பெண்களின் ஆடை விவகாரம் : நாமும் குழம்பி அவர்களையும் குழப்பி வைத்திருக்கிறோம்

சட்டத்தரணி எ.எல். ஆஸாத் -

மது நாட்டில் வாழும் பெரும்பாலான முஸ்லிம் மக்களுக்கே நிகாப், புர்கா, ஹிஜாப் ஹபாயா இது போன்ற பெண்களின் ஆடை சம்பந்தமாக குறிப்பிடப்படும் சொற்கள் தொடர்பான அல்லது இவற்றுக்கான வேறுபாடுகள் தெளிவில்லாத நிலையில்; குறிப்பிட்ட விடையத்தினை எமது சகோதர இனத்திடம் எவ்வாறு நாம் எதிர்ப்பார்ப்பது? நாமும் குழம்பி அவர்களையும் குழப்பி வைத்திருக்கிறோம்.

தற்போது நாட்டின் அவசரகால ஒழுங்கு விதிகளின் கீழ் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் ஆளடையாளத்தை மறைக்கக் கூடிய விதத்தில் முகத்தை மூடுவதைத் தடை செய்துள்ளார். இதன் காரணமாக தற்போது முஸ்லிம் பெண்கள் தாங்கள் முகத்தை மூடாமல் தலையை மாத்திரம் மறைத்துக் கொண்டு தங்களின் அன்றாடக் கடமையினை செய்யும் போது அரச, தனியார் அலுவலகங்களில் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்படுவதோடு சொல்லொண்ணா துயரங்களையும் அனுபவிக்கின்றனர். கடந்த வாரங்களில் நாட்டில் இடம் பெற்ற பல சம்பவங்கள் இதற்கு சாட்சியாக காணப்படுகின்றன.

புவக்பிடிய தமிழ் வித்தியாலயத்தில் (முகத்தை மறைக்காமல்) ஹபாயா மற்றும் ஸ்காப் அணிந்து சென்ற முஸ்லிம் ஆசிரியைகளை பாடசாலைக்கு உள்ளே செல்லவிடாமல் பாடசாலை நிர்வாகத்தினராலும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினராலும் தடுக்கப்பட்டனர். இதே போன்ற சம்பவங்கள் இன்னும் பல பாடசாலைகளிலும் இடம் பெற்றுள்ளன. அதே போன்று வைத்தியசாலைகளிலும் இன்னொரன்ன அரச நிறுவனங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் முகத்தை மறைக்காமல் ஹிஜாப் அல்லது ஸ்காப் அணிந்து வந்த பெண்களை தங்கள் அலுவல்களை செய்ய இடமளிக்காமல் இடையூறு விளைவித்த அதிகாரிகளும், ஊழியர்களும் காணப்படுகின்றனர்.

இங்கு நாம் அவதானிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானியில் ஹிஜாப், ஹபாயா,நிகாப், புர்கா போன்ற எந்த அரபு சொற்களும் காணப்படவில்லை. மேலும் புவக்பிடிய பாடசாலை முஸ்லிம் ஆசிரியைகள் சம்பந்தமாக12.05.2019 ஏற்பட்ட முரண்பாடுகள் தொடர்பில் ஊடகவியலாளர்களைத் தெளிவு படுத்துவதற்காக மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்த மேல்மாகாண ஆளுனர் அஸாத் சாலி அவர்கள் லங்காதீப மற்றும் இன்னும் சில பத்திரிகை செய்திகளைச் சுட்டிக் காட்டி, முகத்தைத் திறந்து சென்ற பெண்களை அவர்கள் புர்கா அணிந்து வந்தார்கள் என தலைப்புச் செய்தி இட்டிருக்கிறார்கள் என சுட்டிக் காட்டியிருந்தார்.

இங்கு புர்கா அணிந்ததால் தான் (அதாவது முகத்தை மூடியமை என்ற கருத்துப்பட) பாடசாலைக்கு அனுமதிக்கப்படவில்லை என்று பல சிங்கள மற்றும் தமிழ் ஊடகங்கள் குறிப்பிட்டிருந்தன.

ஏதோ ஒரு வகையில் புர்கா, ஹிஜாப், நிகாப் போன்ற அரபு பதங்கள் மக்கள் மத்தியில் அடிக்கடி பேசும் பொருளாக அமைந்து விட்டது. அது பற்றிய தெளிவினைப் பெற்று மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பது ஊடகங்களின் கடமை ஆயினும் இலங்கையில் பெரும்பாலான ஊடகங்களின் பொறுப்பற்ற தன்மையின் காரணமாக மக்களுக்கு தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன.

எனவே முஸ்லிம் தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் போன்றொர் இதனை நிவர்த்திக்கும் முகமாக அது பற்றிய தெளிவினை வழங்குவதோடு இனிவரும் காலங்களில் அரபுச் சொற்களைத் தவிர்த்து முகம் தெரியும் விதமாக ஆடை அணிந்து கொண்டு வந்த அல்லது முகத்தை மூடும் விதமாக ஆடை அணியாத பெண்களுக்கு ஏற்பட்ட அசௌகரியம் என்று இது போன்ற தெளிவான சொற்பிரயோகத்தைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த பெரும்பான்மை மக்களிடத்தில் இலகுவாக சென்றடையக் கூடிய வகையிலான செய்தியை கொடுக்க முடியும்.

நாம் அரபுச் சொற்களைப் பயன்படுத்துவதனால் ஊடக நிறுவனங்கள் திட்டமிட்டு கூட குழப்பும் விதமாக செயற்படலாம். அதற்கு வழியமைக்கும் விதத்தில் எங்களுடைய செயற்பாடுகள் அமையக் கூடாது. எனவே நாம் அவர்களுக்குத் தெளிவான செய்தியைக் கொடுத்தால் அவர்கள் அந்த தெளிவை மீறி நடப்பதற்கு அவர்களால் முடியாமலிருக்கும். நாம் குழப்பகரமான செய்திகளை அவர்களுக்கு வழங்குவதை விட்டுவிட்டு தெளிவான செய்திகளை வழங்குவோம். அதனடிப்டையில் நிகாப், புர்கா, ஹபாயா ஹிஜாப் போன்ற அனைத்து விதமான அரபுச் சொற்களையும் தவிர்ப்போம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -