அம்பாறை , கெங்கல்ல பள்ளிவாசல்களுக்கும் முழுமையான இழப்பீடுகளை வழங்க அமைச்சரவை இணக்கம்



அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு 
குருநாகல் மாவட்டத்தின் பல கிராமங்களிலும், புத்தளம் மாவட்டத்தில் நாத்தாண்டிய தேர்தல் தொகுதியிலுள்ள கிராமங்களிலும் அண்மைய இனக்கலவரத்தின் போது சேதமாக்கப்பட்ட பள்ளிவாசல்களை முழுமையாக புனரமைப்பதற்காக இழப்பீடு வழங்கப்படும் அதேவேளையில், முன்னர் நடந்த இனக் கலவரத்தினால் சேதமாக்கப்பட்ட அம்பாறை பள்ளிவாசலை புனரமைப்பதற்கு அந்த மாவட்ட அரசாங்க அதிபரால் மதிப்பீட்டுக்கமைய அங்கீகரிக்கப்பட்ட 27 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்யுமாறும், திகன, கெங்கல்ல பள்ளிவாசலும் எரியூட்டப்பட்டு முற்றாக சேதப்படுத்தப்பட்டதால் அதற்கும் முழுமையான இழப்பீட்டை வழங்குமாறும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அமைச்சரவையில் விடுத்த கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அண்மையில் வடமேல் மாகாணத்தில் குருநாகல், புத்தளம் மாவட்டங்களின் சில பிரதேசங்களில் நடந்த இனக் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்கனவே திகன, அம்பாறை இனக் கலவர இழப்பீடு தொடர்பான சுற்றறிக்கைக்கு அமைவாக உரிய இழப்பீடுகளை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளமை பற்றி தெரிவிக்கும் போதே அமைச்சர் ஹக்கீம் இதனைக் கூறினார்.

அமைச்சர் ஹக்கீம் இது பற்றி மேலும் தெரிவித்ததாவது,

செவ்வாய்கிழமை (21) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், நடந்து முடிந்த இனக் கலவரம் தொடர்பில் இழப்பீடுகள் வழங்குவது பற்றி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பத்திரமொன்றை சமர்ப்பித்தார். அதற்கமைய பிரஸ்தாப இரண்டு மாவட்டங்களிலும் அண்மைய இனக் கலவரத்தினால் பாதிக்கப்பட்ட பள்ளிவாசல்கள் முழுமையாக புனரமைக்கப்பட்டு முன்னர் இருந்த நிலைமைக்கு கொண்டுவரப்படும் என்றும் இராணுவத்தை சேர்ந்த பொறியியலாளர்களாலும், இராணுவத்தில் கட்டட நிர்மாணத்தில் தேர்ச்சி பெற்றவர்களாலும் அந் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதன் போதே அமைச்சர் ஹக்கீம், முன்னைய இனக் கலவரத்தினால் பாதிக்கப்பட்ட அம்பாறை பள்ளிவாசல் மீள் நிர்மாணப் பணி மற்றும் சேதமாக்கப்பட்ட திகன, கெங்கல்லை பள்ளிவாசல்களுக்கான மீள் நிர்மாண இழப்பீடு என்பன முழுமையாக வழங்கப்படுவதன் அவசியம் குறித்தும் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
கலவரத்தின் பின்னர் அந்த மாவட்ட அரசாங்க அதிபரின் மதிப்பீட்டு அங்கீகாரத்தின் அடிப்படையில் அம்பாறை நகர பள்ளிவாசல் 27 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அதற்காக பொறுப்பான அமைச்சுக்கு ஒரு மில்லியன் ரூபாய்களை மட்டுமே வழங்க முடியுமென திறைசேரி தெரிவித்திருந்ததாக கூறப்பட்ட போது, அது கம்பெரலிய திட்டத்திற்கமைவாக மட்டுமே என்றும் அது வேறு விடயம் என்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவும் சுட்டிக்காட்டினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -