கெகிராவை, மடாடுகம பிரதேசத்தில் தௌஹீத் பள்ளிவாசலை முஸ்லிம் சகோதரர்களே சென்று உடைத்தார்கள் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் ஆழ்ந்த கவலை அடைகின்றேன்.
முஸ்லிம்களுக்கு மத்தியில் மதரீதியான, கோட்பாடுரீதியான பல்வேறுபட்ட பிரிவுகள் இருக்கலாம் அவைகளை இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி பள்ளிவாசல்களை உடைப்பது தப்லீக், தௌஹீத், சூபிஸம், வஹாபிஸம், ஜமாஅத் இஸ்லாமி என்று எங்களுக்குள்ளே மோதிக்கொள்வது மிகமோசமான ஒரு பயங்கரமான செயலாகும்.
இவ்வாறான செயல்களினூடாக முஸ்லிம்கள் தங்களுக்குள்ளேயே மோதிக்கொண்டு தாங்களே அழிந்து கொள்ளவேண்டும் என்பதுதான் இன்று இச்சம்பவங்களை ஏற்படுத்தியிருக்கின்ற பயங்கரவாதிகளின் குறிக்கோள்களாகும்.
ஆகவே தயவு செய்து எவரும் அதற்கு இடமளிக்கக்கூடாது தௌஹீத் பள்ளிவாசல்களை உடைப்பதோ தப்லீக், தௌஹீத், சூபிஸம் வஹாபிஸம், ஜமாஅத் இஸ்லாமி என்று எங்களுக்குள்ளே மோதிக்கொள்வதினூடாக ஒருபோதும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணமுடியாது.
எனவே இதுதொடர்பான விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டு அகில இலங்கை ஜம்மியதுல் உலமா தலைமையில் கலந்துரையாடப்பட்டு எடுக்கப்படவேண்டிய தீர்மானங்களாகும்.
இதைவிடுத்து இப்பிரச்சினை தொடர்பில் மார்க்கத்திற்கு முரண்பாடான செயற்பாடுகள் எங்காவது நடைபெறுமாக இருந்தால் இந்த விடயங்கள் தொடர்பில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா, முஸ்லிம் தலைமைகள் மற்றும் முஸ்லிம் கலாசார அமைச்சு ஆகியவற்றினால் கலந்துரையாடி முடிவுகள் எடுக்கப்படவேண்டுமே தவிர ஊர்களில் நினைத்தவர்கள் எல்லாம் தங்களின் சொந்த விருப்பத்திற்கு பள்ளிவாசலை உடைக்கின்ற நிலைமையினை ஏற்படுத்திவிடக்கூடாது.
இவ்வாறான செயற்பாடுகள் மிகமோசமான நிலைமையினை ஏற்படுத்துவதோடு கடந்த யுத்தகாலங்களிலே சகோதர இனம் தங்களுக்குள்ளேயே மோதிக்கொண்டதினூடாக எவ்வாறான விளைவுகளை சந்தித்தது என்பதை நாம் நன்கு அறிவோம்.
ஆகவே தயவு செய்து அவ்வாறு தமது இனத்துக்குள்ளேயே மோதல்களை ஏற்படுத்துவதற்கு நீங்கள் முன் உதாரணமாக இருந்து விடாமல் உடனடியாக இச்சம்பவத்தினை கண்டிப்பதுடன் இலங்கையில் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதை தடுப்பதோடு தப்லீக், தௌஹீத், சூபிஸம், வஹாபிஸம், ஜமாஅத் இஸ்லாமி என்ற வேறுபாடுகள் வித்தியாசங்களை உருவாக்கிக்கொள்ளாமல் ஒற்றுமையாக மார்க்கக் கடமைகளை மேற்கொள்வதுடன் நாம் அனைவரும் முஸ்லிம்கள் "லாயிலாஹ இல்லழ்ழாஹ்" எனும் கலிமாவை சொன்னவர்கள் எங்களுக்குள் பலவேறுபாடுகள் இருக்கலாம்.எனவே இந் சூழ்நிலையில் மிகக்கவனமாகவும் பொறுமையாகவும் நிதானமாகவும் நடந்துகொள்ளவேண்டும்.
குறிப்பாக பள்ளிவாசல்களை உடைப்பது, இன்னும் ஒரு குழுவுக்கு எதிராக அறிக்கைகளை விடுவது, காட்டிக்கொடுப்பது, சந்தர்பத்தினை பயன்படுத்தி அரசியல்ரீதியாக பழிவாங்க முனைவது, சந்தர்பத்தினை பயன்படுத்தி மார்க்கரீதியான பிளவுகளை தூண்ட முனைவதெல்லாம் மிகமோசமான பாதகமான அல்லாஹ்வினால் மன்னிக்கமுடியாத குற்றங்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது இது ஒரு முனாபிக்தனமான செயற்பாடாகும்.
எனவே தயவு செய்து தீவிரவாதிகளுக்கும், பௌத்த தீவிரவாதிகளுக்கும், எதிரிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் நீங்கள் எவரும் துணைபோய்விடக்கூடாது என மிக அன்புடன் புனித மக்காவில் இருந்து மிக உருக்கமாக இந்த வேண்டுகோளை கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் விடுப்பதாக ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.