வாழைக்குலைத் திருட்டுக்கள் அண்மைக் காலமாக அடுத்தடுத்து இடம்பெற்று வருவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
யாழ்.ஏழாலை கிழக்கில் வாழைச் செய்கையில் ஈடுபட்டு வரும் பல விவசாயிகளின் வாழைகுலைகள் இனந்தெரியாதோரினால் வெட்டி எடுத்து செல்லப்பட்டுள்ளது.கடந்த சில தினங்களுக்கு முன்னர் இளம் விவசாயியான மகாதேவன் சுரேஷ்குமாரின் வாழைத் தோட்டத்தில் ஆறு கப்பல் வாழைக் குலைகள் கொள்ளையிடப்பட்டுச் செல்லப்பட்டுள்ளன.
அதே தோட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(7) இரவு ஒரு கப்பல் வாழைக் குலையும், திங்கட்கிழமை(08) இரவு இரண்டு கப்பல் வாழைக்குலைகளும் வெட்டி எடுத்துக் கொள்ளையிடப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.சுமார்-15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெறுமதியான வாழைக்குலைகளே இவ்வாறு திருடப்பட்டுள்ளன.மேற்படி திருட்டு இடம்பெற்ற வாழைத் தோட்டத்திற்கு அருகில் வாழைச் செய்கையில் ஈடுபட்டு வரும் ஏழாலை மத்தியைச் சேர்ந்த முதியவரான இராசையா யோகராசாவின் இரண்டு கப்பல் வாழைக்குலைகளும், ஒரு இதரை வாழைக்குலையும் கடந்த சில தினங்களுக்கு கொள்ளையிடப்பட்டுள்ளன. இதன் மொத்தப் பெறுமதி சுமார் நான்காயிரத்துக்கு அதிகமெனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இதேபோன்று ஏழாலை பெரியதம்பிரான் ஆலயத்திற்கு அண்மையிலுள்ள வாழைத் தோட்டத்திலிருந்தும் பல வாழைக்குலைகள் அண்மையில் திருட்டுப் போயுள்ளன.இதேவேளை, விவசாயத்தையே தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ள விவசாயிகளின் வாழைத் தோட்டங்களில் குறித்த திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே, இவ்வாறான திருட்டுக்கள் தொடராதிருக்க சுன்னாகம் பொலிஸார் உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டுமெனவும் ஏழாலை விவசாயிகள் சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.