காத்தான்குடி சிவில் அமைப்புக்களின் சம்மேளனம்.
எம்.பஹ்த் ஜுனைட்-காத்தான்குடி சிவில் அமைப்புக்களின் சம்மேளனத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு திங்கட்கிழமை (29) சம்மேளனத்தின் தலைவர் எம்.பீ.எம்.பிர்தெளஸ் (நழீமி) தலைமையில் ஹோட்டல் பீச்வே இல் இடம்பெற்றது.
இவ் ஊடகவியலாளர் சந்திபின் போது கருத்து தெரிவித்த சம்மேளனத்தின் தலைவர் எம்.பீ.எம்.பிர்தெளஸ்(நழீமி) 2019 ஏப்ரல் 21 இலங்கை வரலாற்றில் மற்றுமொரு இரத்தக்கறை படிந்த நாளாகும். கத்தோலிக்க மக்களின் புனித தினத்தில் தீவிரவாதிகளால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான குண்டுத் தாக்குதலில் உயிர்நீத்த இலங்கையர்கள்,வெளிநாட்டவர்கள்,பாதுகாப்பு தரப்பினர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்ததுடன் சம்பவத்தில் படுகாயமடைந்தவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்வதுடன் அவர்களது துன்பத்திலும் துயரத்திலும் நாங்களும் பங்கு கொள்கிறோம் என குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில் போர் முடிவுக்கு வந்த பின்னர் மீண்டும் குண்டு வெடிப்புகள்,மனித படுகொலைகள் தொடர்பான அச்சத்தை விதைத்துச் சென்றுள்ள இத்தாக்குதல் சம்பவங்கள் மனித குலத்திற்கு விரோதமானதாகும். சர்வதேச தீவிரவாத சக்திகளின் சதிவலைகளில் சிக்கிய சிலரது தீவிரவாத செயல் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதை இட்டு பெரிதும் கவலை அடைகிறோம்.
இஸ்லாத்தின் பெயரால் இத்தாக்குதலை மேற்கொண்ட ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர் எமதூரை சேர்ந்தவர்களைப் பயன்படுத்தியுள்ளமையை இட்டு நாம் வெட்கித் தலை குனிகின்றோம்.
இலங்கை முஸ்லிம்கள் கடந்த முப்பது வருட கால யுத்தத்திற்கு பின்னரும் பல்வேறு கசப்பான சம்பவங்களுக்கு முகம் கொடுத்த போதிலும் ஒரு போதும் வன்முறையை நாடவில்லை என்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம்.
சமாதான வழிகாட்டல்களையே அல் குர் ஆன் எங்களுக்கு போதிப்பதுடன் இஸ்லாம் ஒருபோதும் வன்முறையை அங்கீகரிக்கவில்லை.
ஏப்ரல் 21 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மதத்தின் பெயராலான மிலேச்சத்தனமான வன்முறையை இலங்கை முஸ்லிம்கள் சார்பாகவும் குறிப்பாக காத்தான்குடி முஸ்லிம்கள் சார்பாகவும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இத்தாக்குதல் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குழுவினர் மாத்திரம் குற்றவாளிகள் என்றும் இதற்கு முழு முஸ்லிம்களும் பொறுப்பாக மாட்டார்கள் என கிறிஸ்தவ சமூகத்தை சரியான முறையில் வழி நடாத்திய பேராயர் மதிப்புக்குரிய மல்கம் ரஞ்சித் அவர்களுக்கும், மட்டக்களப்பு கத்தோலிக்க திருச்சபையினருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் தெறிவித்தார்.
நாட்டின் சட்டம் ஒழுங்கைப் பேணி சமாதான சகவாழ்வினை இந் நாட்டில் வாழும் இனங்கள் மற்றும் சமயங்களுக்கூடாக கட்டியெழுப்ப கடந்த காலங்களைப் போலவே எதிர்காலத்திலும் எமது பூரணமான ஒத்துழைப்பை வழங்க காத்தான்குடி மக்களாகிய நாங்கள் உறுதியளிக்கிறோம் என தெறிவித்தார்.
இவ் ஊடகவியலாளர் சந்திப்பில் காத்தான்குடி சிவில் அமைப்புக்களின் சம்மேளனத்தின் உறுப்பினர்கள்,ஊடகவியலாளர் என பலரும் கலந்து கொண்டனர்.