ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் "தேசத்திற்காக ஒன்றிணைவோம்" கருத்திட்டத்தின் ஓர் அங்கமாக கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பல பிரதேசங்களில் இன்று திங்கட்கிழமை (2019-05-06) கடற்கரை சூழல்கள் மற்றும் பொது இடங்களை சுத்தம் செய்து, பாதுகாக்கும் பொருட்டு பாரிய சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
கல்முனை மாநகர சபை, பிரதேச செயலகங்கள் மற்றும் கரையோரம் பேணல், கரையோர மூலவள முகாமை திணைக்களம் என்பன இணைந்து இவ்வேலைத் திட்டத்தை முன்னெடுத்திருந்தன.
கல்முனை மாநகர சபையின் ஆணையாளர் எம்.சி.அன்சார், கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.றிகாஸ் மற்றும் கரையோரம் பேணல், கரையோர மூலவள முகாமை திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எம்.ஐ.எம்.ஜெசூர் ஆகியோரின் நேரடிக் கண்காணிப்பில் இடம்பெற்ற இவ்வேலைத் திட்டத்தின்போது கல்முனை மாநகர சபைக்குட்பட்ட அனைத்து பிரதேசங்களிலும் கிராம சேவகர் பிரிவுகள் தோறும் கடற்கரை மற்றும் அதனை சூழவுள்ள பல பகுதிகளும் பொது இடங்களும் சிரமதான நடவடிக்கைகளின் மூலம் சுத்தம் செய்யப்பட்டு, அழகிய சூழல்களாக மாற்றப்பட்டுள்ளன.
இப்பணிகளில் சமுர்த்திப் பயனாளிகளும் கல்முனை மாநகர சபை சுகாதாரத் தொழிலாளர்களும் ஈடுபடுத்தப்பட்டதுடன் மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவை வாகனங்களும் பயன்படுத்தப்பட்டன.
இவ்வேலைத் திட்டத்தில் கல்முனை பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோசகர் ஐ.எல் வாஹிட், கல்முனை மாநகர சபையின் சுகாதாரப் பிரிவு தலைமை உத்தியோகத்தர் ஏ.ஏ.எம்.அஹ்சன், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், மாநகர சபை மற்றும் பிரதேச செயலகங்களின் உத்தியோகத்தர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.