கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை
பயங்கரவாத செயற்பாடுகளை முறியடிக்க முஸ்லிம் சமூகம் பூரண ஒத்துழைப்பு வழங்கி வரும் வேளையில் புனித குர்ஆன், ஹதீஸ் புத்தகங்களின் கண்ணியத்திற்கு பங்கம் விளைவிக்கும் செயற்பாடுகள் குறித்து முஸ்லிம் சமூகம் வேதனை அடைகின்றது.
சர்வதேச நாடுகளின் உதவியுடன் ஒரு குழுவினர் இணைந்து நமது நாட்டில் குண்டுத் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். முஸ்லிம் சமூகம் இவர்களின் இக்கோரச் செயற்பாடுகளை அங்கீகரிக்கவில்லை. அட்டாளைச்சேனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை, நிந்தவூர் பிரதேசங்களில் பயங்கரவாதிகள் தொடர்பாக முஸ்லிம் மக்கள் பாதுகாப்பு படையினருக்கு தகவல் வழங்கினர். இதனால்தான் கிழக்கு மாகாணத்தில் பயங்கரவாத குழுவினர்களின் பாரிய குண்டுத் தாக்குதல் நிகழ்வுகளை தடுத்ததுடன் பயங்கரவாதக் குழுவினர்களும் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் முஸ்லிம் பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகளில் முஸ்லிம் மக்களின் புனித பள்ளிவாசல்கள், ஹதீஸ் புத்தகங்களுக்கு கண்ணியம் வழங்;காமையும், பள்ளிவாசலுக்குள் நாய்களை பயன்படுத்தும் நடவடிக்கைகளை உடன் நிறுத்துமாறு கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ கலாநிதி ஹிஸ்புல்லா அவர்கள் முஸ்லிம் மக்களின் மனங்களை புண்படுத்தும் இந்த நிகழ்வுகள் குறித்து ஜனாதிபதியிடம் நிலைமையினை விளங்கப்படுத்தி இப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும்.
கிழக்கு மாகாண பாதுகாப்பு தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லா தலைமையில் திருகோணமலை 'வெல்கம்' ஹோட்டலில் நடைபெற்ற கிழக்கு மாகாண சபையின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுக்கு இடையிலான விசேட கலந்துரையாடலில் உரையாற்றிய கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், கிழக்கு மாகாண முன்பள்ளி கல்வி பணியகத்தின் தவிசாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்....
நமது நாட்டில் 30 வருட காலமாக நடைபெற்ற் பயங்கரவாத செயற்பாடுகளை இல்லாமல் செய்து சமாதானம் ஏற்படுவதற்கும,; நமது நாட்டின் இறைமைக்கும், சுதந்திரத்திற்கும், நாட்டு பற்றுக்கும் விசுவாசமாக செயற்பட்ட முஸ்லிம் சமூகத்தின் தியாகங்களை மறந்தவர்களாக சிலர் செயல்படுவது குறித்து முஸ்லிம் சமூகம் வேதனைப்படுகின்றது.
முஸ்லிம் சமூகம் பயங்கரவாதிகளையும், பயங்கரவாத செயற்பாடுகளையும்; முழுமையாகவே கண்டிக்கிறது. அண்மையில் சாய்ந்தமருது பிரதேசத்தில் மரணித்த பயங்கரவாதிகளின் ஜனாஸாக்களை கூட இஸ்லாமிய மத செயற்பாடுகளுடன் நிறைவேற்றாது முஸ்லிம் சமூகம் தனது பாரிய எதிர்ப்பினை காட்டியது என்பதனை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இந்த நிலைமையில் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது முஸ்லிம்களின் வீடுகளில் சாதாரணமாக சமையல் நடவடிக்கைகளுக்கும், ஏனைய நடவடிக்கைகளுக்கும் பாவிக்கும் கத்திகளை கூட பாவிப்பது தடை எனக் கூறி முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்த வண்ணம் உள்ளது. இது தொடர்பாக கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே, கிழக்கு மாகாண முஸ்லிம்களின் உணர்வுகளை கிழக்கு மாகாண ஆளுநர் அவசரமாக ஜனாதிபதி அவர்களுக்கு தெரிவித்து இந்த நடவடிக்கைகளை நிற்பாட்ட வேண்டும். இந்த தவறான செயற்பாடுகளினால் இலங்கையில் வாழும் முழு முஸ்லிம் மக்களும் மன வேதனைப் பட்ட நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர.; என்ற செய்திகளையும் ஜனாதிபதிக்கு விசேடமாக தெரிவிக்க வேண்டும.; முஸ்லிம் சமூகம் பயங்கரவாத செயற்பாடுகளை முற்றாக எதிர்கின்றது. என்பதனை சாய்ந்தமருது பிரதேசத்தில் நடைபெற்ற செயற்பாடுகள் நிரூபிக்கின்றன.
பயங்கரவாதிகள் கோடிக்கணக்கான பணத்தை கட்டுக்கட்டாக வீசிய போதும் அப் பிரதேசத்தில் ஒரு முஸ்லிம் கூட கோடிக்கணக்கான பணத்திற்கு அடிமைப்படாமல் பயங்கரவாதிகளை இல்லாமல் செய்யும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தனர.; என்பது வரலாற்று நிகழ்வாகும். இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண இரானுவ கட்டளை தளபதி சாட்சியாக உள்ளார.; இவ்வாறு முஸ்லிம் சமூகத்தினர் பயங்கரவாதிகளை அடையாளம் காட்டிக் கொடுக்கவில்லை என்றால் நமது நாடும், நமது நாட்டு மக்களும் பாரிய சேதம் அடைந்திருக்கும் என்பதனை இன்று சிலர் மறந்து செயற்படுகின்றனர். தற்போதைய சூழ்நிலையில் முஸ்லிம் சமூகத்திற்கான பாதுகாப்பினை வழங்கி முஸ்லிம் சமூகத்தின் மனங்களை வெல்ல வேண்டும். முஸ்லிம் சமூகத்திற்கு ஏதாவது பாதிப்புகள் ஏற்படுத்தப்படுமானால் அது பயங்கரவாதிகளின் செயற்பாடுகளுக்கு வெற்றியாக அமைந்து விடலாம் என்பதையும் சிந்திக்க வேண்டும்.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதல் நிகழ்வுகளை முன் வைத்து முஸ்லிம் சமூகத்தின் மீது இனவாத கருத்துக்களை சிலர் மேற்கொண்டு வருகின்றனர்.
புதிய பயங்கரவாத குழுவினரை முற்றாக ஒழிக்கும் நடவடிக்கையில் முழு முஸ்லிம் சமூகமும் பாரிய பங்கினை வெளிப்படையாக தெரிவித்து செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் இந்த காலகட்டத்தில் முழு முஸ்லிம்களையும் சந்தேகமாக பார்க்கும் செயற்பாடுகளை தவிர்த்துக்கொள்ளவேண்டும். விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் நடைபெற்ற காலங்களில் முஸ்லிம் சமூகம் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வந்தன. ஆனால் அண்மையில் நமது நாட்டில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல் நிகழ்வுகளால் முழு முஸ்லிம் சமூகம் வேதனையோடும், அச்சத்துடனும் வாழும் நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்ற உண்மையான யதார்த்தமான தன்மையினை புரிந்து கொள்ள வேண்டும்.
சில பயங்கரவாதிகளின் செயற்பாட்டினால் நமது நாட்டில் வாழும் முழு முஸ்லிம் சமூகமும் தலைகுனியும் நிலைமை ஏற்பட்டதுடன், நமது குடும்பத்தவர்களை சேர்ந்தவர்கள் குண்டுவெடிப்பு சம்பவங்களால் இறந்துவிட்ட உணர்வுகளுடன் இன்னும் முஸ்லிம் சமூகம் கவலையுடனும், வேதனையுடனும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. எனவே, ஒரு சிலரின் கொடூரமான இச்செயல்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உச்ச தண்டனை அவர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இப்பயங்கரவாத சம்வங்களில் ஒரு குறிப்பிட்ட சிலரே ஈடுபட்டுள்ளனர்.
இக்குண்டுத் தாக்குதல் சம்பவங்களுடன் முஸ்லிம் சமூகத்திற்கோ, முஸ்லிம் மக்களுக்கோ எவ்வித தொடர்பும் இல்லை என்ற உண்மையை தெரிந்து கொண்டு சிலர் முழு முஸ்லிம் சமூகத்தினையும் பயங்கரவாதிகளாக காட்டும் முயற்சிகள் நிறுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.