திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியில் தரம் 7 ஆங்கில பிரிவில் கல்வி பயிலும் ஆண், பெண் மாணவர்கள் 21 பேர் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் திடீரென 24.05.2019 அன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வகுப்பறையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரிப்பு மற்றும் கொப்பழங்கள் கை மற்றும் முதுகு பகுதிகளில் ஏற்பட்டதை தொடர்ந்து இம்மாணவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கல்லூரியில் குறித்த வகுப்பறையை பொது சுகாதார பரிசோதக அதிகாரிகளின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இக்கல்லூரியில் தௌ்ளு பூச்சிகள் இம்மாணவர்களை தாக்கியிருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டிருந்த போதிலும் அங்கு அவ்வாறான நிலை ஏற்படவில்லை என கல்லூரியின் ஆசிரியர்கள் தெரிவித்தனர். அத்தோடு மாணவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சம் கொண்ட போதிலும் அவ்வாறானதொரு நிலைமையும் இல்லை.
இவ்வாறிருக்க இவ் வகுப்பறையில் மாத்திரம் கல்வி பயிலும் 21 மாணவர்களுக்கு திடீரென 24.05.2019 அன்று காலை கைகள் மற்றும் முதுகு பகுதிகளில் அரிப்பு ஏற்பட்டு கொப்பழங்கள் உருவாகியமைக்கான காரணங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
ஆகையினால் மாணவர்களை விசேட வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இதற்கான காரணங்களை அதிபர் உள்ளிட்ட ஆசிரியர்களும் இப்பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பிரிவினரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.