ஆண்டவனிடம் அடைக்கலம் தேடி ஆராதனையில் ஈடுபட்டிருந்த அப்பாவிக் கிறிஸ்தவ சகோதரர்களின் உயிர்களை பலாத்காரமாகப் பறித்தெடுத்த, பயங்கரத்தின் பிடியிலிருந்து நமது நாடும், நாமும் மீண்டெழும் பிரார்த்தனைகளுடன் நீண்ட காலத்திற்குப் பின்னர் எனது கருத்துக்களை பதிவிடுகிறேன். மனிதாபமானம் சாகடிக்கப்பட்ட ஒரு சில கயவர்கள் ஒவ்வொரு சமூகத்திலும் வாழும் வரை, தலைக்குனிவுகள், அவமானங்களை சந்திக்கும் விதியிலிருந்து எந்தச் சமூகங்களும் விலகிட முடியாது.
மதங்களைத் தாண்டிய மனிதாபிமானம் பற்றி சமயத் தலைவர்கள், பொது அமைப்புக்கள், பொது மக்கள் உள்ளிட்ட சமூகங்களின் சகல மட்டங்களிலிருந்தும் சிந்திப்பதும், செயற்படுவதும் இவ்வாறான சமூக, சமய நல்லிணக்கங்களுக்கு உழைப்பதும், ஒரு சில இரத்தக் காட்டேறிகளின் ஈனத்தனங்களால் முழுமைப்படாது அலைக்கழிகின்றன.
பழிவாங்கல், பதிலடிகளென்ற வெறித்தனப் போக்கும் தீவிர சிந்தனைகளும் பெரும்பாலும் பொது மக்களின் உயிர்களைப் பறித்துச் செல்வதே பெரும் வேதனையாக உள்ளது.
மானுட தர்மத்துக்கு உட்படாத இந்தப் போக்கு, சிந்தனைகளை மாற்றுவதில் சமயப் பெரியார்கள் எடுத்து வரும் முயற்சிகள், அதி விசேடமாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இதில் கொண்டுள்ள அக்கறை, ஆர்வங்கள் மதங்களை மறந்து மெய்சிலிர்க்கச் செய்துள்ளது. மட்டுமல்ல வன்முறையை ஒழித்து ஒழுக்கத்திற்கு வழிகாட்டும் சிறந்த தார்மீகப் பாதையாகவும் இது அமையப் போகிறது.
ஈஸ்டர் தின தேவாலயத் தாக்குதல்களின் பின்னர், பாரிய பழிவாங்கல்கள் எதிர்பார்க்கப்பட்டதால் குருதி உறைந்த நிலையில் முஸ்லிம் சமூகம் மூச்சின்றிக் கிடக்க, நமது நாடும் நடுங்கிக் கிடந்தது.
’’மதத்தின் பெயரால் எவரும் எவரது உயிர்களையும் பறிக்க முடியாது, கிறிஸ்தவர்கள் பொறுமைகாக்க வேண்டும். ஆண்டவர் அனைவரையும் அருள் பாலிக்கட்டும்’’ என்று போராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை பகர்ந்ததால் பகைகள் நீங்கி,பரஸ்பரம் மலர்ந்தது.
நமது நாட்டில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் எந்த நியாயங்களுக்கும் உட்படாதது. மதத்தின் அடிப்படையிலும் இது நிராகரிக்கப்பட வேண்டியதே. பிற மதத்தவரைக் கொலை செய்து மறு உலகத்தில் ஈடேற்றம் பெற முடியுமென்ற சிந்தனை இஸ்லாத்தில் இல்லை. புனித திருக்குர்ஆன் இதை "லா இக்ராக பிfத்தீன்' THERE IS NO COMPULSORY IN ISLAM இஸ்லாத்தில் பலவந்தம் இல்லை. இஸ்லாத்தை விளங்கி, விரும்பி ஏற்போருக்கே இடமுண்டு. முஸ்லிம்களில் 99 % உலமாக்கள் இந்தக் கருத்துடனிருக் கையில் ஒரு வீதமான மத வெறியர்களின் கோட்பாட்டை இஸ்லாமியக் கோட்பாடாக ஏற்க முடியாது.
முஸ்லிம்களின் பெயர்தாங்கிய இந்த முரடர்கள் செய்த மிலேச்சத்தனத்தை இஸ்லாமியர் எவரும் ஏற்கவில்லை என்பதை பேராயர் மெல்கம் ரஞ்சித் நன்கு புரிந்திருந்தார். பொதுவாக மதங்களில் இத்தகைய இழிசெயலுக்கு இடமில்லை என்றும் அவருக்குத் தெரியும். ஆனால் பெரும்பான்மை சமூகத்தில் செல்வாக்குச் செலுத்தும் சில ஊடகங்கள் நெருக்கடியான நேரத்தில் மக்களை விழிப்பூட்டியிருந்தாலும் நிகழ்பவற்றை தெளிவூட்டத் தவறிவிட்டன.
போருக்குப் பின்னர் பீதி நீங்கி அமைதி வாழ்வுக்குத் திரும்பியிருந்த மக்களுக்கு பரபரப்பு, பதற்றம், குழப்பங்கள் வெறுப் பூட்டுபவையாகவே இருந்தன. இதைப் புரிந்து கொள்ளாத இவ்வூடகங்கள் வெளியிட்ட தகவல்கள் அனைத்தும் திட்டமிட்டு ஒரு சமூகத்தை ஒட்டு மொத்தமாக ஒடுக்கும் நோக்குடையதாக இருந்ததே கவலை.
ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்ப இவ்வூடகங்களால் எவ்வாறு முடியுமென்ற கேள்வியே இப்போது எழுந்துள்ளது. பற்றியெரியும் நாட்டின் பிரச்சினை குறித்து சில தெளிவுகளைப் பெற அமைச்சர் ரிஷாத்பதியுதீனை விவாதத்திற்கு அழைத்திருந்த ஒரு தனியார் தொலைக் காட்சியின் ஊடகவியலாளர்கள் நடந்து கொண்ட விதங்கள், பக்கச்சார்பு நியாயத்திற்கு பக்கத் துணையாகும் படி அமைச்சரை வற்புறுத்துவதாக இருந்தது.
சிங்கள மொழியில் நன்கு தேர்ச்சி இல்லாத தன்னுடன் ஆக்ரோஷமாக நடந்து கொள்ளாமல் பதிலளிக்க தனக்கு நேரம் வழங்குமாறு பல தடவை கோரியும் அமைச்சரின் கோரிக்கைக்கு இடமளியாத அம்மூவரும் தாங்கள் எதிர்பார்க்கும் பதிலை அமைச்சரிடம் எதிர்பார்த்து ஏமாந்த விரக்தியிலே விவாதத்தை நடத்தினர். இப்படியொரு சம்பவம் தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கும் நடந்ததை சில இணையத் தளங்கள் காண்பித்தன.
போட்டிக்கு எத்தனையோ ஊடகங்கள் உள்ள நிலையில் இவ்வூடகவியலாளர்களின் போக்குகள் அமைச்சருக்கு ஒரு பொருட்டாக இருந்திருக்காது. இனங்களின் ஒற்றுமையைக் குலைத்து மதத்தின் பெயரால் நரமாமிச வேட்டையாடிய மனுக்குல எதிரிகளுக்கும் அமைச்சருக்கும் என்ன தொடர்பு? எப்படி உறவு? என்ற கேள்விகளுடன் நின்று கொண்டனர் இனவாத ஊடகவியலாளர்கள். எப்போதிருந்து உறவு என்பதைக் கேட்காது நூதனமாக விலகிக் கொண்டனர். இந்த விலகலில் ஒரு சமூகத்தை குறிவைக்கும் கபடத்தனம் உள்ளதைப் புரிந்து கொண்ட அமைச்சர் இது பற்றி விளக்கமளிக்கையிலேயே, ஊடகவியலாளர்களின் சிங்களப் புலமை சீறிப் பாய்ந்தது.
தெரியாதவற்றையும் தெரியும் என்று அமைச்சர் பதிலளிக்க வேண்டுமென்பதே "சலகுன"வின் எதிர்பார்ப்பு. ஏற்கனவே எத்தனையோ தடவைகள் பல நிகழ்ச்சிகளில் கேட்கப்பட்டு தெளிவாக பதில் வழங்கிய கேள்விகளை இவர்கள் கேட்டதும் பல கெடுதிகளுக்கே.
ஒரு சமூகத்தையே பயங்கரவாதப் பார்வையில் நோக்கும் இவர்களின் ஊடகங்களுக்கு பதில்களைப் பவ்வியமாக வழங்குவதே அமைச்சர் ரிஷாதின் சிந்தனையிலிருந்தவை. முஸ்லிம்களின் சமையலறையில் கண்டெடுக்கப்படும் கத்தி, கைப் பிடிகளையே கனரக ஆயுதமாகவும் சமையலறைகளை பயிற்சி முகாம்களாகவும் காட்டும் ஊடக மேலாண்மைவாதிகளுக்கு ஒரு குண்டூசியும் கிடைக்காமல் பதிலளித்த அமைச்சரை முஸ்லிம்கள் மறப்பதற்கில்லை.
தனிப்பட்ட விவகாரங்களை வேறு நிகழ்ச்சிக்கு ஒதுக்கி, தேச முக்கியத்துக்கு முதலிடம் வழங்கியே இவர்கள் கேள்விகளை கேட்டிருக்க வேண்டும். மேலும் ஒரே மொழி ஊடகங்கள் சில குறிப்பாக முன்னாள் கிளர்ச்சியாளர்களான சிங்களக் கட்சியின் பெயரிலுள்ள இணையமும், ’’மொழி வெற்றி’’ என்ற பொருள்படும் இணையமும் வெளிப்படுத்தும் ஊடக தர்மங்கள் முஸ்லிம்களை இன்னும் தமிழ் தேசியத்துக்குள் உள்வாங்கவில்லை. பெயரளவில் தமிழ் தேசியம் பேசும் சில புலம்பெயர் தமிழ் ஊடகங்களின் சிந்தனைக்குள் மத உணர்வுகள் மனக்கிலேசங்களாக உள்ளதை இன்றைய நாட்களில் அவை நடந்து கொண்ட விதங்கள் காட்டுகின்றன.
ஒரு மொழிச் சமூகங்களுக்குள் இதுவரையும் புரியப்படாத அரசியல் பிணக்குகள் கிடப்பிலிருக்கையில் மற்றுமொரு சிறுபான்மையினர் மீது ஒட்டு மொத்தமாக நீட்டப்படும் விரல்களுக்கு சாமரம் வீசாமல் நடந்து கொள்வதும் பழிவாங்கல் சிந்தனைகள், தீவிர போக்குகளை ஒழிக்க உதவும்.
அமைச்சர் ரிஷாட்டி உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயத்தை, நாட்டை விட்டுத்தப்பியோடியதாகத் தெரிவித்த பத்திரிகைகளுக்கு மத்தியிலும் பிரபல வாராந்த ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியர் டேவிட் அண்டனி என்னைத் தொடர்பு கொண்டு உண்மையைக் கேட்டறிந்த, ஊடக தர்மமும் உயிர்வாழ்வதே எமக்கெல்லாம் பெருமை.
இந்த யதார்த்தத்தில் தேசிய மற்றும் தனியார் தமிழ் பத்திரிகைகள் ஊடக தர்மத்தில் நின்று மனச்சாட்சியை வெளிப்படுத்தியமை பாராட்டத்தக்கது.