கலந்பிந்துனுவெவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சிவலாக்குளம் ஸ்ரீ சீவலி ரஜ மஹா விகாரையில் மிக நீண்டகால தேவையாக காணப்பட்ட பிக்குகள் தங்கும் வீட்டினை அமைப்பதற்கு கம்பெரலிய செயற்றிட்டத்தின் மூலம் நிதியொதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான அடிக்கல் ஐக்கிய தேசிய கட்சியின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானினால் நடப்பட்டது.
குறித்த நிகழ்வோடு அப்பிரதேசத்தில் இயங்கி வரும் விசேட தேவையுடையை பிள்ளைகளுக்காய் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புதுவருட கொண்டாட்ட நிகழ்விலும் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் கலந்துகொண்டார்.
இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அங்கு கருத்து தெரிவிக்கையில்,
நீர், மலை, மழை, வெயில், காடு என சகல வளங்களும் நிறைந்து காணப்படும் நம் நாடு ஏன் இன்னும் முன்னேறவில்லை? இவற்றுக்கு முழுக் காரணமும் எமது நாட்டை ஆளும் அரசியல் வாதிகளே. அன்றுDS.சேனாநாயக்க, சேர்.அருணாசலம் பொன்னம்பலம், ராசிக் பரீட் ஆகியோர் நமது நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி கொடுக்கையில் ஒரு சதமேனும் கடனற்ற நாடாக காணப்பட்ட நம் நாடு இன்று 8500 பில்லியன் ரூபாய்கள் கடன் நிறைந்த நாடாக காணப்படுகின்றது. நிலைமை இவ்வாறே செல்லுமானால் இன்னும் சில நாட்களில் வெறும் பூமி மட்டுமே நம் சந்ததிகளுக்கு மீதமாகும்.
இவ்வளவு வளமும் நிறைந்த நாட்டில் மின்சார பிரச்சினைக்கு நாம் முகம் கொடுத்து வருகின்றோம். இந்நிலைமை குறித்து முன்னாள் மின்வலு சக்தி அமைச்சர் வெட்கப்படவேண்டும். அவர் அன்று ஆடைகளுக்கு நடுவில் கை வைத்துக்கொண்டு உறங்கிக்கிடந்தார். அன்று அவர் இந்த நாட்டிற்கு மாபெரும் சாபக்கேடாக அமைந்தார். அவருடன் பாராளுமன்றில் இருக்கும் ஓர் மந்திரியாக நானும் வெட்கப்படுகின்றேன். அவர் இவற்றுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். இவ்வாறு நம் நாட்டை பின்தங்கிய நிலைமைக்கு தள்ளிச்செல்லும் அரசியல்வாதிகள் நம் நாட்டில் காணப்படும்போது நம் நாடு எவ்வாறு முன்னேற்றத்தை காணும் என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டும்.
இனி வரும் காலங்களிலாவது இன, மத, குல பேதங்களை மறந்து நாம் அனைவரும் ஒன்று பட்டால் மாத்திரமே நம் நாட்டை வெற்றிப்பாதையில் இட்டுச்செல்ல முடியும் என்பதனை நாம் அனைவரும் புரிந்து செயல்படவேண்டும். என தெரிவித்தார்,
ஐ.எம்.மிதுன் கான்
கனேவல்பொல