பதிவு செய்யப்படாத டியூட்டரிகள் மீது பொலிஸ் நடவடிக்கை
அஸ்லம் எஸ்.மௌலானா-
தற்போதைய பாதுகாப்பு நிலைமையை கருத்தில் கொண்டு கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் இடம்பெறும் அனைத்து பிரத்தியேக வகுப்புகளும் (டியூஷன்) மாலை 5.00 மணியுடன் நிறைவு செய்யப்பட வேண்டும் என கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அறிவுறுத்தியுள்ளார்.
அதேவேளை கல்முனையில் இயங்கும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களும் கல்முனை மாநகர சபையில் உடனடியாக பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநரின் ஆலோசனைக்கமைவாக இத்தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.
மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தனியார் கல்வி நிலையங்களில் மாலை 5.00 மணிக்குப் பின்னர் வகுப்புகள் நடத்தப்படுவது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும் என்றும் வகுப்புகள் இடம்பெறுகின்ற பகல் நேரங்களில் கூட தமது கல்வி நிலையங்களின் பாதுகாப்பை அவற்றின் நடத்துனர்களும் ஆசிரியர்களும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.
கல்முனை மாநகர சபை எல்லைக்குள் இயங்கி வருகின்ற அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் கல்முனை மாநகர சபையில் துரிதமாக பதிவு செய்வதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளமையால் அவற்றின் உரிமையாளர்கள் உடனடியாக அதற்கான நடவடிக்கையை முன்னெடுக்குமாறும் பதிவு செய்யப்படாத தனியார் கல்வி நிலையங்கள் யாவும் பொலிஸ் நடவடிக்கைக்குட்படுத்தப்படும் எனவும் முதல்வர் ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.