அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளரும் சிரேஸ்ட ஊடகவியலாளரும் சட்டத்தரணியுமான முஷர்ரப் முதுநபீன் கடந்த 2019.03.23 ம் திகதி மாவடிப்பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர் ஒன்று கூடலில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன், மாவடிப்பள்ளி கமு/ அல் - அஸ்ரப் மகா வித்தியாலயத்திற்கும் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு பாடசாலை அபிவிருத்திகள், பாடசாலையில் நிலவும் குறைபாடுகள், தேவைகள் சம்மந்தமாகவும் அதிபருடன் ஆலோசனை செய்தார்.
இதன் போது பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். சைபுடீன் பாடசாலையின் உள்ள குறைபாடுகள், தேவைகளை விபரமாக விளக்கியதுடன் அவசரமாக ஆரம்ப வகுப்பு ஒன்றிற்கு தளபாட வசதிகள் இல்லாத குறை காணப்படுவதாகவும் இதனால் மாணவர்கள் சில கஸ்டங்களை எதிர்நோக்குவதாகவும் கூறினார்.
இதனை அறிந்த முஷர்ரப் முதுநபீன் அவர்கள் முக்கிய அபிவிருத்திகள், தேவைப்பாடுகளை கட்சியின் தலைவரும் அமைச்சருமான அல்ஹாஜ் றிஸாட் பதியுதீன் அவர்களுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கைகள் எடுப்பதாகவும், அதிபர் அவசரத் தேவை என கூறிய ஆரம்ப வகுப்பு ஒன்றிற்கான தளபாட வசதிகளை அவசரமாக தான் செய்துதருவதாக வாக்குறுதியளித்தார்.
அளித்த வாக்குறுதிக்கமைவாக தேவைப்பாடாக இருந்த தளபாடங்கள் நேற்று திங்கட் கிழமை (08) அதிபர், ஆசிரியர்களிடத்தில் கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மத்திய குழு உறுப்பினர்கள், காரைதீவுப் பிரதேச சபை உறுப்பினர் ஜலீல் போன்றோர் கலந்து கொண்டு பொருட்களைக் கையளித்தனர்.
தற்கால அரசியலில் தங்களது அரசியல் செல்வாக்கிற்காக போலி வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றும் அரசியல் வாதிகள் இருந்தும் தேவையை அறிந்து உணர்ந்து மாவடிப்பள்ளி பாடசாலை மாணவர்களின் கற்றல் நடவடிக்கைக்கு உதவி செய்த அ.இ.ம.காங்கிரஸின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளரும், சிரேஸ்ட ஊடகவியலாளரும், சட்டத்தரணியுமான முஷர்ரப் முதுநபீன் அவர்களுக்கு பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், அதிபர் ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் , பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பாடசாலை சமூகம் சார்பாகவும் மனமார்ந்த பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.