யாழில் பல்வேறு பகுதிகளில் வாள்வெட்டு சம்பவங்களில் ஈடுபட்டு கடந்த ஒருவருடமாக தலைமறைவாக இருந்த இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவரிடம் இருந்து 2 வாள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர் ஆவா குழுவை சேர்ந்தவர். அண்மையில் யாழ்ப்பாணம் மானிப்பாய் மருதனார்மடம் போன்ற இடங்களில் நடைபெற்ற வாள்வெட்டுச் சம்பவங்கள் மற்றும் வீடுகள் மீதான தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்.
மேற்படி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொலிஸார் அவரை தேடி வலைவிரித்திருந்தனர். இந்த நிலையில் கடந்த ஒரு வருடமாக தலைமறைவாகியிருந்த சந்தேகநபர் தனங்களப்பு பகுதியிலுள்ள வீடொன்றில் மறைந்திருக்கின்றார் என்று யாழ்ப்பாணம் சிறப்புக் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவுக்கு தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் அந்தப் பிரிவுக்குப் பொறுப்பான ரஞ்சன் எதிரிசிங்க தலைமையிலான அணியினர் நேற்று நள்ளிரவு சந்தேகநபர் மறைந்திருந்த வீட்டைச் சுற்றிவளைத்தனர்.பொலிஸார் சுற்றிவளைத்ததை அறிந்த சந்தேகநபர் தப்பிக்க முயற்சித்த வேளை கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து வாள்கள் இரண்டு முகமூடிக் கப்புகள் மூன்றும் கைப்பற்றப்பட்டன.
சாவகச்சேரி சுன்னாகம் பொலிஸ் பிரிவுகளில் தலா 2 குற்றச்செயல்களிலும் மானிப்பாய் பொலிஸ் பிரிவில் 3 குற்றச்செயல்களிலும் சந்தேகநபருக்கு எதிராக வழக்குகள் உள்ளன.விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் வியாழக்கிழமை(7) மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.