நுஜா ஊடக அமைப்பு அறிக்கை
கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் திருநாளன்று தேவாலயங்களிலும் பிரபல ஹோட்டல்களிலும் மிலேச்சத்தனமான தாக்குதல்கள் நடாத்தப்பட்டு அப்பாவி மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டதை வன்மையாகக் கண்டிப்பதுடன் அதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் கையொப்பமிட்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கைத் திருநாடு மூன்று தசாப்தகால அழிவுகளிலிருந்து விடுபட்டு அமைதிப்புங்காவாக மிளிர்ந்து கொண்டு வந்த நிலையில் கடந்த ஞாயிறு தேவாலயங்களிலும் பிரபல ஹோட்டல்களிலும் இடம்பெற்ற மிலேச்சத்தனமான தாக்குதல்கள் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதுடன் இன ஐக்கியத்திற்கு குந்தகம் விளைவிக்குமா? என்ற பீதியையும் மக்கள் மத்தியில் தோற்றுவித்துள்ளது.
இந்நாட்டு வரலாற்றில் முஸ்லிம் சமூகம் ஏனைய சமூகங்களுடன் நல்லுறவுடன் வாழ்ந்து வருவதுடன் தேசத்தின் எழுச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும்,பாடுபட்டுள்ளனர். ஒரு குழுவினரின் வன்முறைத் தாக்குதலை ஒரு சமூகத்தின் மீது சாட்டுவதற்கு சில ஊடகங்கள் முனைவது கவலைக்குரிய விடயமாகும்.ஊடக தர்மங்களை மதித்து செய்திகளை வெளியிட வேண்டும்.
தங்களுடைய ஊடக நிறுவனத்தின் பிரபலத்திற்காக முந்திக்கொண்டு செய்திகளை வெளியிடுவதையும், இன ஐக்கியத்தை சிதைக்கும் செய்திகளை வெளியிடுவதையும் தவிர்த்துக் கொள்வது ஊடக நிறுவனங்களின் தலையாய பொறுப்பாகும்.
தமது சமூகத்தின் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை மேற்கொண்டு உயிர்கள் அழிக்கப்பட்ட போதிலும் மனிதத்துவத்தை வெளிப்படுத்திய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமைத்தவத்தை நன்றியுடன் தலைசாய்க்கின்றறோம்.
இனரீதியாக இந்நாட்டு மக்கள் பட்ட துன்பங்களும், துயரங்களும், இழப்புக்களும் வார்த்தையில் சொல்ல முடியாத ரணங்களாகும். அவ்வாறான துன்பியல் நிகழ்வுகள் இனியும் இந்நாட்டில்இடம்பெறக்கூடாது என்பதில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உறுதியுடன் இருப்பது சர்வதேசத்திற்கு மிகச்சிறந்த முன்மாதிரியாகும்.
அப்பாவி மக்கள் மீதான தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்ட குழுவினர் கடுமையான முறையில் தண்டிக்கப்படவேண்டும் என்பதை இந்நாட்டு முஸ்லிம்கள் அனைவரும் ஒருமித்த குரலில் வெளிப்படுத்தியுள்ளனர்.
முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பொறுப்பு வாய்ந்த அமைச்சர்களும் நெருக்கடியான இக்காலகட்டத்தில் சமூகத்தின் நலனை முன்னிறுத்தி செயல்படுவதையும் எமது அமைப்பு நன்றியுடன் பார்க்கின்றது.
நெருக்கடியான இக்காலகட்டத்தில் அரசியல் ரீதியான இலாபத்திற்காக சில அரசியல்வாதிகள் முஸ்லிம் அரசியல்திகளை சம்பந்தப்படுத்தி கருத்துக்களை முன்வைப்பது மிகவும் கண்டிக்கப்பட வேண்டியதாகும்.
இந்நாட்டில் பயங்கரவாதம் புண்டோடு அழிக்கப்பட்டு சகல இன மக்களும் நிம்மதியாக சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும் என்பதே எல்லோரினதும் விருப்பமாகும். அதற்காக ஊகவியலாளர்கள் இனபாகுபாட்டைக் களைந்து பணியாற்ற வேண்டும் என்பதை எமது அமைப்பு வலியுறுத்துகின்றது.