இன்று காலை கைது செய்யப்பட்ட மாணவர்களை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து கூறும்போதே சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
பல்கலைக்கழகத்தில் சோதனை நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபடவில்லை. இராணுவமே ஈடுபட்டுள்ளது. அதுவும் பல்கலைக்கழக நிர்வாகத்தினால் கடந்த 25ம் திகதி விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது குறித்த இரு மாணவர்களையும் இராணுவம் கைது செய்து கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மாணவர் ஒன்றிய அறையிலிருந்து தமிழீழ விடுதலை புலிகளின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவை பயங்கரவாத சட்டத்தின் கீழ் முதல்நிலை குற்றங்களாக தோன்றும் காரணத்தினாலும், இராணுவம் பொலிஸாரிடம் ஒப்படைத்த காரணத்தினாலும் இந்த விடயத்தை நீதிமன்றில் பாரப்படுத்துவதாக பொலிஸார் கூறியுள்ளதுடன்,
மாணவா்கள் சாா்பில் சட்டத்தரணி கே.சயந்தன் ஆஜராகி பிணை விண்ணப்பம் கோருவார். எனினும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவருக்கு பிணை வழங்க சட்டமா அதிபரின் இணக்கம் தேவை.
ஆகவே நான் இப்பொழுதே கொழும்புக்கு சென்று சட்டமா அதிபருடன் பேசி அவருடைய இணக்கத்தை பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன். அவருடைய இணக்கப்பாடு வரும்வரையில் மாணவர்கள் விளக்கமறியலில் இருக்க நோிடும் காரணம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை வழங்கும் அதிகாரம் நீதவானுக்கு கிடையாது என்றார்.