மக்களின் வாழ்வில் புது வசந்தம் வீச சித்திரைப் புத்தாண்டை வரவேற்போம்!


தொ. தே. சங்கத் தலைவர் அமைச்சர் பி. திகாம்பரம் வாழ்த்துச் செய்தி
தேர்தலுக்கான முஸ்தீபுகள் இடம்பெற்று வருகின்ற நேரத்தில் சித்திரைப் புத்தாண்டு மலர்ந்துள்ளது. வரவு செலவுத் திட்டத்தை தோற்கடித்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம் என எதிரணியினர் கங்கணம் கட்டிக் கொண்டிருந்த வேளையில் அரசாங்கம் வெற்றி வாகை சூடியுள்ள நிலையில் புத்தாண்டை மக்கள் வரவேற்கக் காத்திருக்கின்றார்கள். அரசியல் நெருக்கடிகள் தீர்ந்து புத்தாண்டை வரவேற்பது போல, தேர்தலுக்கு முகங் கொடுக்கவும் மக்கள் தயாராக இருக்க வேண்டும். அதற்காக அவர்களது வாழ்வில் புது வசந்தம் வீச வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பி. திகாம்பரம் விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தமது செய்தியில்,
நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே நாட்டில் குழப்பகரமான சூழ்நிலையை ஏற்படுத்தும் கைங்கரியத்தில் ஒரு சாரார் ஈடுபட்டு வந்துள்ளார்கள். அவர்களின் பல்வேறு போராட்டங்கள், சூழ்ச்சிகள் அனைத்தையும் கடந்து அரசாங்கம் நான்காவது ஆண்டில் பவனி வந்து கொண்டிருகின்றது. காலம் கனியும் போது தேர்தல்கள் நடத்தப்படும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருகின்றது. அதேநேரம், இந்த ஆண்டில் முக்கியமான தேர்தலை நடத்தக் கூடிய அறிகுறிகளும் தென்படுகின்றன.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் 25 ஆயிரம் வீடுகளைக் கட்டி முடித்து விட வேண்டும் என்ற துடிப்போடு எமது அமைச்சு செயற்பட்டு வருகின்றது. மலையகத்தில் தமக்கு சொந்தமான வீடுகள் தேவை என்பதை மக்கள் உணரத் தொடங்கியுள்ளார்கள். அதற்கான தேவையும் அதிகரித்து வருகின்றது. இது எமது அரசியல் செயற்பாட்டின் ஊடாக எமக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றியும் ஆகும். கடந்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு பண்டிகையின் போதும் மக்களுக்கு சுபிட்சம் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்து வந்துள்ளோம்.

அந்த வகையில் இந்த ஆண்டில் நடைபெறவுள்ள தேர்தல் ஊடாக நாட்டு மக்கள் அனைவருக்கும் குறிப்பாக மலையக மக்களுக்கு நம்பிக்கை மிக்க எதிர்காலமும், பொருளாதாரம் மற்றும் கல்வி, சுகாதாரம் முதலான துறைகளில் முன்னேற்றமும் ஏற்பட மலரும் புத்தாண்டில் உறுதி பூணுவோம் என்று வாழ்த்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -