"இந்த இக்கட்டான கட்டத்தில் அனைத்து இலங்கையரும் ஒன்றிணைந்து சுபீட்சமான எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவோம்."


-நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG).
யிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் (21.05.2019) ஒரு மாதமாகிறது. அதன் வேதனையிலும் அதிர்ச்சியிலுமிருந்து நாடு இன்னும் மீளவில்லை.
ஏப்ரல் 21தாக்குதல் இலங்கையின் ஸ்திரத் தன்மையை தலைகீழாகப் புரட்டிப் போட்டு விட்டது. நாடு ஸ்தம்பித நிலையை அடைந்துள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் நாம் தீவிர கரிசனையுடன் அக்கறை கொள்ள வேண்டிய பல விடயங்கள் உள்ளன. அவை குறித்து அரசாங்கமும், அரசியல் தலைவர்களும், மதத் தலைவர்களும், பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும், சிவில் சமூகமும், ஊடகங்களும் துரிதமாக செயற்பட்டாக வேண்டிய வரலாற்றுக் கடமை நம் முன்னே உள்ளது.
மிக முக்கியமாக கவனம் செலுத்த வேண்டிய 14 அம்சங்கள் குறித்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) சுட்டிக் காட்டியுள்ளது. அவையாவன:
01. பயங்கரவாத செயற்பாடுகளை முற்றாக இல்லாதொழிக்க வேண்டும். பயங்கரவாத மனோநிலையை உருவாக்கும் காரணிகளையும் ஒழிக்க வேண்டும். அதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

02. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இனவாதத்தைத் தூண்டி, அப்பாவி மக்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து அழிவுகளை மேற்கொள்ளும் நாசகார சக்திகளை முழுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும்.

03. உயிர்த்த ஞாயிறன்று படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மக்களின் குடும்பத்தினருக்கும் பாதிக்கப்பட்ட தேவாலயங்கள், ஏனைய சொத்துகளுக்கும் நியாயமான இழப்பீடுகளை அரசாங்கம் வழங்க வேண்டும்.

04. குருநாகல், புத்தளம், கம்பஹா மாவட்டங்களில் முஸ்லிம்களுக்கெதிராக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட கலவரங்களில் பாதிக்கப்பட்டோருக்கும் அவர்களது பள்ளிவாசல்களுக்கும், பொது நிறுவனங்களுக்கும், வீடுகளுக்கும், சொத்திழப்புகளுக்கும் அரசாங்கம் நியாயமான இழப்பீடுகளை வழங்க வேண்டும்.
05. நாட்டின் பன்மைத்துவமும் சமய கலாச்சாரத் தனித்துவங்களும் மனித உரிமைகளும் பேணிப் பாதுகாக்கப்படல் வேண்டும்.

06. தாக்குதலுக்குப் பின்னர் நாட்டில் தோன்றியுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியும் சீர்குலைவும் கூடிய விரைவில் நிவர்த்திக்கப்பட வேண்டும்.

07. வேலை இழப்பும் வேலைவாய்ப்பின்மையும் பெரும் தலைவலியாக மாறியுள்ளது. இது எல்லா சமூகங்களையும் சேர்ந்த இளைஞர்கள் மத்தியிலும் பெரும் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இது குறித்து எல்லோரும் கரிசனை எடுக்க வேண்டும். இதற்கான நடைமுறைத் தீர்வுகள் மிகவும் இன்றியமையாதவையாகும். அவை விரைந்து முன்னெடுக்கப்பட வேண்டும்.

08. சந்தேகத்திற்கிடமான வகையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
09. வெளிநாட்டு சக்திகளின் அனாவசியமான தலையீடுகள் கட்டுப்படுத்தப்பட்டு, நாட்டின் இறையாண்மையும் சுயாதீனமும் பாதுகாக்கப்பட வேண்டும்.

10. தாக்குதலுக்குப் பிந்திய சூழலை அனாவசியமாக ஊதிப் பெருப்பித்து, வன்முறைச் சூழலுக்கு வித்திட்டதில் ஊடகங்களின் பொறுப்பற்ற தன்மைக்கும் தான்தோன்றித் தனத்திற்கும் முக்கிய பங்கு இருக்கிறது. இது கண்டனத்திற்குரியதாகும். ஊடக தர்மத்தைப் பேணிப் பாதுகாக்க அவசியமான நடவடிக்கைகளை அரசாங்கம் முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

11. பயங்கரவாதத்தை ஒழித்தல் என்ற பெயரில், மக்களது அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் சட்டங்களையும் நடைமுறைகளையும் அவசர அவசரமாகத் திணிக்காமல், அரசாங்கம் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
12. மக்களுக்கு மத்தியில் அனாவசியமான அச்சமும் பீதியும் நிலவுகிறது. இதனைக் களைந்து இயல்பு வாழ்க்கையை துரிதமாக நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.

13. வெறுப்புணர்வைத் தூண்டக் கூடிய வகையிலான வெறுப்புப் பேச்சைத் (Hate Speech) தடை செய்யும் சட்டங்களை ஏற்படுத்த வேண்டும்.

14. அனைத்து இலங்கையரும் ஒன்றிணைந்து, சுபீட்சமும் வளமும் நிறைந்த எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவோம். நாம் அனைவரும் ஒருமித்து செயற்பட்டால் மட்டுமே ஆரோக்கியமான இலங்கையைக் கட்டியெழுப்ப முடியும்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG).
21.05.2019
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -