வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம்; துரிதப்படுத்தும் வாய்ப்பு வரவு-செலவுத் திட்டத்தில்!-பைசல் காசிம் தெரிவிப்பு-


ட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தைத் துரிதப்படுத்துவதற்கான வாய்ப்பொன்றை 2019 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் வழங்கி இருப்பதாக சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற 2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்.அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்:
கௌரவ சபாநாயகர் அவர்களே 2019 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுவதற்கு எனக்கு வாய்ப்பளித்தமையையிட்டு நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். அதற்காக எனது நன்றிகளையும் நான் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

எமது நாட்டின் பொருளாதாரம் மிகவும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இருக்கின்ற ஒரு தருணத்தில்தான் இந்த வரவு செலவுத் திட்டம்சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.எதிர்காலத்தில் எமது நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும் நோக்கோடு பல காத்திரமான யோசனைகளை உள்ளடக்கி இந்த வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதையிட்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.
எமது ஆட்சி தற்காலிகமாக பறிக்கட்ட அந்த 52 நாட்களில் எமது நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான பின்னடைவு கண்டிருந்தது. அந்த நிலைமையின் காரணமாக வாழ்க்கைச் செலவினம் அதிகரித்திருந்தது. திரும்புகிற பக்கமெல்லாம் நேரடியாகவும் மறைமுகமாகவும் பொருட்களின் விலைகள் அதிகரித்திருந்தன. இந்த நிலைமைகள் அனைத்தையும் சரிசெய்யும் வகையில்தான் எமது நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களால் இன்று இந்த வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வரவு செலவுத் திட்டத்தை முழுமையாக படித்து பார்த்த பின்தான் நான் இங்கு இப்போது இது தொடர்பில் பேச வந்துள்ளேன். ஒரு சில குறைபாடுகள் இந்த வரவு-செலவுத் திட்டத்தில் இருக்கின்றபோதிலும் அதிகமாக நிறைவான விடயங்கள் காணப்படுகின்றன. இந்த நாட்டுக்கும் இந்த நாட்டு மக்களுக்கும் பயன் தரக்கூடிய தூர நோக்கத்துடன் தயாரிக்கப்பட்ட யோசனைகள் இதில் அதிகமாக இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

அவை அனைத்தையும் என்னால் இங்கு சுட்டிக்காட்ட முடியாதுள்ளபோதிலும் எனக்கு வழங்கப்பட்டுள்ள நேரத்தை பயன்படுத்தி ஒரு சில முக்கியமான யோசனைகளை மாத்திரம் சுட்டிக்காட்டலாம் என நினைக்கிறேன்.மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்கும் அந்தக் கல்வியின் ஊடாக சிறந்த புத்திஜீவிகளை உருவாக்குவதற்கும் நல்லபல யோசனைகள் இந்த வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளன.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருப்பது கல்விதான்.அந்தக் கல்வி சர்வதேச தரம் வாய்ந்ததாக இருக்கும்போதுதான் இந்த நாட்டை பொருளாதாரரீதியில் முன்னேற்ற முடியும்.அந்த வகையில்,அனைவரும் கல்வியை அடைந்துகொள்ளும் வகையிலும் சர்வதேச தரத்திலான கல்வியைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலும் பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
அவற்றுள் முக்கியமானதுதான் கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் அதிகூடிய திறமைகளைக் காட்டும் மாணவர்கள் ஒக்ஸ்போர்ட்,ஹவார்ட்,கேம்ப்ரிட்ஜ் மற்றும் எம்.ஐ.டி போன்ற பல்கலைகழகங்களில் படிப்பைத் தொடர்வதற்கான ஏற்பாடு ஒன்றைச் செய்துள்ளமை.
அந்த மாணவர்கள் படித்து முடித்துவிட்டு இலங்கையில் 15 வருடங்கள் கட்டாயம் பணிபுரிய வேண்டும் என்றொரு நிபந்தனையையும் அரசு விதிக்கின்றது.இதன் மூலம் சர்வதேச தரம் வாய்ந்த கல்வியைப் பெற்றுக் கொடுப்பதோடு நின்றுவிடாது அந்தக் கல்வியைப் பெற்றவர்களிடம் இருந்து குறிப்பிட்ட காலம் இந்த நாட்டுக்கு சேவையைப் பெற்றுக் கொடுக்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
உண்மையில்,அரச செலவில் வெளிநாடுகளில் கல்வியைக் கல்வியைப் பெற்றுக்கொள்ளும் அதிகமானவர்கள் அந்தக் கல்வியைக் கொண்டு தனது நாட்டுக்கு சேவையாற்றாமல் வெளிநாடுகளிலேயே தங்கி அந்த நாடுகளுக்கே சேவையாற்றுகின்றனர்.இதனால் எமது நாட்டின் முன்னேற்றம்தான் பாதிக்கப்படுகின்றது.
குறிப்பாக,வைத்திய துறையில் இவ்வாறான பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றோம்.நான் சுகாதார இராஜாங்க அமைச்சராக இருப்பதால் இதில் உள்ள சிக்கலை நான் அறிவேன்.இவ்வாறு எல்லாத் துறையிலும் புலமைப் பரிசில் பெற்றுக்கொண்டு வெளிநாடுகளுக்கு படிக்கச் செல்லும் அதிகமானவர்கள் நாட்டுக்குத் திரும்பி வருவதில்லை.

