கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார்.
பி.எம்.எம்.ஏ.காதர்-
மருதமுனை ஹரீஷாவின் கவிதைகள் சமூகத்தில் இருக்கின்ற பல விடையங்களை வெளியே கொண்டு வரும் வகையில் மனம் கவரக்கூடிய வகையில் சிறப்பாக இருக்கின்றது என கிழக்கு மாகாண சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார் தெரிவித்தார்.
மருதமுனை ஹரீஷா எழுதிய 'சொட்டும் மிச்சம் வைக்காமல்' கவிதை நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை(07-04-2019)மருதமுனை மருதூர்க்கனி பொது நூலக கேட்போர் கூடத்தில் எழுத்தாளர் மர்ஹூம் மருதூர் வாணர் நினைவரங்கில் நடைபெற்றது.இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பிறை எப்.எம்.கட்டுப்பாட்டாளர் பஷீர் அப்துல் கையூம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கௌரவ அதிதிகளாக பேராசிரியர்களான செ.யோகராசா,றமீஸ் அப்துல்லா ஆகியோருடன் விஷேட அதிதியாக எழுத்தாளர் உமா வரதராஜன் கலந்து கொண்டார்.
ஆசிரியரும்,ஊடகவியலாளரும்,விமர்சகருமான ஜெஸ்மி எம்.மூஸா நூல் நயவுரை நிகழ்த்தினார்.நூலின் முதல் பிரதியை சிரேஷ்ட சட்டத்தரணியும்,பதில் நீதிபதியுமான ஏ.எம்.பதுறுதீனின் சார்பில் கலந்து கொண்ட அவரது ஜூனியர் சட்டத்தரணி ராஸிம் ஹமீட் பெற்றுக்கொண்டார்.விஷேட மற்றும் சிறப்புப் பிரதிகளை கல்முனை ஏ.எம்.எம்.இன்ஜினியரிங் கன்ஸ்ரக்ஷன் முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.எம்.எம்.முஸம்மில்,மருதமுனை எவபெஸ்ட் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.எச்.அஹமட் அஜ்மீர் ஆகியோரும் பெற்றுக் கொண்டனர்.
இங்கு ஏ.எச்.எம்.அன்சார் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது:-ஹரீஷாவின் கவிதைகள் ஒவ்வொரு மனித உள்ளங்களிலும் ஏற்படுகின்ற உணர்வுகளை வெளிக்கொண்டு வந்திருக்கின்றது.1980ஆம் ஆண்டு பிறந்த ஹரீஷா 2019ஆம் ஆண்டுக்குள் இரண்டு கவிதைப் புத்தகங்களைத் தந்திருப்பது மிகவும் சிறப்பான விடையமாகும்.அவரது படைப்புக்கள் பற்றி மிகவும் சிறப்பாகப் பேசப்படுகின்றது.
இப்போது எந்தத்துறையை எடுத்துக் கொண்டாலும் பெண்களின் பங்களிப்பு கணிசமாக இருந்து வருவதை நாங்கள் காண்கின்றோம்.ஆசிரியத் துறையிலே எண்பது வீதமானோர் பெண்களாகத்தான் இருக்கின்றார்கள்.அதே போன்று காரியலயங்களை எடுத்துக் கொண்டாலும் அதிலும் பெண்களின் பங்களிப்பு அதிகமாகவே இருக்கின்றது.ஆண்களெல்லாம் எங்கே பொய்விட்டார்கள்,என்ன செய்கின்றார்கள் என்று தெரியவில்லை.எதிர்காலம் பெண்களாலேயே நிரம்பி அவர்களின் கைமேலோங்கும் நிலை உருவாகிக் கொண்டிருக்கின்றது.
எதிர்காலத்திலே இந்த உலகத்தை இந்த நாட்டை நிருவகிக்கக் கூடியவர்களாக பெண்களே வருவார்கள் என்பதில் எந்த விதமான சந்தேகங்களும் இல்லை.ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.சினாஸ் நிகழ்வைத் தொகுத்து வழங்கினார். தென்கிழக்கு அஷ்ரப் சமூக சேவைகள் நிறுவனம் நூலை வெளியீடு செய்;தது.
இந்த விழாவில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கே.எம்.ஏ.றஸாக்(ஜவாத்),எழுத்தாளர் வபா பாறூக், முத்த எழுத்தாளர் மு.சடாட் சரன்.ஓய்வு பெற்ற காதி நீதிபதி என்.எம்.இஸ்மாயில் உள்ளீட்ட பெரும் அளவிலான தமிழ் முஸ்லிம் கவிஞர்களும்,எழுத்தாளர்களும்,பிரமுகர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.