நாடளாவிய ரீதியில் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் வருகை தந்திருந்த மக்களின் பலத்த வரவேற்பைப் பெற்றுக் கொண்ட இந்நிகழ்வானது, வர்த்தகர்கள் மத்தியில் சர்வதேச வியாபாரம் பற்றி இருந்த பயத்தினை துடைத்து எறிந்ததோடு, குறுகிய வட்டத்திற்குள் முடங்கிக் கிடக்கும் தங்களது வியாபாரத்தை நாடளாவிய ரீதியில் விஸ்தரிப்பதற்காக ஒழுங்குபடுத்துவது எப்படி என்ற மிகச் சிறந்த வழிகாட்டல்களையும் வழங்கிச் செல்வதாக அமைந்திருந்தது.
குறிப்பிட்ட செயலமர்வில் பிரதான வளவாளர்களாகக் கலந்துகொண்ட டாக்டர் அஸீஸா ஜலாலுத்தீன் மற்றும் அய்யப்பா தாஸ் ஆகியோர்கள் சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட SHINE-GoGLOBAL வியாபார தொடர்பு மற்றும் மேம்படுத்தல் நிறுவனத்தின் ஊடாக உலகம் முழுக்கப் பயணித்து, பல்வேறுபட்ட தொழில் ஜாம்பவான்களை சந்தித்து ஒருவரோடு ஒருவரை இணைத்து அனைவரும் பயனடையக்கூடிய ECO-System என்ற புதுமையான வியாபாரமுறை ஒன்றை அறிமுகப்படுத்தி வருகின்றார்கள்.
ஒவ்வொரு இலங்கையரையும் பிஸியாக்க வேண்டுமென்ற தூரநோக்கு சிந்தனையோடு செயற்பட்டுவரும் கிழக்குமண்ணைத் தளமாகக் கொண்ட பிஸிலங்கா சமூக தொழில்முனைவு நிறுவனமும் அவர்களது முயற்சிகளோடு இணைந்துகொண்டு, நாட்டின் முதுகெலும்பாகத் திகழக்கூடிய வர்த்தக சமூகத்தை வளப்படுத்துவதற்கான முயற்சிகளை செய்துவருகின்றது.
அதனது மற்றுமொரு திட்டமாக, கிழக்குமண்ணிலிருந்து வேலையில்லாப் பிரச்சனைக்கான புதுமையான தீர்வாக, 1000 தொடக்கநிலை நிறுவனங்களை, 100 இளைஞர்களைக் கொண்டு இணைத்து, சுமார் 10,000 க்கு மேற்பட்ட வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் பிஸிலங்கா-2020 என்ற 5 ஆண்டுகால திட்டமும் இந் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது.
இருந்தபோதிலும், பிஸிலங்காவின் சமூகம்சார் நடவடிக்கைகளை கிழக்கிற்குள் மட்டும் முடக்கிக் கொள்ளாது, இலங்கையின் தலைநகரம், வடமாகாணம் உட்பட பல்வேறு பிரதேசங்களுக்கும் விஸ்தரிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் பல்வேறு தரப்பினருடனும் நடந்து வருவதாகவும், அதனை உறுதிப்படுத்தும் விதமாக எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் சுமார் 10 க்கு மேற்பட்ட நாடுகளிலிருந்து பல தொழிலதிபர்கள் கலந்துகொள்ளவுள்ள ஒரு வர்த்தக மாநாட்டினை கொழும்பில் நடாத்துவதற்குரிய ஒழுங்குகள் செய்யப்பட்டு வருவதாகவும் பிஸிலங்கா சமூக தொழில்முனைவு நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி, கே.எம்.மஸாஹிம் (மஸாகி) எமது பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்தார். மேலும் இப் பத்திரிகையாளர் நிகழ்வில்இ பிஸிலங்கா முகாமையாளர் ஏ.ஜி.எம்.பர்ஹான் மற்றும் சந்தைப்படுத்தல் முகாமையாளர் ஜே.எம்.பஹத் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.