முன்னாள் அமைச்சர் பஷீர் கூறுகிறார்
எஸ்.அஷ்ரப்கான்-பேச்சுவார்த்தை மூலம் தீர்வு வந்திருந்தால் தமிழர்களுக்கு உரிமை கிடைத்து இருக்காது என்று உற்பத்தி திறன்கள் ஊக்குவிப்பு முன்னாள் அமைச்சரும், ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளருமான பஷீர் சேகு தாவூத் தெரிவித்தார்.
கடந்த புதன்கிழமை ஏறாவூர் பதியுதீன் முஹம்மத் வித்தியாலய இல்ல விளையாட்டு போட்டியில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவர் இங்கு உரையாற்றும் போது,
அபிவிருத்தி மட்டும்தான் அரசியல் என்று நினைக்கின்றார்கள். இனி எந்தவொரு அபிவிருத்தியும் நாட்டில் நடக்காது. ஜனாதிபதி தேர்தலில் யார் வேட்பாளர்? என்கிற போட்டிதான் நடக்கும். யார் ஜனாதிபதி வேட்பாளர் என்கிற போட்டி ஐக்கிய தேசிய கட்சி, பொதுஜன பெரமுன ஆகியவற்றுக்குள் மும்முரமாக நடக்கின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக திக்குமுக்காடி கொண்டு இருக்கின்றார். இவ்வாறாக அரசியல் நிலைமைகள் இடியப்ப சிக்கலாக தோன்றுகின்றன
முஸ்லிம் மக்கள் அவர்களுடைய தனித்துவ அரசியலில் மிக முக்கியமான தீர்மானத்துக்கு போக நேர்ந்து உள்ளது. அது என்னவென்றால் குரல் கொடுத்து கொண்டு இருப்பதால் விடுதலை அடைய முடியாது என்பதாகும். குரலாக இருக்கின்றனர் என்று எல்லோருமே சொல்கின்றனர். இனி அவ்வாறு இருக்க தேவை இல்லை. மாறாக போராட வேண்டும். குரலாக இருப்பதால் விடுதலை கிடைக்காது என்பது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 30 வருட தனித்துவ அரசியலில் நமக்கு கிடைத்து உள்ள பதில் ஆகும். ஆகவே நாம் குறைந்த பட்சம் வீதியில் இறங்கியாவது போராட வேண்டும். ஆயுதம் தூக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. போராடாமல் எதுவும் எமக்கு கிடைக்காது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழர்களின் அரசியலுக்கும், முஸ்லிம்களின் அரசியலுக்கும் இடையில் நெருக்கமான பாணி வளர்ந்து வருகின்றது. 1988 களில் இருந்து மு. கா தலைவர் அஷ்ரப் பேரம் பேசுகின்ற அரசியலை முன்னெடுத்தார். ஜனநாயக அரசியல் ஊடாக பேரம் பேசுகின்ற அரசியலை கைக்கொண்டார். அவரின் பேரம் பேசுகின்ற அரசியல் முக்கியமான சில விடயங்களை சாதித்து தந்ததுதான். இன்று தமிழர்களின் அரசியலை பார்க்கின்றபோது அவர்கள் பேரம் பேச தொடங்கி இருக்கின்றனர். அது துரதிஷ்டம் ஆகும். பிரபாகரன் பேரம் பேசிய விதம் வேறு. அது ஒரு போராட்டம். தமிழர்களுக்கு இறுதி வரை போராடியவர் பிரபாகரன். அவர் பேச்சுவார்த்தை மீது நம்பிக்கை வைக்கவில்லை. பேச்சுவார்த்தை மீது நம்பிக்கை வைத்தவராக பிரபாகரன் வரலாற்றில் ஒருபோதும் அவரை வெளிப்படுத்தவில்லை. ஏனென்றால் பேச்சுவார்த்தை மூலமாக ஒரு தீர்வு வர போவதில்லை. பேச்சுவார்த்தை மூலம் போராட்டத்துக்கு கிடைக்கின்ற தீர்வு என்பது அதிகார சக்திகளுக்கு ஆதரவாக அமைகின்றது. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு வந்திருந்தால் இலங்கைக்கு சீனா வந்திருக்காது. ஆனால் தமிழர்களுக்கு உரிமை கிடைத்திருக்காது. அது அமெரிக்கா, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளுக்கு கிடைத்த வெற்றியாகத்தான் இருந்திருக்கும். சில வேளை இந்தியாவின் தோல்வியாகவும் இருந்திருக்கலாம். மாறாக இப்பிராந்தியத்தில் சீனா, அமெரிக்கா, ஜப்பான், இந்தியா அடங்கலான நாடுகள் வந்து போட்டியிடுகின்ற அளவுக்கு பேரம் பேசுகின்ற சக்தி உண்மையாக தமிழர் அரசியலுக்கு கிடைத்திருக்கின்றது. பிரபாகரன் இறப்பதற்கு எடுத்த முடிவுதான் சரியானது. போராட்டத்தில் வெற்றி அல்லது தோல்வி. ஆகவே இது ஒரு பெரிய படிப்பினை ஆகும்.
பேரம் பேசுவதைதான் தமிழ் தேசிய அரசியலும், தமிழ் கட்சிகளும் இப்போது கையில் எடுத்து உள்ளன. எந்தளவுக்கு அது எதிர்காலத்தில் நகர போகின்றது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் ஒரு விடயம் உள்ளது. பேரம் பேசும் அரசியலால்தான் முஸ்லிம்களின் தனி கட்சி அரசியலிலே கட்சிக்குள்ளே பேதங்களும், முரண்பாடுகளும், பிரிவினைகளும் வந்தன. அவ்வாறேதான் பிரிவினைகளையும், பிரச்சினைகளையும், பல கட்சிகளின் உருவாக்கங்களையும் இன்றைய தமிழ் தேசிய அரசியலும் எதிர்நோக்குகின்றது. பேரம் பேசுதல் காரணமாக முஸ்லிம்களின் தனி கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ன பிரச்சினைகளை எதிர்நோக்கியதோ இன்று அவ்வாறே தமிழர்களின் பாரிய கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட ஏனைய தமிழ் கட்சிகள் பிரிவினைகளையும், உட்பூசல்களையும், பிரச்சினைகளையும் எதிர்நோக்குகின்றன. அபிவிருத்தி அரசியலில் பிரிவினை என்பது யதார்த்தமாக நடக்கின்ற விடயம் ஆகும்.
ஆகவே இந்நிலைமையை வென்றெடுக்க தமிழர்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாதல் வேண்டும். தமிழ் கட்சிகளுக்குள் ஒற்றுமை அவசியம். முஸ்லிம் கட்சிகளுக்குள் ஒற்றுமை அவசியம். தமிழ் கட்சிகளுக்கும், முஸ்லிம் கட்சிகளுக்கும் இடையில் ஒற்றுமை அவசியம். தமிழ் மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் இடையிலான பிரச்சினைகளை ஒன்றாக ஒரே மேடையில் அமர்ந்து இருந்து பேசி தீர்க்க வேண்டும். தமிழர் போராட்டம் முடிவுக்கு வந்தாலும், ஆயுதம் என்பது பாவனையில் இல்லாமல் வந்தாலும், ஆயுத போராட்டம் என்பது ஒத்தி வைக்கப்பட்டாலும், ஆயுதம் மௌனிக்கப்பட்டாலும் அதன் பெறுபேறு என்பது வேறாக இருக்கின்றது. அந்த பெறுபேற்றின் தன்மையையும், சரியான அரசியல் போக்கையும் நிர்ணயித்து அதற்கு சரியான பங்கு ஆற்றுகின்ற பொறுப்பை தமிழ், முஸ்லிம் கட்சிகள்கையில் எடுத்து தமிழ் கட்சிகளுக்குள்ளும், முஸ்லிம் கட்சிகளுக்குள்ளும் ஒற்றுமைப்பட்டு த ஒரு கூட்டமைப்பை தோற்றுவித்தால் மாத்திரமே சரியான தீர்வை முன்மொழிய முடியும். மற்றப்படி இரு சமூகங்களுக்கும் ஒரு காலமும் விடுதலை கிடைக்க போவதில்லை.
தமிழ், முஸ்லிம் மக்களுடைய நல்வாழ்வுக்காக நாங்கள் யாருடனும் கை கோர்க்க தயாராக இருக்கின்றோம். அது தமிழ் தேசிய கூட்டமைப்பாக இருந்தாலும் சரிதான், சி. வி. விக்னேஸ்வரனின் கட்சியாக இருந்தாலும் சரிதான், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சியாக இருந்தாலும் சரிதான், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸாக இருந்தாலும் சரிதான், அகில இலங்கை மக்கள் காங்கிரஸாக இருந்தாலும் சரிதான், அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸாக இருந்தாலும் சரிதான், தமிழராக, முஸ்லிமாக, கிறிஸ்தராக இருந்தாலும் சரிதான் நாம் இந்த வட கிழக்கிலே ஒன்றாக கை கோர்க்காத வரை எந்த பயனும் இல்லை என்பதால் அவ்வாறு கை கோர்த்து செயற்பட நான் தயாராக இருக்கின்றேன்.