இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் கடும் வெப்பத்துடனான காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள வறட்சி காரணாமாக வடக்கு மாகாணம் அதிக பாதிப்புக்களைச் சந்தித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.
இடர்முகாமைத்துவ நிலைய தகவலின் அடிப்படையில் யாழ்.மாவட்டத்தில் வேலணை,காரைநகர்,ஊர்காவற்துறை, மருதங்கேணி, நெடுந்தீவு ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் வெப்பம் காரணமாகப் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர். யாழில் 24,207 குடும்பங்களைச் சேர்ந்த 33,488 பேர் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேலணை பிரதேச செயலர் பிரிவில் இரண்டாயிரத்து 798 குடும்பங்களைச் சேர்ந்த ஒன்பதாயிரத்து 642 பேரும், காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் இரண்டாயிரத்து 760 குடும்பங்களைச் சேர்ந்த எட்டாயிரத்து 297 பேரும், ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவில் இரண்டாயிரத்து 422 குடும்பங்களைச் சேர்ந்த ஏழாயிரத்து 848 பேரும், மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் ஆயிரத்து 60 குடும்பங்களைச் சேர்ந்த நான்காயிரத்து 630 பேரும், நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவில் ஆயிரத்து 31 குடும்பங்களைச் சேர்ந்த மூவாயிரத்து 71 பேரும் வெப்பம் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி பகுதிகளில் அன்றாட குடிநீரைப் பெற்றுக் கொள்வதில் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.இதேவேளை,கடும் வெப்பமுடனான காலநிலை காரணமாக யாழ்.விவசாயிகளின் விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.