நமது அரசியல் அதிகாரம் இதுவரை முறையாக பயன்படுத்தப்படவில்லை'
-பொறியியலாளர் அப்துர்ரஹ்மான்-
'எமது சமூகத்தின் பிரச்சனைகளை பேசுவதில் இருக்கின்ற ஆர்வம் அவற்றுக்கான காரணங்களையும் தீர்வுகளையும் தேடுவதில் நம்மத்தியில் இல்லை. காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த மக்களுக்கு வெளியிடங்களில் காணிகளைப் பெற்றுக்கொடுப்பதே நிலவும் காணிப்பிரச்சினைக்கான நடைமுறைத் தீர்வாகும். தேவையுடையவர்கள் ஒவ்வொருவருக்கும் காணிகளை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். அதனைக்கோரிப்பெறுவது மக்களின் உரிமையாகும். இதனைப் பெற்றுக்கொடுப்பதற்காகவே அரசியல் அதிகாரம் பயன்படுத்தப்பட வேண்டும். ஆனாலும்இ முஸ்லிம் மக்களின் சன விகிதாசாரத்திற்கேற்ப அவர்களுக்கான காணிகள் இதுவரை வழங்கப்படவில்லை. பெண்கள் ஒவ்வொருவரினதும் திருமணத்திற்காகவும் வீடுகளைக் கட்டி சீதனமாக கொடுத்தே ஆக வேண்டும் என்கிற சாபக்கேடு நமது பிரதேசத்தில் நிலவுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்காமல் காத்தான்குடியின் காணி-வீட்டுப்பிரச்சினைகளுக்கு எந்தத்தீர்வையும் காணமுடியாது.' என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG)யின் பிரதித்தவிசாளர் பொறியியலாளர் அப்துர்ரஹ்மான் தெரிவித்தார்.RISE நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட காத்தான்குடியின் காணிப்பிரச்சனைகள் தொடர்பான ஆய்வின் இடைக்கால அறிக்கையினை பொது மக்களுக்கு சமர்ப்பிக்கும் நிகழ்வு கடந்த 14.04.19 ஞாயிற்றுக்கிழமை 'விம்பிள்டன்' சர்வதேச பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. அதன்போது சிறப்பு பேச்சாளர்களில் ஒருவராக அழைக்கப்பட்டிருந்த NFGGயின் பிரதித்தவிசாளர் பொறியிலாளர் அப்துர் ரஹ்மான் அவர்கள் அங்கு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கருத்துத்தெரிவிக்கையில்,
'எமது சமூகத்தின் பிரச்சனைகளை பேசுவதில் இருக்கின்ற ஆர்வம் அவற்றுக்கான காரணங்களையும் தீர்வுகளையும் தேடுவதில் நம்மத்தியில் இல்லை. அந்த வகையில் நமது பிரச்சினைகளை விஞ்ஞான ரீதியில் ஆய்வு செய்துஇ அவற்றுக்கான தீர்வுகளை அறிவு பூர்வமாக முன்வைக்க முயல்கின்ற இவ்வாறான ஆய்வு நடவடிக்கைகள் மிகவும் வரவேற்கத்தக்கன. ஒரு பிரச்சனைக்கான காரணங்கள் சரியாக இனங்காணப்படும்
பொழுது அப்பிரச்னையில் பாதி தீர்க்கப்பட்டதாக ஆகிவிடும் என ஒரு ஆங்கிலப்பழமொழி சொல்கிறது.
காத்தான்குடியில் நிலவுகின்ற தீவிரமான இந்த பிரச்சினையினை இரண்டு கண்ணோட்டத்தில் அணுக வேண்டியிருக்கிறது. அவ்வாறு அணுகினால் மாத்திரமே இதற்கான நிரந்தர தீர்வுகளைக் காண முடியும்.
அதிலொன்றுதான் மிகக்குறுகிய பரப்பளவில் அதிக சன நெரிசலாக மக்கள் வாழ்ந்து வருகின்றமையாகும். இதன்போது நிலத்தட்டுப்பாடும் விலையதிகரிப்பும் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும். ஆயினும், இதற்காக செயற்கை நடைமுறையில் புதிய காணிகளை உருவாக்க முடியாது.உதாரணமாக காத்தான்குடி நகரின் காணித்தேவைக்காக கடலை நிரப்பி காணிகளைப்பெற முயற்சிக்க முடியாது. இப்பிரதேசத்தை சேர்ந்த மக்களுக்கு வெளியில் காணிகளைப் பெற்றுக்கொடுப்பதே இதற்கான நடைமுறைத் தீர்வாகும்.
இதுவரை எமது பிரதேச செயலகப்பிரிவில் மாத்திரம் சுமார் 3200இற்கும் அதிகமானவர்கள் காணிக்காக விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான குடியிருப்புக் காணிகளை வழங்கி வைக்கவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்குரியதாகும். எனினும் அண்மையில் பிரதமரினால் மட்டக்களப்பில் 1000 பேர்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டன. ஆனால் காத்தான்குடியைச்சேர்ந்த எவரும் இதில் உள்வாங்கப்பட்டதாக தெரியவில்லை. மட்டக்களப்பு மாவட்ட சன விகிதாசாரத்திற்கேற்பவும் முஸ்லிம் மக்களுக்கான காணிகள் இதுவரை வழங்கப்படவில்லை. வாழ்வதற்கான காணியினை ஒவ்வொருவருக்கும் வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். அதனைக்கோரிப்பெறுவது மக்களின் உரிமையாகும். இதனைப் பெற்றுக்கொடுப்பதற்காகவே அரசியல் அதிகாரம் பயன்படுத்தப்பட வேண்டும்.அரசியல் அதிகாரத்தைப் பெற்றவர்கள் இதற்காக காத்திரமாக எதனையும் செய்யவில்லை என்பது பெரும் துரதிஷ்டவசமாகும்.
எனவே காத்தான்குடி பிரதேசத்தில் வாழும் காணித்தேவையுடைய அத்தனை பேருக்கும் ஏனைய பிரதேசங்களில் அக்காணிகளை பெற்றுக்கொடுப்பதே இதற்குத் தீர்வாகும்.
இந்தப்பிரச்சனையினை இன்னுமொரு கண்ணோட்டத்திலும் பார்ப்பது கட்டாயமாக இருக்கிறது. காத்தான்குடியில் வீடுகளைக்கட்டுவதற்கு ஏற்படும் அதிகூடிய செலவு என்பது கவனிக்கப்படவேண்டிய இன்னுமொரு மிக முக்கிய விடயமாகும். ஒவ்வொரு பெண்ணின் திருமணத்திற்காகவும் வீடுகளைக் கட்டி சீதனமாக கொடுத்தே ஆக வேண்டும் என்கிற சாபக்கேடு நமது பிரதேசத்தில் நிலவுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்காமல் எந்தத்தீர்வையும் காணமுடியாது.
ஒரு ஆணை திருப்திப்படுத்தவதற்காக மற்றுமொரு ஆண் வீடுகளைக் கட்டவேண்டியிருப்பதன் காரணமாகவே பெருமளவு பணம் வீணாக செலவளிக்கப்பட்டு ஆடம்பரமான வீடுகளைக்கட்ட வேண்டிய தேவை எமது ஊரில் ஏற்பட்டிருக்கிறது. பல சமயங்களில் ஒரே ஆண் பல வீடுகளைக்கட்ட வேண்டியு நிலையும் இருக்கிறது. இதன்காரணமாக பலருடைய வாழ்நாள் உழைப்பு, உடல் ஆரோக்கியம், போன்ற பெறுமதியான விடயங்கள் நாசம் செய்யப்படுகிறது.
ஒரு ஆண், தான் வாழ்வதற்காக தனக்கான வீட்டினைக்கட்டுகின்ற பொழுது இவ்வாறான ஆடம்பரங்கள் தவிர்க்கப்படுவதுடன் ஒரு ஆணுக்கு ஒரு வீட்டினைக் கட்டுகின்ற பொறுப்பு மாத்திரமே ஏற்படுகிறது. இதன்மூலம் காத்தான்குடியில் ஒரு வீட்டைக்கட்டுவதற்கு தேவைப்படும் செலவில் 70 வீதம் வரையில் குறைக்க முடியும். உழைப்பும் பொருளாதாரமும் சேமிக்கப்படுவதோடு பாரிய சமூக சீர்கேடுகளும் இல்லாமல் செய்யப்படும். இவ்வாறான நிலை நமது ஊரில் தோன்றுமானால் இப்பொழுது காணப்படுகின்ற பல்வேறு சமூகப்பிரச்சனைகளுக்குமான தீர்வும் கிடைத்து விடும். எனவே இது தொடர்பிலும் சமூக தலைமைகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.