திங்களன்று தமிழ் சிங்களப் பாடசாலைகள் மட்டும் ஆரம்பம்.
காரைதீவு நிருபர் சகா-கிழக்கு மாகாணப் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பாக இன்று(03) வெள்ளிக்கிழமை திருகோணமலையில் பிரதமசெயலாளர் அலுவலகத்தில் உயர்மட்டக்கூட்டம் நடைபெறவுள்ளது.
கிழக்கு மாகாணப் பிரதம செயலாளர் சரத்அபேகுணவர்த்தன தலைமையில் நடைபெறவுள்ள இம்முக்கிய கூட்டத்திற்கு கிழக்கு மாகாணகல்விச்செயலாளர் முத்துபண்டா கிழக்குமாகாண கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் உள்ளிட்ட உயர்மட்ட கல்வி நிருவாகிகள் கலந்தகொள்வார்கள்.
கிழக்கிலுள்ள 17 கல்வி வலயங்களின் வலயக்கல்விப்பணிப்பாளர்களும் இக்கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் 6ஆம் திகதி அரச தமிழ் சிங்களப் பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக மீண்டும் 5வார நீண்டவிடுமுறையின் பின்னர் பலத்த பாதுகாப்பின் மத்தியில் திறக்கப்படவுள்ளன.
கடந்த 22ஆம் திகதி திறக்கப்படவிருந்த தமிழ்சிங்களப்பாடசாலைகள் நாட்டிலேற்பட்ட அசாதாரணசூழ்நிலை காரணமாக கடந்த இருவாரங்களாக விசேடலீவு வழங்கப்பட்டிருந்தது.
இதேவேளை முஸ்லிம் பாடசாலைகள் கடந்த 17ஆம் திகதி திறக்கப்படவிருந்தும் அசாதாரண சூழ்நிலை காரணமாக விடுமுறைவழங்கப்பட்டிருந்தது.
எனினும் புனித ரமழான் நோன்பு விடுமுறை 2019.05.04ஆம் திகதி தொடக்கம் 2019.06.09ஆம் திகதி வரை முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
ஆதலால் எதிர்வரும் திங்கள்(6) முஸ்லிம்பாடசாலைகள் திறக்கப்படமாட்டாது. ஆக தமிழ் முஸ்லிம் பாடசாலைகள் மட்டுமே திறக்கப்படவிருக்கின்றன.