இனவாத தாக்குதல்கள் தேசத்துரோகமாக சட்டமாக்கப்படுதல் வேண்டும்?


சட்டத்தரணி பைஸர்-
யங்கரவாத செயற்பாடுகளும் இனவாத தாக்குதலும் எமது நாட்டின் பொருளாதாரம் சமூக நல்லினக்கம், சகவாழ்வு, தேசிய வருமானம், நாட்டின் கௌரவம், சர்வதேச தொடர்பாடல் என்பவற்றில் பாதகமான சமதாக்கத்தையே ஏற்படுத்துகின்றது. பயங்கரவாத செயற்பாடுகள் மட்டும் பாரிய குற்றமாக தண்டிக்கப்படாமல் சமகால இடைவெளிகளில் (Pநசழைனiஉயட யவவயஉம) முஸ்லிம்கள் மீதும் தேசத்திற்கு பங்களிப்புச் செய்யும் முஸ்லிம்களின் பொருளாதாரத்தின் மீதும் திட்டமிட்டு நடாத்தப்படும் மிலேச்சத்தனமான இனவாத தாக்குதல்களை ஏன் தேசத்துரோகமாக சட்டமாக்கப்பட முடியாது என்ற நிலை பரவலாக பேசப்பட்டு வருகின்றது?
பயங்கரவாதம் இந்த நாட்டு மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள அதே உளவியல் தாக்கத்தேயே இனவாதிகளின் தாக்குதலும் ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் பயங்கரவாதத்திற்கான வரலாறு 1983 ஆண்டே ஆரம்பித்தது.ஆனால் இலங்கை முஸ்லிம்கள் மீதான இனவாதம் 1915 ஆண்டில் இருந்தே ஆரம்பிக்கப்பட்டது.இலங்கையில் முஸ்லிம்கள் மீதான இனவாத தாக்குதல்கள் 100 வருடத்திற்கு மேற்பட்ட வரலாற்றை கொண்டது.

இவங்கையில் பயங்கரவாதத்தைப்போல் இனவாதச் செயற்பாடும் தேசத்தை நேசிக்கும் 95 வீதத்திற்கு மேற்பட்ட இலங்கைவாழ் மூவின மக்களாலும் கண்டித்து கடுமையாக விமர்சிக்கப்படும் நிலையில் குறித்த 5 அல்லது அதற்கு கீழ்ப்பட்ட வீதமான இனவாத நஞ்சூட்டப்பட்ட இந்த நாட்டினை குட்டிச்சுவராக்கும் இனவாதப் பயங்கரவாதத்தால் தேசமே தலைகுனிந்து நிற்கும் அளவுக்கு அது இன்று விஸ்பரூபம் எடுத்துள்ளது. இலங்கையில் நடைபெற்றுவரும் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதிகளின் செயற்பாடுகள் தெளிவான முறையில் செல்வாக்குகளுடனும், நன்கு திட்டமிட்டப்பட்ட பாதுகாப்பு அரண்களுக்கு மத்தியிலும், ஒரு தரப்பை நிராயுதபாணிகள் அல்லது செயலற்றவர்களாக மாற்றி இனவாதத்தை அரங்கேற்றுபவர்களுக்கான வழிகள் சுயாதீனமாக திறந்துவிடப்பட்டு நடைபெற்றுவருவதே இங்கு ஆச்சரியத்திற்கு உரிய விடயம் ஆகும்.
தேசத்தையே தலைகுனிய வைக்கும் வகையில் திட்டமிட்டு ஒத்துழைப்புடன் நடைபெற்றுவரும் பாரிய பொருளாதார இனவாத அழிவுகளை ஏன் தேசத்துரோகமாக பிரகடனப்படுத்த முடியாது என்ற கேள்வி இன்று பரவலாக எழத்தொடங்கியுள்ளது. இதனையே இலங்கை இரணுவத்தின் 24வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த முதலிக அவர்கள் ' நாட்டின் சட்டத்திற்கு மதிப்பளிக்காத எந்த ஒரு தரப்பினரும் இன, மத பேதம் இன்றி தேசத்துரோகிகள் என்று பெயரிடப்பட வேண்டும்'(30.05.2019 பதிவு ஜப்னா முஸ்லிம் இணையத்தளம்) எனத் தெரிவித்துள்ளார்.
எனவே இனவாதச் செயற்பாடும் நாட்டின் சட்டத்தை அவமதிக்கும் செயல் என்பதாலும் சட்டத்திருத்தங்களின் ஊடாக அல்லது புதிய சட்ட உருவாக்கத்தின் ஊடாக அவை தேசத்துரோகமாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும். நடைமுறையில் இருக்கும் சட்டங்களை சரியாக பாரபட்சம் இன்றி சகலருக்கும் சமமாக செயற்படுத்தினால் நாம் மாற்று சட்டங்களை தேட வேண்டிய அவசியம் ஏற்படாது. இன்று அத்தகைய நிலைமை மிகக்குறைவாக இருப்பதை அவதானிக்க முடிகின்றது. இன்று சட்டத்தினை அமுலாக்கும் சில தரப்புக்கு நாட்டின் சட்டங்கள் எந்நோக்கத்திற்கு உருவாக்கப்பட்டுள்ளது என்ற தெளிவின்மை அல்லது சட்டத்தில் உள்ள குற்றங்களின் பொருள்கோடல்களில் ஏற்பட்டுள்ள தெளிவின்மை போன்றவற்றால் நிரபராதி உள்ளேயும் குற்றவாளி வெளியேயும் இருப்பதை ஊடகவாயிலாக அறியமுடிகின்றது.
சமாதானம், இனநல்லுறவு, சகவாழ்வு என்பதெல்லாம் வெறும் கண்துடைப்பே என்று கூறமுடியும். ஏனென்றால் அது இனவாதச் செயற்பாட்டை தடுப்பதில் தவறிழைத்துவிட்டது. மேற்படி இன நல்லுறவை விரும்பாத 5 வீதமான இனவாதிகளின் தொடர்ச்சியான முஸ்லிம்களின் பொருளாதார இலக்குகள் மீதான பேரழிவை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இந்நாடு தவறிவிட்டது.

30 வருட உள்நாட்டு யுத்தம், ஓரிரு மாத ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதம் என்பவற்றை முடிவுக்குகொண்டு வந்த வீரமிக்க பாதுகாப்புத்துறையைக் கொண்ட இந்நாட்டில் முஸ்லிம்கள் மீதான 100 வருட வரலாறு கொண்ட இனவாதச் செயற்பாட்டை ஏன் தேசிய பொறிமுறை ஒன்றை ஏற்படுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பதவியில் இருந்த மற்றும் பதவியில் உள்ள ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ நிலையான கொள்கையினை வகுத்து செயற்பட பின்னின்று வருகின்றார்கள் என்ற பரவலான வினாவும் சந்தேகப்பார்வையும் முஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. பரஸ்பரம் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அரசியல்வாதிகள் மோதிக்கொள்வதும் இனவாதச் செயற்பாட்டின் பின்னரான விசாரணை முன்னெடுப்புக்களும் குறித்த இனவாதச் செயற்பாடு ஓய்வுக்கு கொண்டுவரப்படுமா என்ற ஐயத்தைத் தோற்றுவித்துள்ளது.
அவசரகால நிலைமைகள் நடைமுறையில் இருக்கின்றபோதே ஓர் இனத்தின் மீதான பாரிய சொத்தழிவும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற செயற்பாடுகளும் தெளிவான ஆதாரங்கள் பதிவு செய்யப்பட்டும் சாதாரணமான சட்டத்தால் கையாளப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதும் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுக்க முடியாது.

இந்த விடயத்தில் மௌனிகளாக இருந்து கொண்டு விழங்கி விழுங்கி கருத்துக்களை வெளியிட்டு வரும் சில முக்கிய முஸ்லிம் அரசியல்வாதிகள் முஸ்லிம் மக்களை நோக்கி வரும் இந்த பேரழிவை தடுக்க தேசிய பொறிமுறையினை தாங்கள் ஏற்படுத்துவார்களா என்ற சந்தேகமும் எழாமல் இல்லை? வாய் திறந்தால் வம்பில் மாட்டிவிடுவோம் என்ற கள்ள மௌனம் அவர்கள் மீதும் முஸ்லிம்களை சந்தேகம் கொள்ள வைத்துள்ளது.

வெறும் 5 வீதமான இனவாதிகளின் செயற்பாடுகளை இந்த நாடு அங்கீகரிக்குமாயின் 95 வீதமான தேசப்பற்றாளர்களின் அத்தனை முயற்சியும் பூச்சியமாக மாறிவிடும்.நாட்டிலே சாதாரணமாகக் காணப்படும் சட்டங்களை தராதரம் பார்க்காமல் உச்ச அளவில் பயன்படுத்தினால் கூட 100 வருடமாக இயங்கி வருகின்ற முன்னைய இனவாதிகளின் வழித்தோன்றல்களான இந்த இனவாதிகளை பூண்டோடு அழித்திருக்க முடியும்.
தற்போதய இனவாதிகளின் மூலோபாயங்களை அவதானிக்கும் போது அவர்களே இந்த நாட்டின் இலுமினாட்டிகள்(தீர்மானிக்கும் சக்திகள்) போல் அனைத்தையும் தீர்மானிக்கும் சக்திகளாக மாறியுள்ளார்கள்.

அவர்களின் செயற்பாடு மிகவும் சௌகரிகமாக, தெளிவான நிகழ்ச்சி நிரலுடன் ,திறந்த அரங்கில். சிறு பாதுகாப்புக்களுடன் நடைபெற்றுவரும் நிலையில் அது தேசிய பேரழிவையும் மக்கள் மத்தியில் குரோதம் மற்றும் பயத்தினையும் உண்டாக்கி இந்நாட்டின் சமாதானத்தை தளம்பல் நிலையில் வைத்திருக்கின்றது. இனவாதிகளுக்கு சந்தனம் பூசித்தடாவி அவர்களை போசித்து வரும் நபர்களை கண்டுபிடிப்பது கடினமா அல்லது அரசியல் நோக்கத்திற்காக அவர்களின் முதுகு வலிக்காமல் மேலோட்டமாக தடாவிக்கொண்டு செல்வதுதான் காலம் காலமாக பதவிக்கு வரும் அரசாங்கத்தின் நோக்கமா என்ற வலுவான சந்தேகம் முஸ்லிம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுவருவதை முஸ்லிம் அரசியல் தலைமைகள் கரிசனையுடன் அணுக வேண்டும்.
சிறுபான்மையினருக்கு எதிரான இனவாதச் செயற்பாட்டை விசாரிக்கும் ஆணைக்குழு ஒன்று நிரந்தரமாக நியமிக்கப்பட வேண்டும்.

சகவாழ்வு, நல்லிணக்கம் என்று கூட்டம் கூட்டமாக அழைந்து திரிந்து காலநேரத்தை வீணடிக்காமல் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத பேரழிவைத் தடுக்க தேசியப் பொறிமுறை ஒன்றை உருவாக்க அழுத்தம் பிரயோகிக்கப்பட வேண்டும்.இதனை யார் முன்னெடுத்துச் செல்வது என்ற நிலைப்பாடு எம்மக்கள் மத்தியில் உருவாகி உள்ளது. அரசியல் தலைமைகளை வழிநடாத்தக்கூடிய தேசிய ஷூறா சபையும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையும் இதற்கான முன்மொழிவுகளை தயாரித்து அரசியல் வாதிகள் ஊடாக நடைமுறைப்படுத்த முன்வரவேண்டும்.

காணாமல் போனோரை விசாரிக்கும் ஆணைக்குழு, கற்றுக்கொண்ட பாடங்களுக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழு போன்று முஸ்லிம்களின் மீதான திட்டமிட்ட இனவாதச் செயற்பாடுகள் பற்றிய வெளிப்படைத்தன்மையுடன் தகவல்களை திரட்டும் தேசிய ஆணைக்குழு உருவாக்க அனைவரும் முன்வரவேண்டும்.
முஸ்லிம் அரசியல் வாதிகள் தாங்கள் ஆட்சி அமைக்க முட்டுக்கொடுக்கும் போது பிரதானமாக முஸ்லிம்கள் மீதான தேசிய இனவாத தாக்குதல்களை நிறுத்தும் பொறிமுறை ஒன்றினை ஏற்படுத்தி இதய சுத்தியுடன் முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மையினருக்கு பாதுகாப்பை வழங்குவதற்காக ஆட்சிக்குவரும் பெரும்பான்மைக் கட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். முஸ்லிம் கட்சிகளில் உள்ள படித்த அறிவாளிகள் சிலர் நிபந்தனை அற்று ஆட்சிக்கு முட்டுக்கொடுத்த கசப்பான வரலாறுகள் இந்த நாட்டில் இருந்து வந்துள்ளதை நாம் நினைவுபடுத்துகின்றோம்.
முஸ்லிம் அரசியல்வாதிகள் தாங்கள் ஆட்சி அமைக்க முட்டுக்கொடுக்கும் போது பிரதானமாக முஸ்லிம்கள் மீதான தேசிய இனவாத தாக்குதல்களை நிறுத்த தேசியப் பொறிமுறையும் அதற்கான தேசிய ஆணைக்குழுவும் உருவாக்கவும், இனவாத செயற்பாடுகள் விசேட சட்டங்களின் ஊடாக தேசத்துரோகமாக ஆக்கப்பட அழுத்தம் கொடுக்க வேண்டும்.
முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் இனவாத அழிவுகளை கூண்டோடு அழிக்க தேசிய கொள்கைகளைத் தயாரித்து அரசியல்வாதிகள் ஊடாக பயனடையச் செய்தல் வேண்டும்.
வெறுமனே சேதமதிப்பீடுகளை கணக்கிட குழு அமைப்பதிலும், நஸ்டஈடு வழங்குவதற்கான அமைச்சரவைப்பத்திரங்களை தயாரிப்பதில் மாத்திரம் காலத்தை வீணடிக்காமல் எமது சமூகத்தின் நலன்களுக்காக நீடித்து நிலைத்திருக்கும் பொறிமுறையை உருவாக்குவதில் அக்கரை செலுத்துமாறும் நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டங்களின் படி இந்நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உச்சபட்ச பாதுகாப்பை சட்ட அமுலாக்கத்துறையில் இருந்து பெறுவதங்கான முன்னெடுப்புக்களை நிரந்தரமாக பெற்றுத்தர செயற்படுமாறும் முஸ்லிம் சமூகம் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -