கல்முனை மதுவரி திணைக்கள உத்தியோகத்தர்கள் கடந்த ஒருவாரத்தில் ஹெரோயின் சட்டவிரோத மதுபானப்போத்தல்கள் போன்றவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்செய்து உரிய சட்டநடவடிக்கையை எடுத்துள்ளதாக கல்முனை மதுவரித்திணைக்கள நிலையப்பொறுப்பதிகாரி றோட்டரியன் எஸ்.தங்கராஜா தெரிவித்தார்.
மதுவரித்திணைக்கள உதவிஆணையாளர் எல்.ஜே.ரணவீர மற்றும் அம்பாறை மாவட்ட மதுவரித்திணைக்கள அத்தியட்சகர் என்.சுசாகரன் ஆகியோரின் வழிகாட்டலில் அம்பாறை நிலையப்பொறுப்பதிகாரி என்.ஸ்ரீகாந்தா உள்ளிட்ட மதுவரி உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட சுற்றிவளைப்பு திடீர் பாய்ச்சல் போன்றவற்றால் இவை கைப்பற்றப்பட்டன.
அக்கரைப்பற்றில்வைத்து ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டின்பேரில் மூவர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர். எதிர்வரும் 24ஆம் திகதி வரை அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று அக்கரைப்பற்றில் 12கிராம் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்டசாட்டின்பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டு அக்கரைப்பற்று நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டார். எதிர்வரும் 31ஆம் திகதிவரை அவருக்கு விளக்கமறியல் தீர்க்கப்பட்டுள்ளது.
இதேவேளை வெசாக் காலத்தின்போது நடாத்தப்பட்ட சுற்றிவளைப்பின்போது 4பேர் சட்டவிரோதமாக மதுபானப்போத்தல்களை வைத்திருந்த குற்றச்சாட்டின்பேரில் கைதுசெய்யப்பட்டு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டார். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 20ஆயிரம் ருபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.