ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்-
பிரித்தானிய பிரபுக்கள் சபை முன்னாள் சபாநாயகர் பரோனேஸ் பிரான்ஸஸ் டீ சொவ்ஸா அம்மையார் தலைமையில் ஐக்கிய இராச்சியத்தின் அரசியல் கட்சிகளின் உயர்மட்ட தூதுக்குழுவொன்று இன்று வியாழக்கிழமை (21) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீமை அவரது பாராளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து பாராளுமன்றத் தெரிவுக் குழுக்களின் செயற்பாடுகளை மையப்படுத்தி கலந்துரையாடினர்.
தெரிவுக்குழுக்களின் அமர்வுகளை ஊடகவியலாளர்களும், பொது மக்களின் சார்பிலும் பார்வையிடுவதற்கு தேவையான சந்தர்ப்பத்தில் உரிய அனுமதி வழங்கப்படுகின்றதா என்பதைப் பற்றியும், வெளிப்படைத் தன்மை எந்த விதத்திலாவது பேணப்படுகின்றதா என்பதைப் பற்றியும் அறிவதில் அவர்கள் ஆர்வமாக இருந்தனர்.
பிரித்தானியாவை பொறுத்தவரை தெரிவுக்குழுகள் விவகாரத்தில் கட்சி அரசியலை புறந்தள்ளி, பொதுவான நன்மையை கருத்திற்கொண்டு செயற்படும் நடைமுறையையே பின்பற்றப்படுவதாக அவர்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.
அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது, இப்பொழுது இலங்கை பாராளுமன்றத்தில் அமர்வுகள் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்படுவதாகவும், வானொலியில் ஒலிபரப்பப்படுவதாகவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறினார்.
இலங்கையின் நல்லாட்சி அரசாங்கம் பற்றியும் குறிப்பிட்ட அமைச்சர், இந்நாட்டில் ஆரம்பக் கல்வியிலிருந்து பல்கலைக்கழக பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி போதிக்கப்படுவதாகவும், மருத்துவ வசதிகளும் பொதுமக்களுக்கு அரசாங்கத்தினால் இலவசமாக வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
வறுமை ஒழிப்புக்கு அரசாங்கம் முன்னுரிமையளித்து வருவதாகவும், அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் குறிப்பிட்டார்.