இதனால்,எமது நாடு மேலும் மேலும் பின்னோக்கியே செல்கின்றது.அந்த நிலை தொடர்ந்தும் நாட்டுக்கு ஏற்படக்கூடாது என்பதற்காகவே அரசு இப்போது இந்த வரவு-செலவுத் திட்டத்தின் ஊடாக மேற்படி ஏற்பாட்டை செய்துள்ளது.
இது எமது கல்வித் துறையில் பாரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.அந்த முன்னேற்றம் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தும்;நாட்டை அபிவிருத்தி அட்டையைச் செய்யும்.
அது மாத்திரமன்றி,பல்கலைக்கழகம் புகும் வாய்ப்பை இழந்த மாணவர்கள் தனியார் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பைத் தொடர்வதற்காக வட்டியற்ற கடன் திட்டம் ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளது.ஒரு மாணவன் 1.1மில்லியன் ரூபா வரை கடனைப் பெற முடியும்.கடன் பெற்று இரண்டு வருடங்களின் பின்பே அதை மீளச் செலுத்த வேண்டும்.12 வருடங்களில் செலுத்தி முடிக்கலாம்.
இந்தத் திட்டம் எல்லாம் எதிர்காலத்தில் கல்வியில் பெரும் புரட்சியை-மாற்றத்தை-பாரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.இவ்வாறான நல்ல திட்டங்களை கொண்டு வந்திருக்கும் இந்த வரவு-செலவுத் திட்டத்தை ஆதரிக்காமல் இருக்க முடியாது.
மேலும்,ஆரம்பப் பாடசாலைகளில் மாணவர்களுக்கு இலவசமாக பால் வழங்குவதற்கு எமது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.அதற்காக ஆயிரம் மில்லியன் ரூபா நிதியை இந்த வரவு -செலவுத் திட்டத்தில் ஒதுக்கியுள்ளது.இது ஆரோக்கியமான மாணவ சமூதாயத்தை உருவாக்குவதற்கு உதவும்.
அடுத்ததாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களின் பிரச்சினை. யுத்தம் முடிந்ததிலிருந்து அவர்களின் வாழ்வில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதை நாம் அறிவோம். அவர்களின் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே நாம் பல அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.
அந்த வகையில் இந்த வரவு செலவுத் திட்டத்திலும் அந்த மக்கள் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அவர்களுக்கு நல்லதோர் எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பதற்காக பல யோசனைகள் இந்த வரவு-செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன அவர்களின் தொழில் பிரச்சினை, வீடில்லா பிரச்சினை உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த வரவு செலவுத் திட்டம் நல்லதொரு தீர்வை கொண்டு வந்திருக்கின்றது.

குறிப்பாக,யுத்தம் முடிவுற்று வடக்கு மக்களின் வாழ்வு இயல்புக்குத் திரும்பி வருகின்றபோதிலும்,யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு முஸ்லிம்களின் வாழ்வில் போதுமான முன்னேற்றம் ஏற்படவில்லை.மீள்குடியேற்றம் தொடர்ந்தும் தடைகளையே சந்தித்து வருகின்றது.

அந்தத் தடைகளைத் தகர்த்து அவர்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் இந்த வரவு-செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளன.இது வடக்கு முஸ்லிம்களுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பாகும்.
இந்த வரவு-செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டதும் அவர்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துவது தொடர்பில் எடுக்க வேண்டிய அணைத்து நடவடிக்கைகளையும் நாம் எடுப்போம்.
போரால் பாதிக்கப்பட்ட வடக்கு-கிழக்கில் வேலையில்லா பிரச்சினை பெரும் பிரச்சினையாக உள்ளது.அரச துறைகளில் குறிப்பிட்ட அளவு தொழில் வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் இந்தப் பிரச்சினைக்குத் முழுமையான தீர்வைக்கான முடியாது.புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலமே இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியும்.

அதன் அடிப்படையில் அங்கு தொழில் பேட்டைகளை அமைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.வடக்கில் காங்கேசன்துறை,மாந்தை கிழக்கு,பரந்தன்,கொன்டாச்சி ஆகிய இடங்களிலும் கிழக்கில் கிண்ணியா ,சம்மாந்துறை மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களிலும் தொழில்பேட்டைகள் உருவாக்கப்படவுள்ளன.இதற்காக 1000 மில்லியன் ரூபாய் இந்த வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் வெற்றி பெரும் பட்சத்தில் வடக்கு-கிழக்கு பொருளாதாரத்தில் பெரும் முன்னேற்றத்தைக் காணும்.வேலையில்லா பிரச்சினைகள் குறைந்துவிடும்.இது அரசின் தூரநோக்கமுள்ள திட்டமாகும்.இந்தப் பாரிய திட்டம் வெற்றிபெறுவதற்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
அத்தோடு,அந்த மாகாணங்களில் வீடில்லா பிரச்சினையும் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.இதற்கு உரிய தீர்வைக் காணும் நோக்கில் சிறந்த யோசனை ஒன்றை அரசு இதில் முன்வைத்துள்ளது.

வடக்கு-கிழக்கில் 15 ஆயிரம் கல் வீடுகளை நிர்மாணிப்பதற்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள 4,500 மில்லியன் ரூபாவுக்கு மேலதிகமாக 5,500 மில்லியன் ரூபாவை அரசு வரவு-செலவுத் திட்டத்தின் ஊடாக ஒதுக்கி இருப்பதானது அந்த மாகாணங்களில் வீடில்லா பிரச்சினையை முற்றாக தீர்த்து வைக்கும் அரசின் அர்ப்பணிப்பைக் காட்டுகின்றது.
மேலும்,வடக்கு-கிழக்கில் பகுதியளவு நிர்மாணிக்கப்பட்ட அல்லது அழிவுற்ற வீடுகளை பூரணப்படுத்துவதற்கும் ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு நீர் மற்றும் மின்சாரம் ஆகியவற்றை வழங்குவதற்கும் 2000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி,வெளிநாடுகளில் கஷ்டப்பட்டு உழைக்கின்ற எமது மக்கள் துரித கதியில் வீடுகளை அமைத்துக்கொள்வதற்கும் எமது அரசு இப்போது வாய்ப்பு ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
இன்று எமது மக்கள் அநேகமாக,அவர்களுக்கென சொந்தமாக வீடு ஒன்றை அமைத்துக்கொள்வதற்காகவேதான் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்.அவ்வாறானவர்களின் கனவை நிறைவேற்றுவதற்கு அரசு இப்போது முன்வந்துள்ளது.
அவர்கள் வீடுகளை அமைத்துக்கொள்வதற்காக '' கனவு மாளிகை '' எனும் சலுகைக் கடன் திட்டம் ஒன்றை அரசு அறிமுகப்படுத்தவுள்ளது.இத்திட்டத்தின் ஊடாக 15 வருடங்களில் திரும்பிச் செலுத்தக்கூடிய வகையில் 10 மில்லியன் ரூபா வரை கடன் பெற முடியும்.

இந்த நாட்டுக்கு அந்நிய செலாவணியை அதிகம் பெற்றுத் தருகின்ற இந்தத் தொழிலாளர்களின் கனவை வெகு சீக்கிரத்தில் நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் இப்படியான திட்டம் ஒன்றை அரசு அறிமுகப்படுத்துவதை பாராட்டாமல் இருக்க முடியாது.இதனால் எமது மக்கள் அதிக நன்மை அடைவர்.
மாற்றுத் திறனாளிகளின் நலனைக்கூட எமது அரசு மறுக்கவில்லை.அவர்களுக்கு மாதாந்தம் வழங்கப்பட்டு வரும் 3 ஆயிரம் ரூபா கொடுப்பனவு இந்த பட்ஜெட்டின் ஊடாக 5 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.இந்த ஏற்பாடு அவர்களின் வாழ்க்கைச் சுமையை ஓரளவு இறக்கி வைப்பதற்கு உதவுகிறது.
அது மாத்திரமன்றி மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் வழங்கும் ஓர் ஏற்பாட்டையும் இந்த அரசு செய்துள்ளது.ஒரு நிறுவனம் குறைந்தது 5 மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் வழங்குமாக இருந்தால் ஒரு நபருக்கு 50 வீத சம்பள மானியம் அரசால் வழங்கப்படும்.அதன்படி ஒருவருக்கு ஆகக்கூடியது 15 ஆயிரம் ரூபா வீதம் 24 மாதங்களுக்கு வழங்கப்படும்.

இவ்வாறு நாட்டின் எல்லாத் துறைகளையும் முன்னேற்றுவதற்கு அரசு இந்த வரவு-செலவுத் திட்டத்தில் நடவடிக்கை எடுத்திருப்பதுபோல் சுகாதாரத் துறையை முன்னேற்றுவதற்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

சுகாதாரத் துறையில் உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவதற்காக 24 ஆயிரத்து 750 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.புதிய உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கும் வைத்தியசாலை கட்டடங்களை புனரமைப்பதற்கும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்கும் இந்த நிதி செலவிடப்படும்.
மேலும், 'சுவசெரிய' அம்பியூலன்ஸ் சேவையை நாடு பூராகவும் விஸ்தரிப்பதற்கும் நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.சிறுநீரக நோயைக் குணப்படுத்துவதற்கான வளங்களை பெற்றுக்கொடுப்பதற்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் வீடுகளுக்கு இரத்த ஒழுக்கு -பிரிப்பு இயந்திரங்கள் வழங்கப்படுவதோடு 45 வைத்தியசாலைகளில் இரத்த ஒழுக்கு-பிரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.
வீடு வீடாகச் சென்று சிறுநீரக நோயைக் கண்டறிவதற்கான பரிசோதனையை மேற்கொள்வதற்கு 50 மில்லியன் ரூபாவும் விசர் நாய்க்கடி நோயைக் கட்டுப்படுத்துவதற்கு 100 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள 21 ஆயிரம் தீராத சிறுநீரக நோயாளிகளுக்கு தலா 5 ஆயிரம் ரூபா வீதம் உதவித் தொகை வழங்கப்படும்.மேலும்,5 ஆயிரம் நோயாளிகள் இந்தத் திட்டத்துக்குள் உள்வாங்கப்படுவர்.இதற்காக 1840 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த ஏற்பாடானது இந்த வகை நோயாளிகளுக்கு பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது.
அனைவரும் ஆரோக்கியத்துடன் வாழவேண்டும்.சிறந்த சுகாதார சேவையை வழங்க வேண்டும் என்பதற்காகவே நாம் சிகரெட் ஒன்றின் விலையை ஐந்து ரூபாவால் அதிகரித்து பீடி இலைகளின் இறக்குமதி வரியை 2 ஆயிரத்து 500 ரூபாயில் இருந்து 3 ஆயிரத்து 500 ரூபாவாக உயர்த்தியுள்ளோம்.இதனால் புகைத்தல் மேலும் குறைவடையும்.ஆரோக்கியமான சமூகம் உருவாகும்.

கௌரவ சபாநாயகர் அவர்களே! நாட்டில் உள்ள பல முக்கிய நகரங்களை புனரமைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.அந்த வகையில் வடக்கு-கிழக்கில் கல்முனை,சம்மாந்துறை,வாழைச்சேனை மற்றும் தலைமன்னார் ஆகிய நகரங்களை அபிவிருத்தி செய்வதற்கும் இந்த வரவு-செலவுத் திட்டம் மூலம் ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
இவ்வாறு இன்னும் பல யோசனைகள் இந்த வரவு-செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தையும் இங்கு குறிப்பிட முடியாது போயுள்ளது. இருந்தாலும் கட்சி பேதங்களுக்கு அப்பால் நாட்டின் நலன் கருதி இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு உங்களின் ஆதரவை வழங்குமாறு அனைத்து கட்சிகளிடமும் நான் வேண்டுகோள் விடுத்து எனது இந்த உரையை நிறைவு செய்து கொள்கின்றேன். நன்றி.-என்றார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -