இன்று இஸ்லாமியர்களில் பெரும்பாலானோர் இந்த மிலேச்சத்தனமான சிந்தனைகளையும் செயற்பாடுகளையும் முழுமையாக எதிர்க்கிறார்கள். அது உண்மைதான் ஆனால் இது தொடருமா என்பது இச்சமூகத்தினர் மீது ஏனையா சமூகத்தின் பார்வையிலும் செயற்பாட்டிலும் தங்கி உள்ளது என்பதே சத்தியம்.
இலங்கையில் உள்ள ஜமியத்துள் உலாமா அமைப்பு உடனடியாக ஒரு அறிவித்தல் விட வேண்டும். நாடாளவிய ரீதியில் இருக்கும் அனைத்துப் பள்ளிவாசல்களிலும் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பின்னர் ஒரு அமைதியான கண்ட கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற வேண்டும். இது தொடர்ச்சியாக ஒவ்வொரு கிழமையும் இடம்பெற வேண்டும். இதில் இந்த தீவிரவாத அனைத்து அமைப்புக்களையும் தடைசெய்ய வேண்டும் (நீங்களே பட்டியல்படுத்துங்கள்) அடுத்து உடனடியாக அனைத்து தீவிரவாத சக்திகளையும் வேரோடு அழியுங்கள் என்ற கோஷத்தினை முன்வையுங்கள்.
ஆம் இந்தக் கோஷம் எல்லாம் இப்போது ஆராம்பிக்கப்படு உள்ளது தான். ஆனால் எங்கு ? தடை செய்யப்பட்டு உள்ள சமூக வலைத்தளத்திலும் மற்றும் ஒரு சில குளுக்களாலும் தான். நான் சொல்லுவது இந்தக் கோஷம் தேசிய ரீதியில் முஸ்லிம் மக்களால் அந்தந்தப் பள்ளிவாசலுக்கு முன் செய்யப்பட வேண்டும். ஓம் இதனால் என்ன நடக்கும் என்று தான் கேட்கிறீர்கள்?
இன்று ஏனைய இனங்கள் தேவையற்று முஸ்லிம் மக்கள் மீது ஒரு காழ்ப்புணர்ச்சியையும் நம்பிக்கையற்ற தன்மையையும் உணர்கிறார்கள். இதனால் இது ஒரு வன்முறையாக வளரும் என்பதில் ஐய்யமில்ல. 1915 கலவரத்தினை மறந்துவிட வேண்டாம். ஏன் அதற்கு பிறகு இலங்கையில் இருந்த வரலாறும் எமக்கு எல்லோருக்கும் தெரியும். ஆக இவ்வாறு இலங்கை பூராகவும் உள்ள பள்ளிவாசல்களில் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை செய்வதனூடாக மற்ற சமூகங்கள் இப்போது முஸ்லிம் சமூகத்தின் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட முடியாத சூழ்நிலை உருவாகும். ஏனெனில் இந்த இலங்கை பூராகவும் தொடர்ந்து இடம்பெறும் இந்த போராட்டம் இலங்கையினதும் சர்வதேசத்தினதும் கவனத்தை ஈர்க்கும். இதனால் அரசாங்கம் இந்தப் போராட்டத்திற்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும்.
ஒருபக்கத்தில் ஏனைய சமூகம் முஸ்லிம்கள் இந்த தீவிரவாதத்திற்கு முற்றாக எதிர்க்கிறார்கள். அதுவும் இஸ்லாமிய வணக்க ஸ்தலங்களின் முன்னிருந்து இதனைச் செய்கிறார்கள் என்ற எண்ணத்தை அவர்களுக்குள் உருவாக்கும். இதனால் வன்முறைகளை முஸ்லிம் மக்களின் மீது கட்டவிழ்த்து விட முடியாத சூழல் உருவாகும். மறுபக்கத்தில் சர்வதேசமும் அரசாங்கமும் இவ்வாறு குரல்கொடுக்கும் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய தார்மீக நிலையில் இருப்பார்கள்.
இதன் விளைவாக இந்த தீவிரவாத சக்திகளுக்கு தங்கள் திட்டங்களை மக்கள்மயப்படுத்த முடியாமல் தடுக்கப்படும். ஏனெனில் இன்று 5% ஆக இருக்கும் இந்த தீவிரவாத சிந்தனை அதிகரிக்க வேண்டும் என்றால் இந்த சமூகம் இன்னும் மத ரீதியாகவும் இன ரீதியாகவும் அச்சுறுத்தலுக்கும் ஒடுக்குதலுக்கும் உள்படுத்தப்பட வேண்டும். ஆனால் இப்பொழுது இருக்கும் நிலைமை தொடர்ந்தால் அதிகரிக்கப்படக் கூடிய நிலைமை உருவாகலாம். இந்த தீவிரவாதம் ஏற்பட காரணம் வேறாக இருக்கலாம் ஆனால் ஒரு இனம் அல்லது மதம் ஓரம்கட்டுப்படுத்தப்படும் போது அது தீவிரவாத போராட்டமாக வேறுவடிவில் பரிணாமம் எடுக்கும். இதுவே உண்மை.
இதனை தடுக்கவே நான் இந்த வழிமுறையை செய்ய வேண்டும். அதனை இலங்கையில் உள்ள ஜமியத்துள் உலாமா அமைப்பு உடனடியாக செயற்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கிறேன்.
ஒரு தமிழனாக பிறந்ததில் இருந்து யுத்தத்தை மத்திரம் பார்த்து வளர்ந்தவன் என்ற அடிப்படையில் அனுபவத்தில் சொல்கிறேன் நான் கூறிய மேற்கொண்ட தீர்வை உடனடியாக செயற்படுத்தாமல் விட்டால் இந்த நிலைமை இன்னும் தீவிரம் அடையுமே ஒழிய முடிவுறாது. தீவரவாதம் எண்ணத்தினால் தான் அழிக்கப்பட்ட வேண்டியது ஆயுதத்தால் அல்ல.
வி.ஜனகன்
பிரதான அமைப்பாளர்
தமிழர் முன்னேற்றக் கழகம்.