 1500 முன்பள்ளி ஆசியர்கள் சேவைபுரிவதுடன் 22400 முன்பள்ளி மாணவர்களும் கல்வி பயிலுகின்றனர். இதில் தெஹியத்தகண்டி இருந்து பாணம வரையில் அமைந்துள்ள சிங்கள மொழி ரீதியான முன்பள்ளிகள் 302 இயங்கி வருவதுடன் ஆசிரியர்கள் 583 பேரும் சேவை புரிகின்றனா. 7602 சிங்கள மொழி மாணவர்களும் கல்வி பயிலுகின்றனர்.
நீண்டகாலமாக கிழக்கு மாகாணத்தில் யுத்தம் நடைபெற்ற சூழ்நிலையிலும் நமது முன்பள்ளி ஆசிரியர்கள் கொடுப்பனவுகளை எதிர்பார்க்காது நமது பிள்ளைச் செல்வங்களின் அடித்தளமான ஆரம்ப கல்விக்கு பெரும் பணிபுரிந்து வருகின்றனர். தொடர்ந்தும் தியாக மனப்பாங்குடன் நமது பிள்ளைகளுக்கான ஆரம்ப கல்வி விடயத்தில் ஆசிரியர்கள் செயற்படவேண்டும். என கேட்டுக்கொள்கின்றேன்.
கிழக்கு மாகாண சபையால் கிழக்கு முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 3000/-கொடுப்பனவு வழங்கப்பட்டு வந்தன. அதிமேதகு ஜனாதிபதி கிழக்கு மாகாணத்திற்கு முதல் முறையாக கிழக்கின் பூர்விகம் தெரிந்த கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவை கிழக்கின் ஆளுநராக நியமிக்கப்பட்டு பதவி ஏற்றவுடன் கிழக்கு மாகாண முன்பள்ளி பணியகத்தின் செயற்பாடுகள் தொடர்பாக ஆளுநர் காரியாலயத்தில் விசேட கூட்டம் ஒன்று கூட்டி எதிர்காலத்தில் கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கேட்டறிந்து இதுவரை
3000 ரூபா கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டமை குறித்து ஆராய்ந்து உடனடியாக எதிர்வரும் மார்ச் மாதத்தில் இருந்து கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்தம் 1000 கொடுப்பனவை அதிகரித்துக் கொடுப்பதற்கான பணிப்புரை வழங்கினார்.
ஒரே நாட்டில் ஒரே மாகாண சபை முறையின் கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு 4000/- ரூபாவும், வடமாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 6000/- ரூபாவும், ஊவா மாகாண சபையிலும், தென் மாகாண சபை, மேல் மாகாண சபைகளில் முன்பள்ளி ஆசிரியர்களின் மாதாந்த கொடுப்பனவு ஆகக்கூடுதலான தொகை 20 ஆயிரம் ஆக வழங்கப்பட்டு வருகின்றது. மேற் குறிப்பிட்ட மாகாண சபைகளில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளும், கிழக்கு முன்பள்ளி கல்விப்பணியகத்தின் உயரதிகாரிகளும் விஜயம் செய்து அம்மாகாண சபைகளால் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கொடுப்பனவு தொடர்பாக அறிக்கைகளை பெற்று கிழக்கு மாகாண ஆளுநரிடம் அறிக்கை செய்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம். எதிர்காலத்தில் முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவை அதிகரித்து நமது எதிர்கால மாணவர்களின் கல்வியின் அடித்தளமாக இயங்கும் ஆரம்ப கல்வி ஆசிரியர்களுடைய சேவைகளை பயன்மிக்கதாக மாற்றி அமைப்பதற்கான ஏற்பாடுகளை கிழக்கு ஆளுநரும், கிழக்கு மாகாண முன்பள்ளிப்பாடசாலை கல்விப்பணியகமும் இணைந்து முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளோம்.
மாணவர்களுக்கு ஆரம்ப கல்வியை வழங்கும் போதே நாம் அனைவரும் இலங்கையர் என்ற உணர்வுகளை ஏற்படுத்தி நமது நாட்டை நேசிப்பவர்களாகவும், நமது நாட்டில் வாழும் ஏனைய சமூகங்களுடன் ஐக்கியமாக வாழும் உணர்வை உருவாக்கி மாணவர்கள் மத்தியில் நாட்டுப்பற்று வளர்க்கப்பட்டு இன ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு முன்பள்ளி ஆசிரியர்கள் அர்ப்பணிப்போடு பணிபுரிய வேண்டும்.
அம்பாறை மாவட்டத்தில் வாழும் சிங்கள மொழிப்பிரதேசங்களில் முன்னால் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவும், நானும் எங்களிடம் அரசியல் அதிகாரங்கள் இருந்தபோதெல்லாம் எங்களால் முடிந்த பணிகளை மேற்கொண்டுள்ளோம். இதே போல் முன்னால் கல்வி அமைச்சரும் தற்போதைய அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான விமலவீர திசா நாயக்க கிழக்கில் வாழும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு பாரிய அபிவிருத்திப்பணிகளை மேற்கொண்டார். பாராளுமன்ற உறுப்பினர் சிரியாணி விஜய விக்ரம வும் அம்பாறை மாவட்ட தமிழ் சிங்களப் பிரதேசத்திற்கு உதவி புரிந்துள்ளார். இந்த முறைமை நமது கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரவேண்டும்.
இன்று அம்பாறை மாவட்டத்தில் சிங்கள மொழிப்பிரதேசங்களில் நடைபெறும் மாவட்ட ரீதியான முன்பள்ளி ஆசிரியர் சம்மேளனம் அம்பாறை மாவட்ட தழிழ் மொழிப் பிரதேசங்கள், மட்டக்களப்பு மாவட்டம், திருகோணமலை மாவட்டங்களில் உருவாக்கிய பின் இறுதியில் கிழக்கு மாகாண மட்டத்திலான முன்பள்ளி ஆசிரியர்களின் சம்மேளனம் கிழக்கு மாகாணத்தின் மத்திய மாவட்டமான மட்டக்களப்பு மாவட்டத்தில் நடாத்துவதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அம்பாறை சிங்கள மொழி ரீதியான பிரதேசங்களுக்கான முன்பள்ளி கல்விப்பணியகத்தின் மாவட்ட காரியாலயம் ஒன்று வாங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையினை தான் ஏற்றுக்கொள்வதாகவும், மிக விரைவில் அம்பாறையில் கிழக்கு மாகாண முன்பள்ளிக்கல்விப்பணியகத்தின் மாவட்ட காரியாலயத்தினை திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.