சாய்ந்தமருது, பொலிவேரியன் சுனாமி மீள்குடியேற்றக் கிராமத்தில் கடந்த 26 ஆம் திகதியன்று தற்கொலை குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதைத் தொடர்ந்து அப்பகுதியில் ஏற்பட்டுள்ள அச்சமான சூழலைக் கருத்தில் கொண்டு, அப்பிரதேசத்தை முழுமையாக ஒளியூட்டும் பொருட்டு அங்குள்ள அனைத்து மின்சாரக் கம்பங்களிலும் பிரகாசமான தெரு விளக்குகளைப் பொருத்தும் பணிகள் கல்முனை மாநகர சபையினால் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறன.
சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் பொலிவேரியன் கிராமத்திற்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்தபோது, அப்பகுதி மக்கள் இதற்கான கோரிக்கையை முன்வைத்திருந்ததுடன் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற கல்முனை மாநகர சபை அமர்வில், மாநகர சபையின் சாய்ந்தமருது உறுப்பினர்களும் இவ்விடயத்தை வலியுறுத்தியிருந்தனர்.
இதன் பிரகாரம் அன்றைய தினம் சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைவாக கடந்த செவ்வாய்க்கிழமை அவசரமாக 100 தெரு விளக்குத் தொகுதிகள் கொள்வனவு செய்யப்பட்டு, அவை கல்முனை மாநகர சபையின் மின்சாரப் பிரிவினால் பொலிவேரியன் கிராமத்திலுள்ள அனைத்து வீதிகளிலும் உள்ள மின் கம்பங்களில் பொருத்தப்பட்டு வருகின்றன.
அதேவேளை தற்போதைய அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, எதிர்காலங்களில் இத்தகைய சம்பவங்கள் இடம்பெறும்போது கல்முனை மாநகர சபையானது துரித முன்னெடுப்புகளை மேற்கொள்வதற்காக முதல்வர் தலைமையில் பிரதேச ரீதியாக மாநகர சபை உறுப்பினர்கள் அடங்கிய அனர்த்த முகாமைத்துவ செயலணியொன்று அமைக்கப்பட்டுள்ளது.
எதிர்காலங்களில் இது போன்ற பயங்கரவாத அனர்த்தங்களின்போது மாத்திரமல்லாமல் இயற்கை அனர்த்தங்களின்போதும் அவசர நிவாரண மற்றும் மீளமைப்பு நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுப்பதற்கும் இந்த செயலணியினால் முறையான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.