ப-. இதனை ஒரு பயங்கரவாதமாகவே நாம் பார்க்கின்றோம். இதனை சிலர் இஸ்லாமிய பயங்கரவாதம் என்று இஸ்லாத்துடன் இணைக்கப்பார்க்கின்றனர். இது முற்றிலும் தவறான கருத்து. இஸ்லாம் பயங்கரவாதத்தை முற்றாக தடை செய்துள்ளது. தற்கொலைத் தாக்குதல் இஸ்லாத்தில் இல்லை. தற்கொலையாளி இஸ்லாத்தில் தண்டிக்கப்படுவார். அவருக்கு நரகம் இருக்கின்றது என்று கூறப்பட்டுள்ளது. அதேபோன்று "ஒருவரின் உயிரை காப்பாற்றுவது முழு சமுதாயத்தினதும் உயிரைக் காப்பாற்றுவதற்கு சமன். ஒருவரை கொலை செய்வது முழுசமுதாயத்தினையும் கொலை செய்வதற்கு சமன்" என எமது மார்க்கத்தில் கூறப்பட்டுள்ளது எனவே இஸ்லாமிய பார்வையில் இது ஒரு பயங்கரவாதம். இதனை நானும் எமது சமூகமும் எனது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரசும் வன்மையாக கண்டிக்கின்றோம். இந்த பயங்கரவாத நடவடிக்கையில் பாதிக்கப்பட்ட கத்தோலிக்க சகோதரர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கின்றோம். அவர்களின் துயரத்தில் நாமும் பங்குகொள்கின்றோம். மரியாதைக்குரிய மல்கம் ரஞ்சித் அவர்களை சந்தித்து எமது வேதனைகளை பகிர்ந்துகொண்டோம். பயங்கரவாதம் துடைத்தெறியப்பட வேண்டும் அதேபோன்று இதனை துடைத்தெறிவதற்கான முழு வேலைத்திட்டத்தையும் அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும். நானும் எமது சமூகமும் பூரண ஒத்துழைப்பை இதற்கு வழங்குவோம்.
கே.- இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற பின்னர் உங்களின் பெயர் பரபரப்பாக பேசப்படுகின்றது. குறிப்பாக தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களுடன் நீங்கள் நெருங்கிய உறவைப் பேணி வந்ததாக ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் செய்திகள் வெளிவந்துள்ளன. இது குறித்து உங்களது கருத்தென்ன?.
ப.- இந்த பயங்கரவாத நடவடிக்கையுடன் சம்பந்தப்பட்டவர்களுடனோ அல்லது இந்த பயங்கரவாதத்துடனோ எந்த தொடர்பும் எனக்கு கிடையாது. வர்த்தக அமைச்சர் என்ற வகையில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய தற்கொலையாளி ஒருவரின் தந்தை ஒரு வர்த்தகராகவும் கொழும்பு வர்த்தக சங்கத்தின் தலைவராகவும் இருந்த வகையில்,வர்த்தகர்களின் பிரச்சினை குறித்து அந்த சங்கம் என்னைசந்தித்து முன்னர் ஒருமுறை பேசினார்கள். அந்த நிகழ்வின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு முதலில் என்னை இதனுடன் சம்பந்தப்படுத்தினர். அதன் பின்னர் இப்போது ஒவ்வொரு கோணத்திலும் என்னை குறிவைத்து தாக்குகின்றார்கள்.
பயங்கரவாதத்திற்கு மதம் இல்லை. இனம் இல்லை. குலமில்லை. பயங்கர வாதம் என்று வரும் போது எவர் செய்தாலும் கண்டிக்கின்றோம். அவ்வாறானதொரு நிலைப்பாட்டில் இருப்பவன் நான். இதில் வேண்டுமென்றே என்னை சம்பந்தப்படுத்தி வீண்பழி சொல்லுகிறார்கள். தற்போது விசாரணை இடம் பெறுகின்றது. கைதுகள் தொடர்கின்றன. விசாரணையை மேற்கொள்வோர் எதனையும் இன்னும் வெளிப்படுத்தவில்லை .ஆனால் அரசியல்வாதிகள் தான் இவ்வாறான கதைகளை கட்டவிழ்த்து விடுகின்றனர். அவ்வாறானவர்கள் யார் என்றால் 52 நாள் சட்டவிரோத அரசாங்கத்திற்கு ஆதரவு தருமாறு எம்மை கெஞ்சி அழைத்தவர்கள். நாங்கள் அதற்கு இணங்கத்ததால் இந்த சம்பவத்தை எம்மை பழிதீர்க்கும் துரும்பாக பயன்படுத்துகின்றனர். நான் எந்த பயங்கரவாதத்துடனும் தொடர்புபட்டவன் அல்ல. பயங்கரவாத நடவடிக்கைகளை எந்த காலத்திலும் எதிர்த்து வருபவன்.
