தேவையான வாகனவசதியின்மையால் குடிநீரை பூரணமாக விநியோகிக்கமுடியாதநிலை!
திருக்கோவில் பிரதேசசபைத்தவிசாளர் கமலராஜன் கவலை!
காரைதீவு நிருபர் சகா-வரட்சியாலும் குழாய்நீர் துண்டிப்பாலும் எமது திருக்கோவில் பிரதேசத்தில் சுமார் 20ஆயிரம் பேர் மிகமோசமாகப்பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பூரணமாக குடிநீரை விநியோகம் செய்ய எமது சபையிடம் போதுமான பவுசர் வாகனவசதிகள் இல்லை
இவ்வாறு திருக்கோவில் பிரதேசசபைத் தவிசாளர் இராசையா வில்சன் கமலராஜன் தெரிவித்தார்.
திருக்கோவில் பிரதேசத்தில் பின்தங்கிய பகுதிகளிலுள்ள பொதுமக்கள் குடிநீரின்றி அலைவதாக தகவல்கள் கிடைக்கின்றனவே . அதுபற்றி என்ன தெரிவிக்கிறீர்கள் என்று கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
எமது பிரதேசத்திற்கு பிரதானமாக குடிநீரை விநியோகிக்கின்ற சாகாமம் நீர்சுத்திகரிப்பு மையம் கடந்த ஒருவாரகாலமாக குழாய்நீர்விநியோகத்தை நிறுத்தியுள்ளது. சாகாமக்குளத்தில் தண்ணீர் வற்றிப்போனமையே அதற்குக் காணரம்.
இதனால் எமது பிரதேசத்தில் சுமார் 2350குடும்பங்களைச்சேர்ந்த 20ஆயிரம் பேர்; மிகவும் மோசமாக குடிநீரின்றிப் பாதிக்கப்பட்டுள்ளனர்..
குறிப்பாக குழாய்நீர்விநியோகம் அரையும்குறையுமாகவுள்ள அதாவது 40வீதத்தைப்பெறும் கஞ்சிகுடிச்சாறு காஞ்சிரன்குடா தங்கவேலாயுதபுரம் ஸ்ரீவள்ளிபுரம் மண்டானை குடிநிலம் சாகாமம் தாண்டியடி நேருபுரம் போன்ற கிராமங்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு ஒருதுளி தண்ணீர்கூட இல்லை.
இவர்களுக்கு பிரதேசசபையும் பிரதேசசெயலகமும் இணைந்து 2 நீர் பவுசர்களில் மக்களுக்கு குடிநீரை மட்டும் வழங்கிவருகின்றது. நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபையும் ஒருபவுசரில் குடிநீர் வழங்கிவருகின்றது.
நாம் அக்கரைப்பற்று 2ஆம் கட்டையடிக்குச் சென்று பவுசரில் இந்த தண்ணீர்கொண்டுவரப்படுகின்றது. இதனால் நாளொன்றுக்கு 2 தடவைகள்தான் கொண்டுவரமுடியும்.
போதுமான குடிநீரை விநியோகம் செய்ய எமது சபையிடம் போதுமான பவுசர் வாகனவசதிகள் இல்லை.ஆக ஒரேயொரு ட்ராக்டர் பவுசர் மட்டுமே வேலைசெய்கிறது. மீதி இரு பவுசர்களும் பழுதுபார்க்கப்பட்டுவருகின்றன. அவசரதிருத்த வேலைகளுக்கு அவை உள்ளாக்கப்பட்டுள்ளன.
எம்மிடம் தீயணைப்புப்படையோ அதற்கான வாகனங்களோ ஆளணியோ இல்லை.ஆனால் அண்மையில் திருக்கோவிலில் இருகடைகள் தீப்பற்றிஎரிந்தபோது எமதுசபையின் தீயணைப்புவாகனங்கள் ஸ்தலத்திற்குச்செல்ல தாமதமடைந்ததால் அக்கரைப்பற்று மாநகரசபையிலிருந்து அந்த வாகனம்வந்து தீயணைத்ததாக பொய்யான செய்திகள் ஊடகங்களில் வெளிவந்தன. உண்மையில் எமதுசபையிடமோ மாவட்டத்தில் எந்தவொரு பிரதேசசபையிடமுமோ தீயணைப்புவாகனவசதியில்லையென்பதை அனைவரும் அறிவார்கள்.
மேலும் வழங்கப்படும் குடிநீர் அவர்களுக்கு குடிப்பதற்குக்கூட போதுமானதல்ல.
ஏனைய குளிப்பு மலசலப்பாவனை உடுப்புத்துவைத்தல் போன்ற இன்னொரன்ன தேவைகளுக்கு அந்த மக்கள் நீண்டதூரம் சிறுகுளங்களை நாடவேண்டியுள்ளது. அவையும் தற்போது படிப்படியாக வற்றிவருகின்றன.
இதேவேளை குழாய்நீர் விநியோகத்தில் 60வீதமான வழங்கலைப்பெறும் தம்பட்டை தம்பிலுவில் திருக்கோவில் வினாயகபுரம் போன்ற கிராமங்களில் ஆங்காங்கே சொந்தக்கிணறுகளிருப்பதனால் ஒருவாறு சமாளித்துவருகின்றார்கள். வரட்சி நீடித்தால் அவர்களும் மேற்சொன்ன பிரச்சினைகளை எதிர்நோக்குவார்கள்.
உண்மையில் வருடாவருடம் எழுகின்ற இப்பாரிய பிரச்சனையைத்தீhக்கவேண்டுமாயின் அம்பாறை பன்னலகம குளத்திலிருந்து நீரை நேரடியாக இங்குகொண்டுவரும் பட்சத்தில் இதனை நிரந்தரமாக தீhக்கமுடியும்.
எனினும் இதனை தற்காலிகமாகத்தீர்த்துவைக்க கடந்ததடவைபோன்று நாமும் பிரதேசசெயலகமும் நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபையினரும் இணைந்து ஒரு கூட்டத்தைக்கூட்டி நடவடிக்கை எடுப்போம். என்றார்.
திருக்கோவில் பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜன் கூறுகையில்:
உண்மையில் இப்பரச்சினையைத்தீர்ப்பதாயின் மழையைத்தவிர வேறு மார்க்கம் இல்லை. அது இறைவனின் சித்தம். இருந்தும் திருக்கோவில் பிரதேச குழாய்நீர் விநியோகத்தை சீராகவும் தாராளமாகவும் வழங்குவதென்றால் ஒரு புதிய திட்டத்தை ஆரம்பிக்கவேண்டும்.
அதாவது கொண்டவட்டவான் நீர்த்தேக்கத்திலிருந்து அக்கரைப்பற்றுக்கு நீர்த்தொட்டிக்குவரும் நீரை அங்கிருந்து நேரடியாக சாகாமத்திற்கு விநியோகம் செய்யும்வண்ணம் ஒரு திட்டத்தை முன்னெடுத்தால் இது சாத்தியமாகும்.
இதற்கு 200மில்லியன் ருபா செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் இதில் கவனமெடுத்தால் திருக்கோவிலுக்கான குழாய்நீர் விநியோகத்தை சீர்படுத்தி அந்த மக்களின் தேவையை பூர்த்திசெய்யமுடியும். என்றார்.