ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
அட்டன் போடைஸ் அக்கரபத்தனை பிரதான பாதையினை இணைக்கும் நிவ்பிரஸ்டன் தோட்ட வீதி கடந்த பத்து வருடத்திற்கும் மேலாக குன்றும் குழியுமாக காணப்படுவதனால் பொது மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
குறித்த தோட்டத்தில் சுமார் 175 குடும்பங்களைச் சேர்ந்த 750 மேற்பட்டோர் வாழ்ந்து வருவதுடன் இதில் சுமார் 60 மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் அக்கரபத்தனை,ஹோல்புறுக்,பிரஸ்ட்டன் ஆகிய பாடசாலைக்கு செல்கின்றனர்.
அத்தோடு மன்ராசி வைத்தியசாலை, பொலிஸ் நிலையம், பிரதான தபாலகம் ஆகிய வற்றிக்கு செல்வதென்றாலே குறித்த வீதியையே பயன்படுத்த வேண்டியுள்ளது.
குறித்த வீதி கடந்த 10 வருடத்திற்கும் மேல் குன்றும் குழியுமாக காணப்படுவதனால் கர்பினித்தாய்மார்கள் மற்றும் சிகிச்சைக்காக செல்லும் முதியவர்கள் உட்பட பலரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
மன்ராசியிலிருந்து சுமார் 200 ரூபா அறவிடும் முச்சக்கரவண்டி சாரதிகள,; வீதி சீரின்மை காணரமாக 400 ரூபா அறவிடுவதாகவும,; பெரும் பொருளாதார சுமைக்கு மத்தியில் வாழும் இவர்கள் தங்களுடைய தேவைகளை நிறை வேற்றிக்கொள்வதில் பல்வேறு அவஸ்த்தைகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
முதியோர் கொடுப்பனவுகளை பெறும் முதியோர்கள் தங்களது பணத்தினை கூலி வாகனங்களுக்கே கொடுத்து விட்டு வர வேண்டிய துர்பாக்கிய நிலை காணப்படுவதாக இவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தேர்தல் காலங்களில் இந்த பாதையினை சீர்திருத்தி தருவதாக அரசியல் தலைவர்கள் தெரிவித்து வந்த போதிலும், தேர்தல் முடிந்த பின் அது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. என பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
எனவே மேலும் தங்களை சிரமத்திற்கு உட்படுத்தாது சுமார் ஒன்றரை கிரோமீற்றர் மாத்திரம் உள்ள இந்த வீதியினை புனரமைத்து தருமாறு பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இது குறித்து பொது மக்கள் கருத்து தெரிவிக்கையில்.
கடந்த பல வருடகாலமாக இந்த வீதி இப்படி மோசமான நிலையில் காணப்படுகின்றது.சில கர்பினித்தாய்மார்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதே குழந்தைகளை பிரசுவத்திருக்கிறார்கள்,நோயாளர்களை வைத்தியசாலைக்கு அவசரத்திற்கு கொண்டு செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது.பல தடைவைகள் அரச அதிகாரிகள் இந்த வீதியினை புனரமைப்பதாக அளந்து சென்ற போதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.