ஜனாதிபதியின் பதவிக்கால முடிவு தெரிவுசெய்யப்பட்டதிலிருந்து ஐந்து வருடமா? அல்லது 19 அமுலுக்கு வந்ததிலிருந்து ஐந்து வருடமா?


வை எல் எஸ் ஹமீட் -
னாதிபதி கடந்த 2015 ஜனவரி 8 ம் திகதி தெரிவுசெய்யப்பட்டார். அப்பொழுது அவரது பதவிக்காலம் ஆறு வருடமாக இருந்தது. 19 வது திருத்தத்தினூடாக அது ஐந்து வருடமாக குறைக்கப்பட்டது.

அரசியலமைப்பு சட்டம் எப்போதும் prospective -முன்னோக்கியது; அதாவது அது அமுலுக்கு வந்த காலத்திலிருந்து எதிர்காலத்திற்கே பொருந்தும்; அது retrospective- அது பின்னோக்கியதல்ல; என்பது பொதுவான கோட்பாடு.

இதனடிப்படையில் 19 அமுலுக்கு வரமுன் ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட்டுவிட்டார். மக்களும் ஆறு வருடங்களுக்கு ஆணை வழங்கிவிட்டனர். எனவே, புதிய திருத்தம் இந்த ஜனாதிபதிக்குப் பொருந்துமா? என அறிவதற்காக ஜனாதிபதி உயர்நீதிமன்றை நாடினார்.

உயர்நீதிமன்றம் “ஆம், பொருந்தும். பதவிக்காலம் ஐந்து வருடமே” என பதிலளித்தது. உயர்நீதிமன்றம் பல சந்தர்ப்பங்களில் தெளிவுபடுத்திய நிலைப்பாடு, மக்கள் ஆணை வழங்கிய காலப்பகுதியைக் குறைப்பதில் பிரச்சினையில்லை; ஏனெனில் அவர்கள் மீண்டும் ஆணைவழங்கிய அதே மக்களிடமே செல்கிறார்கள். ஆனால் மக்களின் அனுமதியை சர்வஜன வாக்கெடுப்பினூடாகப் பெறாமல் அனுமதி வழங்கிய காலப்பகுதிக்குமேல் நீட்டமுடியாது; என்பதாகும்.
அதேபோல் இந்த திருத்தம் இந்த ஜனாதிபதியையும் உள்ளடக்குகின்றது; என்ற அடிப்படையில் ஐந்து வருடம் என்பது இந்த ஜனாதிபதிக்கும் பொருந்தும் என்பதாகும்.
இந்நிலையில் ஐந்து வருடம் என்பதைக் கேள்விக்குட்படுத்த முடியாது; என்பதைப் புரிந்துகொண்ட ஜனாதிபதித் தரப்பு, இந்த ஐந்து வருடம் என்பது எப்போதிருந்து ஆரம்பிக்கின்றது; என்றொரு கேள்வியை எழுப்ப முடியாதா? என சிந்திக்கின்றது.
இங்கும் அரசியலமைப்பு சட்டம் prospective - முன்னோக்கியதே தவிர, retrospective- பின்னோக்கியதல்ல, எனவே, புதிதாக அமுலுக்கு கொண்டுவரப்பட்ட “ ஐந்து வருடம்” என்பது திருத்தம் அமுலுக்கு வந்ததிலிருந்துதானே ஆரம்பிக்க வேண்டும். என்ற ஒரு வாதத்தை முன்வைக்க முற்படுவதுபோல் தெரிகிறது.
மேலோட்டமாக பார்க்கும்போது அவ்வாதம் நியாயமாகவே படுகிறது. ஆனால் 19 வது திருத்தம் என்பது அரசியலமைப்புக்கு கொண்டுவரப்பட்டதாகும். எனவே, அத்திருத்தம் என்ன சொல்கின்றது; என்பதே இங்கு எழுகின்ற கேள்வியாகும்.
சரத்து 30(2), ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடம் என்கிறது. சரத்து 31(3)(d)(ii), ஜனாதிபதியின் பதவிக்காலம் தேர்தல் முடிவுகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதிலிருந்து ஆரம்பிப்பதாக குறிப்பிடுகின்றது. (அதாவது 2015 ஜனவரி 9ம் திகதி.)
இங்கு எழுகின்ற கேள்வி, “ தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட திகதி என்பது இத்திருத்தம் அமுலுக்கு வந்ததன்பின் நடக்கப்போகின்ற ஜனாதிபதித் தேர்தலுக்குப் பொருந்தும்; திருத்தத்திற்குமுன் நடைபெற்ற தேர்தலுக்கு prospective ஆன அரசியலமைப்பின் சரத்து எவ்வாறு பொருந்தும்”? என்பதாகும். இதுவும் வலுவான கேள்விதான். அவ்வாறானால் இதற்குரிய விடை என்ன?

இதற்குரிய விடை 19வது திருத்தத்தின் Transitional provisions ( தற்காலிக சரத்துக்கள்) இல் இருக்கிறது. அதாவது S 49(1)(b) இதற்கு விடை தருகிறது. அது சுருக்கமாக பின்வருமாறு கூறுகின்றது.
அதாவது, 2015, ஏப்ரல் 22ம் திகதிக்கு முன்னர் பதவியில் இருந்த ஜனாதிபதியும் பிரதமரும் பதவியில் தொடர்வார்கள் திருத்தப்பட்ட அரசியலமைப்பின் சரத்துகளுக்கமைய.

அதன்பிரகாரம் பாராளுமன்றம் கலைந்தவுடன் பிரதமரின் பதவிக்காலம் முடிந்து பின்னர் அவர் புதிய பிரதமராக பதவியேற்றார். ஆனால் ஜனாதிபதி ஏப்ரல் 22, 2015 இற்கு முன் பதவி வகித்த அதே ஜனாதிபதியாகவே பதவியில் தொடர்கிறார். அந்த ஜனாதிபதிக்கு, மேலே குறிப்பிட்டதுபோல் இந்த இடைக்கால சரத்தின்படி இந்தத் திருத்தம் பொருந்தும்.

அதாவது, மீண்டும் தெளிவுக்காக, மேற்குறிப்பிட்ட இடைக்கால சரத்து, 2015 ஏப்ரல் 22 இற்கு முன் பதவி வகித்த ஜனாதிபதி அரசியலமைப்பின் திருத்தங்களுக்கமைய பதவியில் தொடரலாம் எனக்கூறுகிறது.

எனவே, 19வது திருத்தம் ஜனாதிபதிக்கு செல்லுபடியாகின்றது. இது prospective, retrospective என்ற பதங்களுடன் தொடர்புபடவில்லை. நேரடியாக தற்காலிக ஏற்பாட்டின் சரத்தின் வியாக்கியானத்தோடுதான் தொடர்பு பட்டிருக்கின்றது.

அந்த அடிப்படையில் மேல கூறப்பட்ட “ ஜனாதிபதியின் பதவிக்காலம் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட திகதியிலிருந்து ஆரம்பிக்கின்றது” என்பது எதிர்கால ஜனாதிபதிகளுக்கு மாத்திரமல்ல, இந்த ஜனாதிபதிக்கும் பொருந்தும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -