அந்த ஞாயிறு- கவிதை
*****************
நிசப்த நேரத்தில் ஓர்
சத்தம் அன்று
காதுகளை கிழித்துக் கொண்டு
குண்டுகள் வெடித்த நாளன்று
ஓலச் சத்தம் அன்று
சுனாமியை நினைவு படுத்திய
நாளன்று
கண்ணீர் மழையில் நனைந்து
ரத்த வெள்ளத்தில் குளித்த
நாளும் அன்றுதான்
ஆராதனை எங்கும்
ஆரம்பிக்கும் வேளையன்று
ஆராதனை முடிவதற்கிடையில்
எல்லாமே முடிந்து விட்டது
உயிர்த்த ஞாயிறினிலே
உயிர் நீத்தவர்கள்
இறுதி ஆராதனையைக் கூட
முடிவு வரை அமர விட வில்லையே
அந்த ஈரமில்லா ஈனப்பிறவிகள்
ஆலயம் தேடிவந்து
ஆளுக்கொரு பக்கம் சென்று
அப்பாவி உயிர்களை
கருவறுக்க திட்டம் போட்டதுதான் ஏனோ?
உம்-
உயிர் கொடுத்து
உயிர்களை எடுக்க
உதித்து வந்த
நெஞ்சில் ஈரமில்லா வஞ்சகர்களே
இவர்கள் செய்த குற்றம்தான்
என்ன ?
நூற்றுக்கணக்கான
உயிர்களை அழித்து
நீர் அடையப் போகும் இலக்குதான்
என்ன ?
மனைவியை பறி கொடுத்த கணவன் செய்த குற்றம் என்ன ?
தாயை பறி கொடுத்து ஏங்கிய
குழந்தை செய்த குற்றம் என்ன?
குடும்பத்தையே இழந்து
தவித்த உறவுகள் செய்த
குற்றம்தான் என்ன ?
எதிர்பாராத இழப்புகளும்
ஏமாற்றங்களும்
கிடைக்கப் போவதனை
எம் அப்பாவிகள்
அறிந்திருக்க வில்லையே
தேசத் தாய்க்கு
தேடிவந்த அவலமா இது?
ஒரே தேசத்தில்
ஒரே மண்ணில்
நிம்மதியாய் நாட்கள் நகர்த்திய தேசத்தையே இன்று
நிலை குலையச் செய்த
வக்கிரகார கும்பலே எதற்காக இந்த
ஈனப் புத்தி?
நீர் -
அனுபவிக்க வேண்டியவை
எத்தனை எத்தனையோ
இருந்தும்
இப்படி நீர் அழிந்(த்)து
எதனை அனுபவிக்க போகிறாய்?
மண்ணறையின் அவலம்
நீர் அறிந்ததில்லையா?
பசுமையான இத்தேசத்தில்
சுகமாக வாழ்ந்து
சுதந்திரமாய் நீர் நடமாடுவது
உமக்கு கிடைத்த வரமல்லவா
இதை விட என்ன வேண்டும்?
உம் புத்தி
சலவை செய்யப் படும் போது
சற்று நீர் சிந்தித்திருக்கலாமே
இது முறைதானா?
இது சரிதானா? என்று
இலங்கைத் தாயை
இழப்பில் ஆழ்த்திய
இதயமில்லா வஞ்சகர்களே
இனியும் தாமதம் இல்லை
இத்தேசத்தில் உம்மை
அடையாளம் இன்றி
வேரோடு கிள்ளி எறிய
இதோ வருகிறேன்!
நிஸா
மருதமுனை
-