கைதுசெய்யப்பட்ட எத்தனையோ அப்பாவிகள் விடுதலையின்றி தடுத்து அல்லது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள். பெரும் வன்செயலில் ஈடுபட்ட, சொத்துக்களை அழித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 32 பேர் இவ்வளவு வேகமாக விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதுதான் இந்த நாட்டின் நிலையா? இதைப்பற்றிப்பேச நம் தலைமைத்துவங்களால் முடியாதா? “ஒரு முஸ்லிம் என்றால் எந்தக் காரணத்திற்காகவும் கைதுசெய்யமுடியும்” என்று சுனந்த தேசப்பிரிய தெரிவித்திருக்கிறார். அந்தளவு பட்டதொட்ட காரணங்களுக்காகவெல்லாம் முஸ்லீம்கள் கைதுசெய்யப்பட்டு வாடுகின்றார்கள்.
அவர்களது விடுதலைக்காக குழுபோட்டதாக சொல்லியே நாட்கள் பல தாண்டிவிட்டன. தகவல் சேகரிக்க பல நாட்கள், அதை அரசிடம் கொடுக்க அவகாசம், அதன்பின் அவற்றை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க பாதுகாப்புத் தரப்பினருக்குத் தேவையான கால அவகாசம்.
பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்களை என்ன செய்தாலும் அதைப்பற்றிக்கவலையில்லை. ஆனால் ஒரு அப்பாவி கைது செய்யப்பட்டு, அதுவும் இந்த புனித ரமளானில் - சிறையில் முடிவு இன்றி வாடுவது அவருக்கு, அவரது குடும்பத்திற்கு எவ்வளவு வேதனையானது. இப்படி எத்தனை அப்பாவிகள் இன்று சிறையில், தடுப்புக்காவில் வாடுகின்றார்கள். காலம் ஒரு மாதத்தை தாண்டிவிட்டது. ஏன் இந்தத்தலைமைகளால் விரைந்து செயற்பட முடியவில்லை?
மினுவாங்கொடையில் அத்தனை சொத்தழிப்புக்கள், உயிரிழப்பு என்பவை தொடர்பாக கைதுசெய்யப்பட்ட 32 பேர் எவ்வளவு விரைவாக விடுதலை செய்யப்பட்டார்கள்.
அவர்கள்தான் சந்தேகநபர்களாயின் அவர்கள்மீது ஏன் PTA, ICCPR, அவசரகாலச்சட்டம் என்பன பாயவில்லை? எவ்வாறு இவ்வளவு இலகுவாக விடுதலை செய்யப்பட்டார்கள்?
சரி, அவர்கள் உண்மையான சந்தேக நபர்கள் இல்லை, அப்பாவிகள் என்றால் இந்த அப்பாவிகளுக்காக காட்டப்பட்ட வேகம் கைதுசெய்யப்பட்ட முஸ்லிம் அப்பாவிகளுக்காக ஏன் காட்டப்படவில்லை? எப்பொழுது உண்மையான குற்றவாளிகள் கைதுசெய்யப்படுவார்கள்?
இதை ஏன் நமது அரசியல் தலைவர்கள் அரசிடம் கேட்கவில்லை? குண்டுவெடித்து ஒரு மாதமாகிவிட்டது. பிடிபட்ட அப்பாவிகளுக்கு இன்னும் விடுதலையில்லை. சுனந்த தேசப்பிரிய அவர்களே, முஸ்லிம்கள் எதற்காகவும் கைதுசெய்யப்படலாம்- அதாவது நீங்கள் சட்டப்படி கைதுசெய்யப்பப்படக்கூடிய குற்றமொன்றைச் செய்துதான் கைதுசெய்யப்பட வேண்டுமென்பதல்ல. அவ்வாறு செய்யாமலும் கைது செய்யப்படலாம்- என்று கூறுகின்ற அளவு நிலைமை இருக்கின்றது.
ஒரு பெண் அப்பாவித்தனமாக கப்பலின் சக்கரம் போடப்பட்ட ஆடையை அணிந்ததற்காக சிறையில் வாடுகின்றாள், நமது வீரத்தலைமைகளைக் காணவில்லை . ஆனால் அவர்களது 32பேர் அவ்வளவு இலகுவில் வெளியில் வந்துவிட்டார்கள்.
அன்று அளுத்கமயில், கிட்தோட்டையில், திகனயில், அம்பாறையில் அடித்தபோது இந்தத் தலைமைகள் சரியாக செயற்பட்டிருந்தால், தம் கடமையைச் செய்திருந்தால் இவர்கள் விரக்தி ஏற்பட்டு இந்த பயங்கரவாதிகளுடன் இணைந்திருப்பார்களா? திகன தாக்குதலிற்குப்பின்தான் அதிகமானவர்கள் பயங்கரவாதி சஹ்ரானுடன் இணைந்தார்கள் என்று ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி அண்மையில் தெரிவித்திருந்தார்.
நமது உரிமைகளைப் பாதுகாப்பதில், பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் நமது தலைமைகள், பிரதிநிதித்துவங்கள் சரியாக செயற்பட்டிருந்தால் இளைஞர்கள் ஏன் விரக்தியடைகிறார்கள். நமது தலைவர்கள் இருக்கிறார்கள். சமூகத்தைப் பார்த்துக்கொள்வார்கள்; என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கும்.
அன்றும் தம் கடமையைச் செய்யவில்லை; இன்றும் தம் கடமையைச் செய்யவில்லை. ஏதோ சமூகத்திற்காகப் போராடியதற்காக, பேசியதற்காக இலக்கு வைக்கப்படுகின்றோம்; என்றெல்லாம் கூறுகிறார்கள்.
அப்படிப்பேசி, போராடி சாதித்ததென்ன என்று மட்டும் சொல்கின்றார்களில்லை.
நம்பிக்கையில்லாப் பிரேரணையும் திசைதிருப்பப்படும் சமூகமும்.
———————————————-
இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டு சுமார் பத்து நாட்களாகின்றன. இத்தனை நாட்களும் சமூகவலைத்தளங்களின் பெரும்பகுதி இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை பற்றியே இருக்கின்றது. கட்டுரை, கட்டுரைகளாக அதற்கென்று நியமிக்கப்பட்டவர் எழுதிக்குவிக்கிறார்கள். முகநூல்களும் வாட்ஸ்அப்களும் நிரம்பி வருகின்றன; தலைவர்களைக் காப்பாற்றச்சொல்லி.
சமூகத்தைக் காப்பாற்றுவது யார்? என்று தெரியாமல் சமூகம் அழுகின்றது.
பல ஆண்டுகள் உழைத்துச் சேர்த்த சொத்துக்களை ஒரே இரவில் அழித்துவிட்டு சென்றுவிட்டார்கள்; என்று புலம்புகிறார்கள் பாதிக்கப்பட்ட மக்கள்.
இன்னுயிரை கொன்றுவிட்டான்; இனவாதி என்று கண்ணீர் வடிக்கின்றார்கள் தந்தையை இழந்த தனையன்களும் குழந்தைகளும் குடும்பங்களும்.
சொத்துக்களை அழித்ததனால் இத்தப் புனித ரமளானிலே உண்ணுவதற்கு, நோன்பு பிடிக்க, துறக்க எதுவுமில்லையே! என்று ஏங்குகின்ற ஏழை மனசுகள்! ஆனால் முகநூலெல்லாம் தலமையை காப்பாற்றுங்கள் என்ற புலம்பல் ஒருபுறம், தலைமையின் வீரதீர சாகசங்கள் என்று மறுபுறம். மனச்சாட்சியே இல்லையா நமக்கு?
இந்தப்புனித ரமளானிலும் மனச்சாட்சியை அடகுவைத்து வெறும் விளம்பர அரசியல் செய்யமுற்பட்டால் இறைவனின் உதவி நம்மை எவ்வாறு வந்துசேரும்?
நம்பிக்கையில்லாப்பிரேரணை வந்தால் என்ன?
————————————————————
நம்பிக்கையில்லாப் பிரேரணை என்பது குற்றப்பிரேரணை அல்ல. It’s just a number game. அது ஒரு எண்ணிக்கை விளையாட்டு. அவ்வளவுதான். சட்டரீதியான விளைவு எதுவும் கிடையாது.
எதிர்க்கட்சியிடம் பிரேரணையை வெல்ல பெரும்பான்மை இருந்தால் அவர்கள் அரசுக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்திருப்பார்கள்.
இது வெறுமனே ஒரு அரசியல் விளம்பரத்திற்காக கொண்டுவருகிறார்கள். பிரேரணை தொடர்பாக பாராளுமன்றில் விவாதம் வருகின்றபோது அவர்களது குற்றச்சாட்டுக்களுக்கு தெளிவான பதிலை வழங்க முடியும்.
அவர்கள் எதிர்க்கட்சி, எண்ணிக்கை குறைந்தவர்கள். நீங்கள் ஆளுங்கட்சி, எண்ணிக்கை கூடியவர்கள். அவர்களைவிட உங்களுக்காக பேசுவதற்கு பாராளுமன்றில் அதிகம்பேர் இருக்கிறார்கள். பிரேரணை பாராளுமன்றத்திற்கு விவாதத்துக்கு வரும்போது அதனைப் பார்த்துக்கொள்ளமுடியும்.
அதற்காக மக்களின் இன்றைய அவலநிலை மறக்கடிக்கப்பட்டு, மக்களுக்கான தீர்வுகள் பற்றிப்பேசுவதற்குப் பதிலாக இரவும் பகலும் நம்பிக்கையில்லாப் பிரேரணை பற்றியும் காப்பாற்றுங்கள் என்ற அவலக்குரலும் யாருக்கும் தெரியாத சாதித்த சாதனைகள் பற்றியும் எழுதி மக்களின் கவனத்தைத் திசைதிருப்பாதீர்கள்.
சரி, எதிர்க்கட்சி பிரேரணையில் வெற்றிபெறுகிறது; என வைத்துக் கொள்வோம். என்ன நடந்துவிடும். யாரையும் சிறைக்கு அனுப்பி விடுவார்களா? அல்லது மொத்த முஸ்லிம் சமூகத்தையும் நாட்டைவிட்டு துரத்திவிடுவார்களா?
மிஞ்சி மிஞ்சிப் போனால் அந்த அமைச்சுப் பதவியைத் துறக்கவேண்டிவரும். அதுவும் சட்டப்படி கடமையில்லை. ஆனாலும் தார்மீக ரீதியில் துறக்கலாம். அவ்வளவுதான். அதற்காக இன்றைய சமூகத்தின் பிரச்சினைகளையெல்லாம் ஒதுக்கிவைத்து இதையே இரவு பகலாக பேசிக்கொண்டிருக்கப் போகின்றீர்களா? அந்த அமைச்சுதான் முஸ்லிம் சமூகமா?
இவ்வளவு பெரிய அவலத்தை நமது மக்கள் சந்தித்திருக்கின்றார்கள். ஒரு நம்பிக்கையில்லாப் பிரேரணயை வைத்து அதையெல்லாம் எவ்வளவு இலகுவாக மறக்கடிக்கச் செய்கிறார்கள். இதுதான் நமது பிழை.
அன்று திகன சம்பவத்தில் பாராமுகமாக இருந்த பாதுகாப்பு அதிகாரிகளுக்கெதிராக நடவடிக்கை எடுக்க நாம் நமது அரசியல் தலைமைகளை தொடர்ந்து வற்புறுத்தி நடவடிக்கை எடுத்திருந்தால் பாதுகாப்புத் தரப்பினரின் கண்களுக்கு முன்னாலே நமது பிரதேசங்கள் மீண்டும் எரிந்திருக்குமா?
இரண்டு வாரங்களுக்குள் திகனயை மறந்தோம். அதைவிட விரைவாக குருநாகல்லையும் மினுவாங்கொடையையும் மறப்பதற்கு நம்பிக்கையில்லாப் பிரேரணை வந்திருக்கிறது.
ஏமாந்த சமூகம்!!!