சாய்ந்தமருது-ஒரு நாட்டில் யுத்தம் அல்லது அரசியல் வன்முறைகள் ஏற்பட்டால் அதில் முதலில் பாதிக்கப்படுவதும், கொல்லப்படுவதும் அப்பாவி பொதுமக்களாகும். அந்தவகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடாத்தப்பட்ட பரவலான குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் எதுவு அறியாத அப்பாவிகள்.
சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு இரத்ததானம் வழங்குவதிலும் மற்றும் உதவிகள் செய்வதிலும் முஸ்லிம் இளைஞ்சர்கள் முன்னின்று செயல்பட்டது பாராட்டத்தக்கது.
கிறிஸ்தவ தேவாலயங்களையும், நட்சத்திர ஹோட்டல்களையும் இலக்குவைத்து தாக்கியதனால் இது சர்வதேசத்தின் முழுக்கவனத்தினையும், குறிப்பாக அமெரிக்கா போன்ற மேற்குநாடுகளின் பார்வையை அதிகம் ஈர்த்துள்ளது.
இந்த தாக்குதல் நாடுதழுவிய ரீதியில் ஒரே நேரத்தில் நடாத்தப்பட்டதனால், இது நீண்ட நாட்களுக்கு முன்பு நன்கு திட்டமிடப்பட்ட ஒரு தாக்குதலாகும்.
இதன் பின்னணியில் பாரிய பலமுள்ள சக்திகள் இல்லாமல், சாதாரணமாண ஒரு சிலரால் இவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்டதும், உயர் தொழில்நுட்பம் உடையதுமான தற்கொலை தாக்குதலை நடாத்த முடியாது என்று சம்பவம் நடந்த உடனே ஊகிக்கப்பட்டது.
இதனை நடாத்தியவர்கள் யார் என்பதில் ஆரம்பத்தில் பாரிய குழப்பம் இருந்தது. முஸ்லிம் இளைஞ்சர்கள் கைது செய்யப்பட்டதன் பின்பு இதனை முஸ்லிம் தீவிரவாதிகள்தான் செய்துள்ளார்கள் என்று பரவலாக முஸ்லிம்களை நோக்கி விரல் நீட்டப்பட்டது.
ஐ எஸ் உட்பட உலகில் உள்ள இஸ்லாமிய இயக்கங்கள் ஏதாவது தாக்குதலை நடத்தினால் உடனடியாக உரிமை கோரிவிடுவார்கள். ஆனால் இந்த தாக்குதல் நடாத்தப்பட்டு இரண்டு நாட்களின் பின்பே குறித்த இயக்கம் உரிமை கோரியது.
இவ்வளவு தாமதித்து இந்த தாக்குதலுக்கு ஐ எஸ் இயக்கத்தினர் உரிமை கோரியதிலும் குழப்பங்கள் உள்ளது.
கடந்தகாலங்களில் முஸ்லிம்களை தாக்கி பொருளாதாரத்தினை சேதமாக்கி மார்க்க கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பௌத்த தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடாத்தியிருந்தால், இதனை ஓர் பழிவாங்கும் நடவடிக்கை என்று எண்ணியிருக்கலாம்.
ஆனால் இந்நாட்டில் உள்ள முஸ்லிம்களோடு எந்தவித விரோதமும் இல்லாத அப்பாவி கிருஸ்தவர்களுக்கு எதிராக தாக்குதல் நடாத்தியதன் மூலம் இது ஓர் சர்வதேச வலைப்பின்னல் மூலம் நடைபெற்ற தாக்குதல் என்று சந்தேகிக்கப்பட்டது.
ஆரம்பத்தில் இந்த தாக்குதளுடன் வெளிநாட்டு சக்திகளுக்கு தொடர்பில்லை என்று பாதுகாப்பு தரப்பினர்கள் கூற, இதில் வெளிநாட்டு தொடர்பு உள்ளது என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருந்தார்.
எந்த இயக்கமும் உரிமைகோராத நிலையில் அரச தரப்பிலிருந்து வெளியான இவ்வாறான ஒன்றுக்கொன்று முரண்பாடான கருத்துக்கள் மூலம் மக்கள் மத்தியில் இன்னும் குழப்பங்கள் அதிகரித்தது.
இந்த சந்தேகங்களை இன்னும் உறுதிப்படுத்தும் வகையில் சர்வதேச பொலிசாரினதும், அமெரிக்க ஜனாதிபதியினதும் அறிக்கைகள் அமைந்தது.
அதாவது முப்பது வருடங்கள் இந்த நாட்டில் பாரிய யுத்தம் ஒன்று நடைபெற்றபோது அதற்கு உதவி செய்ய தயார் என்று சர்வதேச போலீசாரோ அல்லது அன்றைய அமெரிக்க ஜனாதிபதியோ பகிரங்கமாக அறிவித்ததில்லை.
ஆனால் இந்த தாக்குதளின் பின்பு இவ்வாறு பகிரங்கமாக இலங்கைக்கு உதவ தயார் என்று அறிவித்ததன் மூலம் இதனை ஐ எஸ் இயக்கத்தினர்தான் நடாத்தி உள்ளார்கள் என்பதனை அவ்வியக்கம் ஏற்றுக்கொள்ள முன்பே அமெரிக்கா முன்கூட்டியே அறிந்துள்ளது என்பதனை காட்டுகின்றது.
அமெரிக்காவின் உதவிக்கரம் அறிவிக்கப்பட்டு இரண்டு நாட்கள் கடந்த நிலையில், 99 வருடங்கள் சீனாவுக்கு குத்தகைக்கு விடப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அமெரிக்க போர்க்கப்பல் வந்து சேர்ந்ததானது இன்னும் பல சந்தேகங்களை ஏற்படுத்தினாலும், சில நாட்கள் சென்றபின்புதான் இந்த குழப்பங்களுக்கு முழுமையான விடை கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.