கே. -கடந்த 17ம் திகதி அனைத்து பாதுகாப்பு பிரிவினருக்கும் முக்கியமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு தாக்குதல் தொடர்பில் தகவல் பரிமாறப்பட்டு இருக்கின்றது. உங்களது பாதுகாப்பு பிரிவினருக்கும் இந்த தகவல் கிடைத்ததா?.
ப-.சம்பவம் நடந்த பின்னர்தான் இவ்வாறாதொரு தகவல் தமக்கு வந்ததாக அவர்கள் சொன்னார்கள். முதல் நாள் தான் வெளிநாட்டில் இருந்து வந்திருந்தேன். தங்களுக்கு அமைச்சர்களின் பாதுகாப்பு தொடர்பில் சொல்லப்பட்டதாக பாதுகாப்பு பிரிவினர் எனக்கு சொன்னார்கள். அதாவது அமைச்சர்களுடைய பாதுகாப்பை பலப்படுத்திக்கொள்ளுமாறு தமக்கு அறிவிக்கப்பட்டதாக சொன்னார்களே ஒழிய இவ்வாறான அனர்த்தம் தொடர்பில் அவர்களுக்கு சொல்லப்படவில்லையெனவும் அமைச்சர்களின் பாதுகாப்பு தொடர்பிலே தமக்கு செய்திவந்ததாகவும் சொன்னார்கள். அதுவும் இந்த சம்பவத்தின் பின்னர்தான் எனக்கு சொல்லப்பட்டது.
கே. இஸ்லாமிய அடிப்படைவாதம் அல்லது போராட்ட வடிவங்கள் உலகில் காணப்படுகின்றன இதன் உண்மைத் தன்மை என்ன? பின்னணிகள் என்ன?
ப.இந்தப் போராட்டங்களை இஸ்லாத்திற்கு எதிரான போராட்டங்களாவே நான் பார்க்கின்றேன் இஸ்லாத்தில் இவ்வாறு எங்குமே சொல்லப்படவில்லை. அதாவது தாய்மார்களை, சிறுவர்களை அப்பாவிகளை, கொலைசெய்யுமாறோ மதத்தலங்களுக்குள் புகுந்து இவ்வாறான குரூர நிகழ்வுகளை நிகழ்த்துமாறோ எதிலுமே சொல்லப்படவில்லை. குர் ஆனிலும் ஹதீஸிலும் இவ்வாறு எதுவும் சொல்லப்படவில்லை இஸ்லாம் தூய்மையான மார்க்கம். இஸ்லாமிய பயங்கரவாதம் என்று எவராவது சொன்னால் அது பிழையானது. இஸ்லாத்தின் பெயரால் இஸ்லாமியர்கள் சிலரை பிழையாக வழிநடத்தி பயங்கரவாத செயலை மேற்கொண்டு நாட்டிலும் உலகத்திலும் உள்ள முஸ்லிம்களை நிம்மதி இழக்க செய்யும் மோசமான செயற்பாடே இது.
கே-. இவ்வாறான பிரசினைகள் எங்கே உருவானது.?
ப. இது இன்று நேற்று உருவாக்கப்பட்டவை அல்ல. மத்தியகிழக்கில் உள்ள முஸ்லிம் நாடுகள் சிறந்த வளங்களையும் செல்வத்தையும் கொண்டவை என்பது உங்களுக்கும் தெரியும். எனினும் இத்தகைய வளங்களை கொண்டிருந்தும் அங்கே நிம்மதி இல்லை யுத்தமும் கொலைகளும் அடிக்கடி இடம்பெறுகின்றன. இதற்கு பின்னாலே பெரிய சக்தியொன்று இருக்கின்றது. பயங்கரவாதிகளுக்கும் அரச ராணுவத்திற்கும் பயிற்சி வழங்குகின்றார்கள். ஆயுதங்களை உற்பத்தி செய்து இரு சாரார்களையும் ஆயுத கொள்வனவிற்குள் தள்ளுகிறார்கள். அப்பாவி முஸ்லி ம் இளைஞர்களை இஸ்லாத்தின் பெயரை சொல்லி இவ்வாறான மோசமான நடவடிக்கையில் நாட்டம்கொள்ளவைக்கும் பாரிய சதியே இது. உலகம் பூராகவும் பயங்கரவாதம் வியாபித்து இருக்கிறது.
கே.-இவ்வாறான ஒரு தாக்குதல் சம்பவம் குறித்து அரசாங்கத்திற்கு முற்கூட்டியே அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அரசின் பங்குதாரரான உங்களுக்கும் இவ்வாறான தகவல்கள் பரிமாறப்பட்டதா???
ப. எனக்கு நேரடியாக சொல்லப்பட வில்லை. அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவும், மேல்மாகாண ஆளுநர் அசாத் சாலியும் இவ்வருடம் ஜனவரியில் குறிப்பிட்ட கொலைகார கூட்டத்தின் தலைவர் என சொல்லப்படும் சஹ்ரானின் ஒளிப்பதிவு நாடா ஒன்றையும் அவர் தொடர்பான தகவல்கள் அடங்கிய ஆவணங்களையும் பாதுகாப்பு அமைச்சில் சமர்ப்பித்து அவரின் உரை இஸ்லாமிய இளைஞர்களை பிழையான பாதையில் இட்டு செல்லக்கூடியது எனவும் வழிகெடவைக்கும் எனவும் கூறியதுடன் பயங்கரவாத செயற்பாட்டுடன் சஹ்ரானின் உரை தொடர்பு பட்டுள்ளதாக தெரிவித்தது மாத்திரம் இன்றி இதற்கு நடவடிக்கை எடுங்கள் என்றும் வேண்டி இருந்தனர். அவ்வாறு வழங்கப்பட்டு இருந்தும் ஏப்ரல் மதம் 21ம் திகதி வரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பாதுகாப்பு தரப்பு அலட்சியமாக இருந்தமை வேதனை தருகின்றது. எனவே ஆளைஆள் குறைகூறிக்கொண்டு இருக்காமல் இனியாவது நடவடிக்கையை துரிதப்படுத்தி பயங்கரவாதிகளை பூண்டோடு களைவது அரசின் பொறுப்பாகும்.ஜனாதிபதியும் பிரதமரும் வெவ்வேறு பாதைகளில் செல்வது போன்ற பிரதிமை தெரிகின்றது. இனியாவது இருவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அது மாத்திரமின்றி எதிர்க்கட்சி தலைவர் மஹிந்தவும் இந்த நடவடிக்கைக்காக கைகோர்த்து செயற்படவேண்டும். அத்துடன் அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு பயங்கரவாதத்தை அளிக்க முன்வரவேண்டும் என பகிரங்கமாக இந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில் அழைப்புவிடுக்கின்றேன்.
கே.- பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதிக்கு உளவுத்துறையின் தகவல் கிடைக்கவில்லையென கூறப்படுகின்றதே ?
ப.- இதனை நினைத்து நான் வேதனைப்படுவதை தவிர என்ன கருத்தை சொல்லமுடியும். ஜனாதிபதி யிடம் தான் இது தொடர்பில் கேற்க வேண்டும்?
கே.- இந்திய உளவுத்துறை உட்பட பல்வேறு உளவுத்துறைகள் இந்த தாக்குதல் பற்றி முற்கூட்டி தகவல்கள் வழங்கியிருந்தன.எதிர்காலத்தில் உளவுத்துறையின் தேவைப்பாடு எவ்வாறு காணப்படுகின்றது?
ப.- இந்திய உளவுத்துறை இந்த செய்தியை சொன்னதாக நாங்கள் அறிகின்றோம். இந்திய உளவுத்துறை மாத்திரம் இன்றி உலக நாடுகளின் ஒத்துழைப்பும் தேவை. இவ்வாறான குண்டுவெடிப்புக்கள் அமெரிக்கா ஐரோப்பா உட்பட பல வல்லரசுநாடுகளிலும் இடம்பெற்றுள்ளன.. எனவே இந்த நாடுகளுக்கு குண்டுவெடிப்புசம்பவங்கள் தொடர்பில் நிரம்ப அனுபவம் இருக்கின்றன. இது எளிதானபயங்கரவாதம் அல்ல.
விடுதலைப்புலிகள் ஒருகாலத்தில் நாடுகேட்டு போராடினர். வேறு சிலர் இலக்குடன் செயற்படுகின்றனர். ஆனால் இந்த பயங்கரவாதிகளுக்கு என்ன இலக்கு இருக்கின்றது என்று எவருக்கும் தெரியவில்லை. அவர்களுக்கு என்று இலக்கு இருந்தால் மத வழிபாட்டில் ஈடுபடும் அப்பாவி மக்களையும் பச்சிளம் குழந்தைகளையும் துடிக்க துடிக்க கொன்றுகுவிப்பார்களா .இத்தகைய குரூரத்தில் ஈடுபடும் பயங்கரவாத கயவர்களை அழித்தொழிப்பதற்கு வெளிநாடுகளின் உதவிகள் தேவைப்படுகின்றது.
கே.- விடுதலைப்புலிகளின் கோரிக்கை சரியானது என்று கூறுகிறீர்களா?
ப. அன்றைய காலத்திலே சில சிங்கள தலைவர்களின் இனவாத செயற்பாடுகள் மோசமாக இருந்தன. இப்போதும் கூட என்னையும் அநியாயமாக இந்த சம்பத்துடன் தொடர்பு படுத்துகிறார்கள். மேல்மாகாண ஆளுநர் அசாத் சாலி, முஜிபுர் ரஹ்மான் எம்.பி போன்றவர்களையும் சம்பவத்துடன் கோர்க்கிறார்கள் இந்த பயங்கரவாதிகளின் நெருங்கிய உறவினர்களுக்கு கூட தெரியாமல் இந்த காரியம் நடந்திருக்கின்றது. பயங்கரவாதிகளின் நெருங்கிய உறவுகள் விசாரணைகளின்போது தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறுகிறார்கள். . கைது செய்யப்பட்டவர்கள் தீவிர விசாரணை செய்யப்படுகின்றார்.
இந்த கட்டத்தில் பாதுகாப்பு தரப்போ புலனாய்வு துறையோ எந்த அரசியல்வாதி பற்றியும் சொல்லாத நிலையில் எதிர்க்கட்சியில் இருக்கும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி திசாநாயக்க மற்றும் விமல் வீரவன்ச போன்றோர் முஸ்லிம் அரசியல்வாதிகளை வேண்டுமென்றே தொடர்பு படுத்தி பேசுகின்றார்கள் .
அவர்கள் அப்பட்டமான அரசியல் நடத்துகினறனர். ஆட்சியை பிடிப்பதற்காகவும் அடுத்த அரசை அமைப்பதற்காகவும் தமது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை தொடர்ந்து தக்க வைப்பதற்காகவும் கேவலமான அரசியல் செய்கின்றார்கள்.தமது சுயநல அரசியலுக்காக இந்த மோசமான பயங்கரவாதத்தை வேறு திசைகளில் திருப்புகின்றார்கள்.
இவ்வாறு தான் கடந்த காலங்களில் சிங்கள அரசியல்தலைவர்கள் ஆட்சியை பிடிப்பதற்காக தமிழ் மொழியை தடைசெய்தார்கள். தமிழ் மக்களின் அன்றாட அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்ற மறுத்தார்கள். அவர்களின் அடிப்படை உரிமைகளில் கைவைத்தார்கள். சிங்கள மக்களின் வாக்குகளை பெறுவதற்காகவே. இத்தனை அநியாயங்களையும் செய்தார்கள் இவ்வாறு அவர்கள் தூண்டியதன் காரணமாகவே சிறிய குழுவாக ஆரம்பிக்கப்பட்ட பயங்கரவாதம் , 83 கலவரத்தோடு முழு தமிழ் சமுதாயத்தையும் அதில் பங்காளராக்கியது. இந்த துரோகத்தனம் பெரும்பான்மை இனத்திலிருந்து
செய்யப்பட்டது . இதற்கு பின்னாலே அரசியல்வாதிகள் இருந்தார்கள்.
அதேபோன்றுதான் இந்த சம்பவத்தை வைத்துக்கொண்டு இவ்வாறான அரசியல்வாதிகள் இப்போதும் தூண்டுகிறார்கள் எனினும் இஸ்லாமிய சமுதாயம் விழிப்பாக இருக்கின்றது இஸ்லாத்தின் பெயரால் செய்யப்படும் இஸ்லாத்திற்கு விரோதமான இந்த படு பயங்கரவாதத்தை வெளிநாட்டு சக்திகள் இயக்குகின்றன. அவர்களின் இலக்கு என்னவென்று எமக்கு தெரியாது. இஸ்லாம் இந்த பயங்கரவாதத்தை முற்றாக எதிர்க்கின்றது.
நன்றி பி.பி.சி (BBC)