சாய்ந்தமருது பிரிப்பால் கல்முனைக்கு ஆபத்து என்பது உண்மையா? இல்லையா? கட்டாயம் வாசிங்க

சட்டமுதுமானி வை எல் எஸ் ஹமீட்-

ன்று (19/04/20019) வெள்ளி, சாய்ந்தமருதில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற கோரிக்கை தொடர்பான பொதுக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட சில தகவல்கள் மக்களைப் பிழையாக வழிநடத்துவதாகவும் கல்முனையை ஆபத்திற்குள் தள்ளுவதாகவும் இருந்ததனால் சாய்ந்தமருது மக்கள் குறிப்பாகவும் ஏனைய பிரதேச மக்கள் பொதுவாகவும் உண்மையை உணர்ந்துகொள்ள வேண்டும்; என்பதற்காக இதனை எழுதுகின்றேன்.

தங்களை ஏமாற்றிய அரசியல்வாதிகளுக்கெதிராகவும் சாய்ந்தமருதுக்கு எதிர்காலத்தில் பிரதிநிதித்துவம் பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. அது தொடர்பாக இங்கு எதுவும் குறிப்பிட விரும்பவில்லை.

உள்ளூராட்சி சபை தொடர்பாக அங்கு இரண்டு பிரதான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
ஒன்று, சாய்ந்தமருதுக்கு ஒரு சபை பெறுவதற்கான தகமை இருக்கின்றது.

இரண்டு, அவ்வாறு பெறுவது கல்முனையைப் பாதிக்காது. மட்டுமல்ல, கல்முனைக்கு அது பாதுகாப்பாகவே அமையும்.

இதில் முதலாவது தகமை தொடர்பானது. இதில் மாற்றுக் கருத்துக்கொள்வதற்கு எதுவுமில்லை. சாய்ந்தமருதுக்கு ஓர் சபை வழங்குவதற்கு யாருக்கும் எதுவித ஆட்சேபனையும் கிடையாது.

இரண்டாவது பாதிப்பில்லை மாறாக பாதுகாப்பே என்ற கூற்று. கூறியவர்கள் அது எவ்வாறு பாதுகாப்பானது; என்று குறிப்பிடவில்லை. பல கூற்றுக்கள் வெற்று வசனங்களாக இருந்தன. அவை எவ்வாறு என்று தெளிவுபடுத்தப்படவில்லை. Mere statements won’t do. They must be substantiated; otherwise they will be empty words to mislead the people.

பாதிப்பில்லை
——————-
இதுதான் இக்கட்டுரையின் பிரதான ஆய்வுக்குரியது. இங்கு இரண்டு விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன.

ஒன்று, சாய்ந்தமருது பிரிகின்றபோது சுமார் 58000 முஸ்லிம்கள் எஞ்சிய பகுதிக்குள் அடங்குவார்கள் என்றும் நான்காகப் பிரித்தால் சுமார் 28000 முஸ்லிம்களே கல்முனையில் இருப்பார்கள்; என்றும் எனவே 58000 பெரிதா? 28000 பெரிதா? என்ற கேள்வியும் அங்கு எழுப்பப்பட்டது.

அதாவது நாலாகப் பிரித்தால் கல்முனையின் முஸ்லிம் சனத்தொகை குறையும். சாய்ந்தமருதுக்கு தனியே ஒரு சபை வழங்கிவிட்டு ஏனையவற்றை ஒன்றாக வைத்தால் கூடிய முஸ்லிம் சனத்தொகை இருக்கும். எனவே கூடிய முஸ்லிம் சனத்தொகை சிறந்ததா? குறைந்த சனத்தொகை சிறந்ததா? என்ற கேள்வி.

இங்கு இந்த இரண்டு சூழ்நிலைகளிலும் தமிழ்வாக்குகள் எவ்வாறு மாறும்; என்பதைக் குறிப்பிடவில்லை. ஏன்? மக்கள் உண்மையை உணர்ந்துகொள்வார்கள் என்பதனாலா?

முஸ்லிம்களின் சனத்தொகை அதிகம் சிறந்ததா? குறைவு சிறந்ததா? என்று எண்கணிதம் பேசி மக்களை பிழையாக வழிநடாத்த முற்படுவோர் சாய்ந்தமருது பிரியாமல் இருந்தால் முஸ்லிம் சனத்தொகை இன்னும் அதிகமாக இருக்கும்; என்ற எண்கணிதத்தை கூற மறந்ததேனோ?

இதன் உண்மைக் கணக்கு என்ன?

———————————————
கல்முனை மாநகரின் மொத்தவாக்குகள் 74946. இவற்றுள் சாய்ந்தமருது வாக்குகள் 19,306. மிகுதி, 55,640. இவற்றுள் தமிழ் வாக்குகள் 20, 866. மிகுதி முஸ்லிம் வாக்குகள் சுமார் 34,774.

இவர்கள் பேசுகின்ற கணக்கு 34,774முஸ்லிம் வாக்குகள் பெரிதா? 20,886 தமிழ் வாக்குகள் பெரிதா, என்பதாகும். இதற்கு சம்மாந்துறையில் இருந்து இறக்காமம் பிரிந்த கதையையும் முன்வைக்கிறார்கள். மொத்த சம்மாந்துறையும் ஒரு தனியூர். ஆனால் இந்த சுமார் 35,000 முஸ்லிம் வாக்குகளுக்கும் சொந்தக்காரர்கள் மூன்று முஸ்லிம் ஊர்கள்; என்ற உண்மை ஏனோ அவர்களின் பேச்சில் மறந்துவிடுகிறார்கள்.

சம்மாந்துறை ஒரு தனியூர். தனது சபையைப் பாதுகாக்க போதுமான வாக்குப்பலம் கொண்ட ஊர். கல்முனையைப் பாதுகாக்க இம்மூன்று ஊர்களும் எந்த அடிப்படையில் எக்காலமும் ஒன்றுபட்டு ஒரே அணியில் வாக்களிப்பார்கள்; என்பதையும் கூறியிருந்தால் அவர்களது கருத்தில் நேர்மை இருந்திருக்கும்.

அருகேயுள்ள, நிலத்தொடர்புள்ள, உறவுகளால் பின்னிப்பிணைந்த ஊரே தனித்து நிற்கும்போது, நிலத்தொடர்பற்ற சாய்ந்தமருதளவு பிணைந்த திருமண உறவு இல்லாத ( சாய்ந்தமருதில் சுமார் 35-40% கல்முனைக்குடி தந்தைக்குப் பிறந்தவர்கள், கல்முனைக்குடியில் சாய்ந்தமருது தந்தைக்குப் பிறந்தவர்கள்) ஊர்கள் அவர்களது அபிலாஷைகள், அவர்கள் விரும்புகின்ற கட்சிகளையெல்லாம் விட்டுவிட்டு கல்முனை எந்தப்பக்கம் நிற்கின்றதோ அந்தப்பக்கம்தான் அவர்களும் வாக்களிப்பார்கள்; என்பது எந்தவகையில் உறுதிப்படுத்த முடியும்; என்பதை ஏன் கூறமுடியவில்லை?

நாங்கள் பிரிந்துசெல்வோம். இன்னும் இரண்டு ஊர்கள் இருக்கின்றன. அவர்கள் கல்முனையைப் பாதுகாப்பார்கள்; என்கின்றீர்களே! இதுதான் நீங்கள் செய்த ஆய்வுகளா? கல்முனைக்கு ஏன் இந்த தலைவிதி? கல்முனை தன்பாதுகாப்பிற்கு ஏன் நிச்சயமற்ற தன்மைக்கு முகம் கொடுக்கவேண்டும்?

34,774 முஸ்லிம் வாக்ககுகளில் 18,457முஸ்லிம் வாக்குகள் கல்முனை முஸ்லிம்களுடையது. 16,317 வாக்குகள் ஏனைய இரு ஊர்களுடையது. தமிழருடைய வாக்குகள்
20,866. அதாவது கல்முனை முஸ்லிம் வாக்குகளைவிட 2409, அதாவது சுமார் 2500 அதிகமான வாக்குகள் அவர்களுக்கிருக்கின்றன.

்தற்போதைய தேர்தல்முறையை சகல கட்சிகளும் எதிர்க்கின்றன. சிலவேளை அடுத்த தேர்தல் பழைய முறையிலும் நடக்கலாம். நடந்தால் ஒரு வாக்கு அதிகமாக பெறுகின்ற கட்சிக்கு மேயர் பதவி போகும். மூன்று ஊர்களும் மூன்று கட்சிகளைப் பெரும்பான்மையாக ஆதரித்தால் என்ன நடக்கும்?

இன்று கல்முனையில் தமிழரின் ஒரு செயலகத்திற்காக மட்டக்களப்பில் இருந்து ஊர்வலம் நடாத்தப்பார்க்கிறார்கள். வடக்கிலிருந்து விக்னேஸ்வரன் வருவதாக கூறுகின்றார்கள். அந்தளவு ஒற்றுமையாக இருக்கிறார்கள்.

பக்கத்துவீட்டுக்காரனுடன் பகையென்றாலும் அவன் ஒரு கஷ்டத்தில் இருக்கும்போது அவனுடன் உள்ள பிரச்சினைகளை சற்று ஒதுக்கிவைத்துவிட்டு அமைதியாக இருப்பான்; மனச்சாட்சி உள்ளவன். ஆனால் இனவாதிகள் வடக்கும் கிழக்கும் இணைந்து ஊர்வலம், நடைபவணி என்றெல்லாம் கல்முனையைக் கபளீகரம் செய்யமுற்படுகையில் அந்தக்கவலையில் அந்த ஊர் இருக்கும்போது நீங்கள் கொஞ்சம்கூட மனதில் ஈரமில்லாமல் மேடைபோட்டு மக்களைப் பிழையாக வழிநடாத்துவது நியாயமா?

இப்பொழுது கணக்குக்கு வருவோம்.

தனியாக கல்முனைக்கும் தனது பழைய சபை கிடைக்கும்போது முஸ்லிம் வாக்குகள் 18,000. தமிழ் வாக்குகள் சுமார் 4,000. இப்பொழுது பாருங்கள்; மேலதிக முஸ்லிம் வாக்குகள் சுமார் 14,000. ஒரே ஊர். கல்முனையைப் பாதுகாப்பது இலகுவானதா? இல்லையா? எந்த ஊரிடமும் கையேந்தவேண்டிய அவசியமில்லை.

அதேநேரம் கல்முனை என்பது பல நூறுகோடிகள் முஸ்லிம்களின் சொத்தை தன்னகத்தே கொண்ட ஒரு மாநகரம். வடக்கு தமிழரின் கையில் இருக்கின்றது. கிழக்கில் திருமலை மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையானபோதும் தலைநகர் திருமலை அவர்களது கையில் இருக்கின்றது.

மட்டு மாவட்டமும் மட்டு நகரும் அவர்களிடம் இருக்கின்றன. வட கிழக்கில் ஒரேயொரு பிரதான நகரான கல்முனை மாத்திரம்தான் அரசியல் அலகிலும் நிர்வாக அலகிலும் முஸ்லிம்களிடம் இருக்கின்றது.

எனவே, கல்முனையையும் தன் ஆளுகைக்குள் கொண்டுவருவதில் எதிரும் புதிருமாய் செயற்படும் TNA யும் விக்கியும் ஒன்றுபட்டிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் மேடைபோட்டு மக்களைப் பிழையாக வழி நடாத்திக்கொண்டிருக்கிறீர்கள்.

உண்மையில் நீங்கள் தனியாக சாய்ந்தமருதுக்கு மட்டும் சபை கேட்பதென்பது கல்முனையை அந்நியவர்க்கு தாரை வாருங்கள் என்பதற்குச் சமமாகும். உண்மையில் சாய்ந்தமருதுடன் ஆத்திரப்படவேண்டியவர்கள் கல்முனை மக்கள். உங்களுக்கு சபை அவசரமாக வேண்டுமென்பதற்காக கல்முனை ஆபத்திற்குள் தள்ளவேண்டுமா? என்று. ஆனால் அவர்கள் எவ்வளவு பொறுமையாக இருக்கிறார்கள். கடந்தமுறை கல்முனைக்கெதிராக எவ்வளவு கொடுமையான ஒரு போராட்டத்தை அவர்கள் அனுபவித்தார்கள்! இம்முறை கல்முனைக்கெதிராக வரிந்துகட்டிக்கொண்டு ஒரு கூட்டம் நாளாந்தம் இழிசொற்களைப் பாவித்துக்கொண்டிருக்கிறார்களே! இன்றைய மேடையில் கூறினீர்களா? அவ்வாறு அடுத்த ஊரைத்தாக்கி யாரும் எழுதவேண்டாம்; என்று.

பதிலுக்கு இப்பொழுது இங்கிருந்தும் எழுத ஆரம்பித்துவிட்டார்கள். இது எங்கேபோய் முடியப்போகிறதோ தெரியாது.

கல்முனையின் நியாயம்
——————————-
கல்முனைக்கு ஏன் இந்த தலையெழுத்து. கல்முனை கேட்டா அன்று மூன்று சபைகள் இணைக்கப்பட்டன. இல்லையே! இன்று ஒன்றைப் பிரித்து இரண்டை வைத்தால் மேலே காட்டிய புள்ளிவிபரங்களின்படி கல்முனைக்கு ஆபத்து இல்லையா?

எனவே, பிரிப்பதானால் “ எங்களது பழைய கல்முனையையை எங்களிடம் தந்துவிடுங்கள், ஒன்றைப் பிரித்து இரண்டை எங்களுடைய தலையில் கட்டிவிட வேண்டாம்; என்பதற்குப் பெயர் “ தடுப்பா? “ .

நான்கைக் கைவிட்டுவிட்டார்கள்
———————————————

“இப்பொழுது நான்காகப் பிரிப்புக் கோரிக்கையைக் கைவிட்டுவிட்டார்கள்” என்று மேடையில் கூறப்பட்டது. அப்படி யார் சொன்னார் உங்களிடம். சில நேரங்களில் சிலரது பேச்சும் எழுத்துக்களும் புரியாமல் பேசு/ எழுதுகின்றார்களா? அல்லது வேண்டுமென்று பேசுகின்றார்களா? என்பது புரியவில்லை.

கல்முனையின் நிலைப்பாடு என்றும் ஒன்றுதான். அதாவது பிரிப்பென்ற ஒன்று வந்தால் பழைய கல்முனையை ( பட்டினசபை) எங்களிடம் தந்துவிடுங்கள்; என்பதாகும். பழைய கல்முனையைத் தருவதென்றால் இணைத்த மூன்று சபையையும் கழட்டத்தானே வேண்டும். கழட்டினால் மொத்தம் நான்குதானே! அப்படியானால் நான்காகப் பிரியுங்கள்; என்றுதானே கூறவேண்டும்.

எண்கணிதம் பேசுகின்றவர்களுக்கு ஏன் இது புரியவில்லை. கூறினார்கள், சபை கேட்காதவர்களுக்காகவும் இவர்கள் சபை கேட்கிறார்கள்; என்று. அவர்கள் கேட்கிறார்களா? இல்லையா என்பதல்ல பிரச்சினை. கல்முனையை தனியாக, கொடுக்கும்போது நான்காகத்தான் பிரியும். இதனைப் புரியமுடியாதா?

இம்முறை தமிழரின் பிரதிநிதித்துவம் ஒருபோதும் இல்லாதவாறு 12 ஆக அதிகரித்துள்ளதாகவும் மேடையில் குறிப்பிடப்பட்டது. இம்முறை கடந்த முறையைவிட மொத்த அங்கத்தவர் இருமடங்கு என்பதை ஏன் நீங்கள் குறிப்பிடவில்லை. மொத்த அங்கத்தவர் கூடும்போது ஒவ்வொரு சமூகத்தினதும் அங்கத்துவம் கூடாதா?

ஏன் இதைக் குறிப்பிட்டீர்கள்? மக்களைப் பிழையாக வழி நடாத்துவதைத்தவிர வேறு என்ன நோக்கம் இருக்கமுடியும்?

கடந்த மாநகரசபைத் தேர்தலில் சாய்ந்தமருது இல்லாமல் முஸ்லிம் மேயரைப்பெற முடியும் என நிருபித்ததாக கூறுகின்றீர்கள். அப்படியானால் காத்தமுத்து கணேஷ் ஏன் பிரதியானார்? ACMC யும் மேயருக்கு வாக்களித்ததாக கூறுகின்றீர்கள்? எப்போது வாக்களித்தார்கள். காத்தமுத்துவும் வாக்களிப்பார்; எனத் தெரிந்ததன் பின்பு இல்லையா?

அரசியல் வேறுபாடுகளுக்கப்பால் முஸ்லிம் மேயரைப் பெறுவதற்காக நாம் மு கா வுடன் இணைந்து வாக்களிக்கின்றோம்; என்று முன்கூட்டியே அறிவித்திருந்தால் காத்தமுத்துவுக்குக் கொடுத்த பிரதியை முபீத்துக் கொடுத்திருக்கலாமல்லவா? வாக்களிக்காமல் இருந்த கட்சிகளும் இருந்ததல்லவா?

இவையெல்லாம் சாய்ந்தமருது தனியாகப் பிரிந்தால் முஸ்லிம் மேயரைப் பெறுவதில் ஒரு நிச்சயமற்ற தன்மை இருப்பதைக் காட்டவில்லையா? இவற்றை உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையா? அல்லது சாய்ந்தமருது மக்களை உங்கள் அரசியல் இலக்கை அடைவதற்காக பிழையாக வழிநடாத்த முற்படுகிறீர்களா?

அரசியல் உரிமை எல்லோருக்கும் இருக்கின்றது. தாராளமாக செய்யுங்கள். ஆனால் இன்னுமொரு ஊருக்கு அநியாயம் செய்து மக்களைப் பிழையாக வழிநடாத்தி யாரும் தங்கள் அரசியல் இலக்கை
அடைய முயற்சிக்காதீர்கள். எல்லோருக்கும் மறுமை இருக்கின்றது.
புரிந்துகொள்ளுங்கள் சகோதரர்களே!
ஒரு சிறிய விகிதம் ஆபத்து இருந்தால்கூட அதனை கல்முனை சந்திக்க முடியாது. ஏனெனில் அங்கு இருப்பது முஸ்லிம்களின் அடையாளம் மாத்திரமல்ல. முஸ்லிம்களின் மிகப்பெரிய பொருளாதாரம்.

சிற்றினவாதிகளின் கைகளுக்குள் கல்முனை சென்றால் அவர்கள் கொடுக்கும் நெருக்குதலில் ஒரு சில வருடங்களுக்குள்ளேயே ஒவ்வொருவராக கடைகளை விற்றுவிட்டு வந்து நடுத்திருந்தெருவில் நிற்கவேண்டி வரும். அதையா எதிர்பார்க்கிறீர்கள்? அதற்காகவா போராடுகிறீர்கள்?

நீங்கள் மனச்சாட்சியுடன் நடந்திருந்தால் ஒரு நாள்கூட சாய்ந்தமருதுக்கு மட்டும் தனியாக சபை கேட்டிருக்க மாட்டீர்கள். உங்களுக்கும் சபை கிடைக்க வேண்டும். அடுத்த சகோதர ஊருக்கும் ஆபத்து வந்துவிடாமல் அதைப்பெற வேண்டுமென்று யோசித்திருப்பீர்கள்.

அன்று மர்ஹூம் மீராலெப்பை போன்றவர்கள் பள்ளி நிர்வாகத்தில் இருந்தபோது நான்காகத்தான் பிரித்துக் கேட்டார்கள். இன்னும் சொல்லப்போனால் நான்காகப் பிரிப்பு என்ற பதத்தை முதலில் அறிமுகப் படுத்தியதே சாய்ந்தமருதுப் பள்ளிதான் என்பது உங்களுக்குத் தெரியுமா?

அன்று மர்ஹூம் மீராலெப்பை, முன்னாள் பாளிகா அதிபர் மர்ஹூம் ஹமீட் போன்ற பள்ளிநிர்வாகிகள் தலைவரை வந்து சந்தித்து நான்காகப் பிரிப்புக் கோரிக்கை முன்வைத்தபோது தலைவரின் அருகே இருந்தவன் நான்.

என்ன செய்வது. இன்று எல்லாம் மாறிவிட்டது. நீங்கள் கட்டாயம் சபை பெறவேண்டும் இன்ஷாஅல்லாஹ். ஆனால் அந்த முயற்சி, அதற்காகான போராட்டம் அடுத்த சகோதர ஊருக்கு தீங்கு விளைவிக்காமல் இருப்பதையும் கவனத்திற்கொள்ள வேண்டும் சகோதரர்களே! மாறாக உண்மையை மறைத்து வெறும் எண் கணிதத்தைக்கூறி மக்களைப் பிழையாக வழி நடாத்துவது பாவம் சகோதரர்களே!

இன்று சாய்ந்தமருது மக்கள் அதிகம் அதிகம் இந்த உண்மையை உணர ஆரம்பித்திருக்கின்றார்கள். இந்த உண்மைகளை இன்னும் தெளிவாக சாய்ந்தமருது, கல்முனை மற்றும் ஏனைய ஊர் மக்களுக்கும் சொல்வதற்கு தேவைப்பட்டால் மேடைகளும் போடமுடியும் சகோதரர்களே!

எனவே, நேர்மையாக, மனச்சாட்சியுடன் கருத்துக்களை முன் வையுங்கள். அதேநேரம் இதனை இந்த அரசின் காலத்திலேயே இன்ஷாஅல்லாஹ் சாதிக்க முடியும் இந்த அரசியல்வாதிகள் நினைத்தால். ஆனால் இந்த இரண்டு ஊர்களும் பிரிந்து நின்று எதனையும் சாதிக்க மாட்டீர்கள்.

எனவே, உங்கள் சுயகௌரவங்களை ஒரு பக்கம் ஒதுக்கிவைத்துவிட்டு கலிமாச் சொன்ன முஸ்லிம்கள் என்ற வகையில் இந்த இரண்டு ஊர்களும் ஒன்றுபட்டு அடுத்த இரண்டு ஊர்களையும் இணைத்துக்கொண்டு ஒற்றுமையாக போராடுங்கள். சகலருக்கும் வெற்றி நிச்சயம் இன்ஷாஅல்லாஹ்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -