பல்லின சமூகங்கள் வாழுகின்ற எமது இலங்கைத் திருநாட்டின் இன்றைய இந்த இழிநிலைக்கு பல காரணங்களை சொல்லக்கூடியதாக இருந்தாலும், அவற்றை இனி அலசுவதில் அர்த்தமில்லை. எனினும் அவற்றை ஒரு பாடமாகக் கொண்டு இனிவரும் காலத்தை எவ்வாறு சுமுகமாகக் கொண்டு செல்வது என்பது பற்றியே அதிகூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும். இதுவே காலத்தின் கட்டாயத் தேவையாகவும் உள்ளது.
சந்தேகப்பார்வை விலக்கப்பட வேண்டும்:
-------------------------------------
விரும்பியோ விரும்பாமலோ, திட்டமிட்டோ திட்டமிடப்படாமலோ இன்று இனங்களுக்கிடையிலும் சமூகங்களுக்கிடையிலும் சந்தேகப்பார்வை விதைக்கப்பட்டுவிட்டது. அதிலும் குறிப்பாக ஒரு நாட்டின் பெறுமதியான வளங்களுள் ஒன்றான இளம் சமுதாயத்தினர் மத்தியில் இந்த விஷக்கருத்துகள் பரப்பப்பட்டுள்ளன.
இந்த விடயம் இந்த சந்தர்ப்பத்திலாவது எல்லோராலும் உணரப்பட்டு, களையப்படவில்லையெனில் எதிர்காலம் இன்னும் கேள்விக்குறியாகிவிடும்.
இந்தத் தவறு திருத்தப்பட்டு இனங்களுக்கெதிரான சந்தேகப்பார்வை களையப்பட வேண்டுமானால், எல்லோரும் ஒருமித்து ஒன்றுபட்டு செயற்பட்டாக வேண்டும். அப்போது தான் எமது இலங்கை நாடானது ஏனைய உலக நாடுகளுக்கோர் முன்மாதிரியாகத் திகழ்வதுடன், வளமான எதிர்காலத்தை நோக்கியும் பயணிக்கும்.
சந்தேகப்பார்வையைக் களைவதெப்படி
------------------------------------
தமிழ் சிங்கள இனங்களுக்கிடையிலான சந்தேகப்பார்வையே எமது நாட்டை மூன்று தசாப்த காலமாக உலுக்கிய பயங்கரவாதப் போரின் வெளிப்பாடு என்பதும், முஸ்லிம் சிங்கள இனங்களுக்கிடையிலான சந்தேகப்பார்வையே அவ்வப்போது ஏற்பட்ட கலவரங்களுக்கும் தற்போதைய பயங்கரவாதப் பிரச்சினைக்கும் அடிப்படைக் காரணம் என்பதும் நடுநிலை ஆய்வாளர்களின் கணிப்பாகும்.
இந்த சந்தேகப்பார்வைகளைக் களைவது தான் அடுத்துள்ள தலையாய கடமையாகவுள்ளது. அரசியல்வாதிகள் அவர்களின் சுயநலத்திற்காகவே செயற்படுகின்றவர்கள். அவர்கள் தமது அரசியல் இருப்பைத் தக்கவைக்கவே முயற்சிப்பார்கள். அதற்காக, இனங்களுக்கிடையிலான சந்தேகப்பார்வையைக் கூட அவர்களுக்கு சாதகமாக்கவே முயயற்சிக்கிறார்கள்.
ஆதலினால், இனங்களுக்கிடையிலான சந்தேகப்பார்வையைக் களைவதற்கு முழுமையாக அரசியல்வாதிகளில் தங்கியிராமல், சகல இனங்களையும் சேர்ந்த மார்க்கப் பெரியார்கள் ஒரு புள்ளியில் சங்கமிக்க வேண்டும். அந்த சங்கமிப்பின் தாக்கம் அடிமட்ட பாமர மக்கள் வரை தாக்கம் செலுத்தவேண்டும். அதனூடாக சகல இன மக்களும் ஒரு புள்ளியில் சங்கமித்தவர்களாக மாற்றப்பட வேண்டும்.
மதத்தலைவர்கள் இணைத்தலைமகள்
-----------------------------------
இனங்களுக்கிடையிலான சந்தேகப்பார்வையைக் களைவதற்கு அடிப்படையாக முதலில் உயர் நிலையிலுள்ள மார்க்கப் பெரியார்கள் அல்லது பொறுப்பாளர்களுக்கிடையில் பரஸ்பர புரிந்துணர்வின் மூலமாக அவர்களை இணைத்தலைமகளாகக் கொண்ட அதியுயர் நல்லிணக்க அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.
அதன் பின்னர் அந்த சபையின் வழிகாட்டுதலில் மாவட்டம் தோறும் சகல இன மதத்தலைவர்கள் அல்லது பொறுப்பாளர்களை இணைத்தலைமகளாகக் கொண்ட மாவட்ட நல்லிணக்க அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். சகல மாவட்டங்களிலும் சகல இன மக்களும் ஏதோவொரு எண்ணிக்கையில் வாழ்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிலும் அந்தந்தப் பிரதேசத்தில் வாழும் சகல இனங்களையும் சார்ந்த (பெரும்பாண்மையோ சிறுபாண்மையோ எதுவாகினும்) மதத்தலைவர்களை அல்லது பொறுப்பாளர்களை இணைத்தலைமைகளாகக் கொண்ட பிரதேச நல்லிணக்க அமைப்பை உருவாக்க வேண்டும்.
எதற்காக நல்லிணக்க அமைப்பு
-----------------------------
மேலே சொல்லப்பட்டவாறு ஒவ்வொரு பிரதேசம் தோறும் நல்லிணக்க அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அதன் மூலமாக குறித்த பிரதேசத்தில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் வலியுறுத்தும் செயற்பாடுகள் திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்பட வேண்டும்.
நாளாந்த வாழ்க்கையில் தெளிவின்மை காரணமாகவும், சூழ்நிலை காரணமாகவும் ஏற்படக்கூடிய சிறு சிறு பிணக்குகளை தாமதமின்றி உடனடியாகக் கூடி ஆராய்ந்து முரண்பாடுகள் அக்கணமே களையப்பட வேண்டும். உடனடியாகவே நல்லிணக்க அமைப்பு களத்திலிறங்கி மக்களுக்கு சரியானதும் நேர்த்தியானதுமான அறிவுரைகளை வழங்க வேண்டும்.
பிரதேச அரசியல்வாதிகளும் நல்லிணக்க அமைப்பும்
----------------------------------
நல்லிணக்க அமைப்பின் செயற்பாடுகள் இயல்பாகவும், சிறப்பாகவும் முன்னெடுக்கப்படுவதனை அந்தந்த பிரதேசத்து அரசியல்வாதிகள் அனைவரும் உறுதிப்படுத்த வேண்டும் என்பதனை விடவும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
பிரதேசத்து அரசியல்வாதிகள் சுயநலம் பாராது கட்சி வேறுபாடுகளைத் தாண்டியும், அரசியல் அதிகார சமநிலையைத் தாண்டியும் பிரதேசத்தின் நல்லிணக்க அமைப்பின் செயற்பாடுகளுக்கு எந்தவிதமான பின்னடைவுகளும் ஏற்பட்டுவிடாமல் நடந்துகொள்ள வேண்டும். அப்போது தான் ஒவ்வொரு பிரதேசமும் முரண்பாடுகளற்று இன நல்லுறவுள்ள பிரதேசமாகி, அதனூடாக முழு நாடும் சுபீட்சமடையும்.