முஸ்லிம்கள் பாரம்பரியத்தினை பேணுவதில் உறுதியாக இருக்க வேண்டும். யுத்த காலத்தில் தமிழர்கள் வாழ்வு எமக்கு படிப்பினையாகும்.



முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது-

ஸ்டர் பண்டிகை தினத்தன்று நாட்டில் ஏற்பட்ட குண்டுவெடிப்புக்கு பின்பு முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்தவாறு ஆடை அணிவது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று காரணம் கூறி முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்தவாறு ஆடைகளை அணியக்கூடாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளதுடன் நிறுத்திக்கொண்டது.

சர்வாதிகார முறையில் முடிவெடுக்காமல் முஸ்லிம் தலைவர்களுடன் கலந்தாலோசித்த பின்பே அரசாங்கம் இந்த அறிவிப்பு வெளியிட்டதனை நாங்கள் பாராட்ட வேண்டும்.
ஆனால் அதனையும்விட ஒருபடி மேலே சென்று அபாயா ஆடையினால்தான் பிரச்சினை. எனவே அந்த ஆடை தேவையில்லை என்று விழுந்தடித்துக்கொண்டு எமது ஒருசில அரசியல்வாதிகள் அறிக்கைவிட்டதை காணக்கூடியதாக இருந்தது.
அந்தவகையில் மேல்மாகான ஆளுநர் ஆசாத் சாலி அவர்கள் விடுத்த அறிக்கையில், எனது உம்மா, உம்மம்மா ஆகியோர் எப்போதும் சாரிதான் அணிந்துதிருந்தார்கள். இப்போதுதான் புதிதாக மார்க்கம் உருவாக்கி எமது பெண்கள் அபாயா அணிய ஆரம்பித்துள்ளார்கள் என்று கூறினார்.

இவரது இந்த அறிக்கையின் மூலம் சிங்கள மேட்டுக்குடி வர்க்கத்தினர்களை திருப்தி படுத்தியதுடன், எதிர்காலத்தில் சிங்கள வாக்குகளை கவரும் நோக்கில் கருத்து தெரிவித்துள்ளார்.
கவர்ச்சி இல்லாமலும், இறுக்கம் இல்லாமலும், மற்றவர்களின் உணர்வுகளை தூண்டாத விதத்திலும் பெண்கள் ஆடைகளை அணியவேண்டும் என்று இஸ்லாம் கூரியுள்ளதே தவிர, இந்த ஆடைகளைத்தான் அணியவேண்டும் என்று ஒருபோதும் கூறவில்லை.
இவ்வாறு இஸ்லாம் கூறும் விதத்துக்கு பொருத்தமான ஆடையாக அபாயா ஆடையைத்தவிர வேறு ஆடைகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

அத்துடன் அபாயா அணிவதன் மூலம் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் போன்றவற்றில் மாணவிகளுக்கிடையில் ஆடை அணிவதில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் நீங்கி சமத்துவம் நிலவுகின்றது.
அபாயா அல்லாமல் பல வர்ணங்களில் வெவ்வேறு ஆடைகள் அணிகின்றபோது, அந்த ஆடைகளினால் பணக்காரன் ஏழை என்ற வேற்றுமையின் மூலம் முஸ்லிம் சமூகத்தினுள் ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்கின்றது.
இன்று பாதுகாப்பு காரணங்களுக்காக நாட்டில் ஏற்படுத்தப்பட்ட சட்டத்துக்கமைவாக முகத்தை மறைக்காமல் நாங்கள் இதுவரைகாலமும் எந்த ஆடையை அணிந்தோமோ, அந்த ஆடையை அணிவதன் மூலம்தான் எமது தனித்துவத்தினை தொடர்ந்து பேண முடியும்.

அவ்வாறல்லாமல் யாரோ அச்சுறுத்துகிறார்கள் அல்லது யாரோ அரசியல்வாதி கூறுகிறார் என்பதற்காக நாங்கள் வழக்கமாக அணியும் ஆடையில் மாற்றத்தினை ஏற்படுத்தினால், அது எங்களது பலயீனமாக கருதப்படும்.
இந்த பலயீனத்தை தங்களுக்கு சாதகமாக வைத்துக்கொண்டு எதிர்காலத்தில் இன்னும் பல மாற்றங்களை முஸ்லிம்கள் மீது திணிக்க முற்படுவதுடன், ஆண்கள் குறிப்பிட்ட அளவுக்குமேல் தாடி வளர்க்கக்கூடாது என்று கட்டுப்பாடுகளை விதித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

நீதிமன்றத்துக்குள் தொப்பி அணிந்துகொண்டு வரக்கூடாது என்று ஆங்கிலேய நீதிபதி கூறியதற்காக துருக்கித்தொப்பி அணிகின்ற உரிமைக்காக போராட்டம் நடாத்திய சமூகத்தை சேர்ந்தவர்கள் நாங்கள் என்பதனை மறந்துவிட கூடாது.

நாட்டில் முப்பது வருடமாக ஆயுதப்போராட்டம் நடைபெற்றபோது தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட கெடுபிடிகள் ஏராளம். நெற்றியில் பொட்டு வைப்பது முதல் வேட்டி கட்டுவது வரைக்கும் கெடுபுடிகள் இருந்தது. இருந்தும் தமிழ் மக்கள் எந்த சந்தர்ப்பத்திலும் தங்களது தனித்துவத்தினை விட்டுக்கொடுத்ததில்லை.
அதற்கேற்றால்போல் உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தமிழ் அரசியல்வாதிகள் மிகவும் உறுதியுடனும், துணிச்சலுடனும் செயல்பட்டார்கள்.
எனவே நாங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்காமல் நடந்துகொள்வதுடன், கெடுபிடியான இந்த நேரத்தில் எமக்கு இருக்கின்ற பாரம்பரிய நடைமுறையினை விட்டுக்கொடுக்காமல் வாழ்வதன் மூலமே எமது தனித்துவத்தினை தொடர்ந்து பேண முடியும்.
இல்லாவிட்டால் எதிர்காலத்தில் நாங்கள் அடிமைகளாக வாழ்வதற்கு நாங்களே களம் அமைத்துக் கொடுக்கின்றதுபோல் ஆகிவிடும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -