நாட்டிலுள்ள இன்றைய அசாதாரண சூழ்நிலையில், மினுவாங்கொடை பிரதேச மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு, பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம் தேவை. இதற்காக, பள்ளிவாசல்களின் தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், உலமாக்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அனைத்துப் பொதுமக்களும், பொலிஸாருக்கும் பாதுகாப்புத் தரப்பினருக்கும் ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும் என, மினுவாங்கொடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அஜித் பிரியந்த கேட்டுக்கொண்டார்.
மினுவாங்கொடை பிரதேச மக்களின் பாதுகாப்பையும் சமாதான சக வாழ்வையும் உறுதி செய்யும் நோக்கில், பள்ளிவாசல்கள் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, ஏனைய பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர்கள் ஆகியோருடனான கலந்துரையாடலின்போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் இங்கு கருத்துத் தெரிவிக்கும்போது,
பொதுமக்களை எந்நேரமும் விழிப்பாக இருக்குமாறு, பள்ளிவாசல்கள் ஊடாக அறிவுறுத்த வேண்டும் என்பதோடு, நகருக்கு வரும் புதியவர்களையும், புதிய வாகனங்களையும் இனங்கண்டு, அவர்களையும் அவற்றையும் எப்பொழுதும் கண்காணிக்க வேண்டும்.
எனவே, சந்தேகத்திற்குரியவர்கள், சந்தேகத்திற்கு இடமான வாகனங்கள் மற்றும் பொதிகள் தொடர்பாக மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். அத்துடன், இவைபற்றி உடனடியாக பொலிஸாருக்கும் அறிவிக்க வேண்டும்.
இதுதவிர, வீடுகள், வாகனங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் போன்றவற்றை வாடகைக்கு விடும்போது, மிகவும் அவதானமாகவும் விழிப்புடனும் செயற்பட வேண்டும் என்றார்.