அண்மையில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தியோரை இஸ்லாமிய தீவிரவாதிகள் என தமிழ் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறியுள்ளமை வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய கருத்தாகும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
அவர் இது விடயமாக இன்று (30) மேலும் தெரிவித்ததாவது,
அண்மைய அப்பாவிகள் மீதான தற்கொலை தாக்குதலை நடத்தியோர் முஸ்லிம்களாக இருக்கலாம். ஆனால் இஸ்லாத்தை அவர்களின் செயலுடன் இணைப்பது மிக மோசமான அத்துமீறலாகும்.
விடுதலைப்புலிகள் ஒரு குறிக்கோளுடன் போராடியதாகவும் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு குறிக்கோள் எதுவும் இல்லை என சம்பந்தன் கூறுகிறார். புலிகளுக்கு நாட்டை துண்டாடுவது குறிக்கோளாக இருந்தது. முஸ்லிம் தீவிரவாதிகளுக்கு நாட்டை துண்டாடும் குறிக்கோள் இல்லை என்பது தெளிவாகிறது. ஆனாலும் இந்த இரு தரப்பாரும் அப்பாவி மக்களை கொல்லுவதில் ஒரே குறிக்கோளில் செயற்பட்டவர்கள்தான். தாக்குதல் நடத்தியவர்கள் முஸ்லிம்கள் என்பதால் முஸ்லிம் தீவிரவாதி என இவர்களை கூற முடியுமே தவிர இஸ்லாத்துடன் இவர்களை இணைத்து மூத்த அரசியல்வாதியான சம்பந்தன் போன்றோரும் பேசுவது பொறுப்பற்ற தனமும் கண்டிக்கத்தக்கதுமாகும். தாக்குதல் நடத்தியோருக்கு இஸ்லாம் பற்றி சரியாக தெரிந்திருந்தால் இப்படி அப்பாவி குழந்தைகள், பெண்களை கொன்றிருக்கமாட்டார்கள்.
விடுதலைப்புலிகள் உண்மையானதொரு குறிக்கோளில் செயற்பட்டவர்கள் என்றால் காத்தான்குடியில், ஏறாவூரில், கல்முனையில் என அப்பாவி முஸ்லிம்களை ஏன் சுட்டுத்தள்ளினார்கள்? அதே போல் அரந்தளாவையில் பல பௌத்த சமயத்தலைவர்களை வெட்டிக்கொன்றனர்.
இவற்றை பார்க்கும் போது அண்மைய தாக்குதலை நடத்திய முஸ்லிம் தீவிரவாதிகளுக்கும் புலிகளின் அப்பாவிகள் மீதான தாக்குதலுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
விடுதலைப்புலிகளும் மத ரீதியாக 99 வீதம் இந்துக்கள் என்பதற்காக விடுதலைப்புலிகளை இந்துத்தீவிரவாதிகள் என சொன்னால் அதனை சம்பந்தன் ஏற்றுக்கொள்வாரா?
தீவிரவாதிகள் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள் அப்பாவிகள் மீது தாக்குதல் தொடுத்தால் அவர் தனது மதத்தை பின்பற்றியவராக ஆக மாட்டார்.
அண்மைய தாக்குதலில் ஈடுபட்டோரை முழு முஸ்லிம்களும் கண்டிக்கும் நிலையில் அவர்களின் தீவிர செயலுடன் உயரிய இஸ்லாமிய மதத்தை இணைப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். இஸ்லாம் என்பது வேறு முஸ்லிம்கள் என்பது வேறு. தமது மத கோட்பாடுகள் என்ன என்பது பற்றி சரிவர புரியாதோர் எல்லா மதத்திலும் உண்டு. முஸ்லிம்களுக்குள்ளும் இஸ்லாம் பற்றி தெரியாதோர் உண்டு.
ஆகவே அண்மைய தாக்குதலில் ஈடுபட்டோரை பயங்கரவாதிகள் அல்லது தீவிரவாதிகள் அல்லது முஸ்லிம் தீவிரவாதிகள் என்றாவது அழைத்து விட்டு போகலாம். ஆனால் இஸ்லாமிய தீவிரவாதி, இஸ்லாமிய பயங்கரவாதி என கூறுவது அனைத்து முஸ்லிம்களின் மனதையும் புண்படுத்துவதாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.