குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படும் கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்களில், எதிர்வரும் மே மாதம் வரையில் தங்கு தடை இன்றி நீரை விநியோகிக்க முடியும் என, அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலைய மேலதிகாரி பியல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
களுகங்கையின் நீர்மட்டம் கணிசமான அளவு குறைந்துள்ளது. இதன் காரணமாக பிரதேச நீர் வளங்களில் உவர் நீர் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தடுப்பதற்காக மண் மூடைகள் மூலம் அணைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
தாழ் நிலப் பிரதேசங்களில் குடிநீர் விநியோகம் முறையாக இடம்பெற்றாலும், உயரமான இடங்களுக்கு நீரை விநியோகிப்பதில் பிரச்சினைகள் உள்ளன. ஆனாலும், கொழும்பிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் நீர் வெட்டு எக்காரணங்கொண்டும் அமுலாக்கப்பட மாட்டாது என்றும் பியல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, களுகங்கையிலிருந்து நீர் விநியோகிக்கப்படும் பிரதேசங்களில் எதுவிதப் பிரச்சினைகளுமில்லை என, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தெற்குப் பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொது முகாமையாளர் கிரிஷான் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
களுகங்கையின் தாழ்நிலப் பிரதேசங்களில் நேற்று முன்தினம் முதல் கடல் நீர் கலக்கிறது. இதன் காரணமாக, சில இடங்களில் பௌசர்கள் மூலம் நீரை விநியோகித்து வருவதாகவும், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் முகாமையாளர் பியல் ராஜபக்ஷ மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.