அதேபோன்று, கடந்த இரண்டு வருடங்களாகவே, தனது சகோதரனுடன், தான் எவ்விதத் தொடர்பையும் கொண்டிருக்கவில்லை என்றும் அவர் எவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டார் என்பது தொடர்பில், தனக்கு எதுவும் தெரியாதென்றும், அவர் மேற்கொண்ட மிலேச்சதனமாக செயற்பாடுகளைத் தான் வன்மையாகக் கண்டிப்பதாகவும், சஹ்ரானின் சகோதரி தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களாகவே, தனது சகோதரன் தலைமறைவாகவே வாழ்ந்து வந்ததாகவும், சகோதரி தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான், ஐந்து பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தின் கடைசிப் பிள்ளையாவார். இவருக்கு, தற்போது 40 வயதாகிறது.
இந்நிலையில், இவ்வாறான தாக்குதல் சம்பவத்தைத் தனது சகோதரன் மேற்கொண்ட விடயம் தொடர்பில், ஊடகங்களூடாகவே தான் அறிந்துகொண்டதாகவும் தன்னுடைய அண்ணனாக இருந்தாலும், இதைத் தான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும், சஹ்ரானின் சகோதரி தெரிவித்துள்ளார்.
“சிறு பராயாத்தில், நாங்கள் அனைவரும் மிகவும் ஒற்றுமையாகவே வாழ்ந்து வந்தோம். இரண்டு வருடங்களுக்கு முன்னர் தான், அவரில் மாற்றம் ஏற்பட்டது. அவர் இணைந்துகொண்ட குழுதான், அவரை மாற்றியிருக்கும் என்று நம்புகின்றேன். எவ்வாறாயினும், அவர் செய்த விடயங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. இப்படி அவர் செய்வார் என்று நாம் எதிர்பார்க்கவும் இல்லை” என, அந்தச் சகோதரி மேலும் கூறியுள்ளார்.