காரைதீவு சகா-
சமுகத்தை வழிநடாத்தவேண்டிய பொறுப்பு அரசியல்வாதிகளை விட சமயத்தலைவர்களிடம்தான் அதிகம் காணப்படுகிறது. அதற்கேற்ப சமயத்தலைவர்கள் செயற்பட்டு ஜக்கியப்பட்ட சமாதான இலங்கையை கட்டியெழுப்பவேண்டும்.
சமுக வலுவூட்டலுக்கான பல்லின ஒன்றியம் அம்பாறை மாவட்ட சர்வசமய சம்மேளனம் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல்முன்னணியுடன் இணைந்து சர்வசமயத்தலைவர்களின் ஊடகசந்திப்பொன்றை ஏற்பாடு செய்தனர்.
இவ்வூடகச்சந்திப்பு சாய்ந்தமருது சீபிறீஸ் விடுதியின் மேல்தளத்தில் காப்பாளர் டாக்டர் எம்.ஜ.எம்.ஜெமீல் முன்னிலையில் நேற்று மாலை நடைபெற்றது.
சர்வசமயங்களின் சார்பில் வண்.ரண்முத்துகல சங்கரத்ன தேரர்(பௌத்தம்) போதகர் ஏ.கிருபைராஜா(கிறிஸ்தவம்) வி.ரி.சகாதேவராஜா(இந்து) மௌலவி இசட்.எம்.நதீர்(இஸ்லாம்) ஆகியோர் கருத்துரைத்தனர்.
முன்னதாக உயிர்த்த ஞாயிறன்று உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைகளுக்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.
அங்கு தலைவர்களால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களாவன:
போலி சமயதீவிரவாதத்தால் ஆட்கொள்ளப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் சிலர் செய்த கொடுரசெயலுக்கு முழுநாடும் கலங்கிநிற்கிறது. இதனை வன்மையாகக்கண்டிக்கிறோம். உண்மையான சமயத்துவம் மனிதநேயத்துடன் இயங்கிவருகிறது. அதற்காக மீண்டும் கைகோர்ப்போம்.
சில அரசியல்வாதிகள் இனவாத நஞ்சைக்கக்கி வருகிறார்கள்.
இலங்கை ஒரு பௌத்தநாடு என்பதில் மறுகருத்துக்கு இடமில்லை.இந்த நாட்டில் பௌத்தர்கள் கடந்த 26 நூற்றாண்டுகாலமாக வாழ்ந்துவருகிறார்கள். அதேவேளை ஏனைய சிறுபான்மையின மக்களுக்கான உரிமைகளையும் சமயங்களையும் மதிக்கவேண்டிய தார்மீககடமையுமுண்டு.
அவர்களது அங்கீகாரத்தை வழங்கவேண்டும்
சுமார் 20நூற்றாண்டுகாலமாக தமிழ்மக்களது வரலாறு அமைகிறது. முஸ்லிம் மக்கள் 13நூற்றாண்டுகால வரலாற்றுடன் வாழ்ந்துவருகிறார்கள்.
இந்நிலையில் முஸ்லிம்கள் நாட்டைவிட்டு வெளியேறவேண்டுமென சில அரசியல்வாதிகள் கூக்குரலிடுவதென்பது ஒரு சமயத்தின் இனத்தின் உரிமைகளை மிதிப்பதற்கு ஒப்பானதாகும்.
இலங்கை எமது நாடு. நாம்இங்குதான் பிறந்தோம். இங்குதான் மரணிப்போம். எனவே இத்தகைய இனவாதப்பேச்சுக்களுக்கு இடமளிக்காவண்ணம் நாம் சேர்ந்து மீண்டும் உயிர்ப்பாகச் செயற்படவேண்டிய காலகட்டம் வந்துள்ளது.
இலங்கை வரலாற்றில் சர்வசமயத்தினரின் பங்களிப்புடன் சுதந்திரம் கிடைக்கப்பெற்றது. மூவின மக்களும் இலங்கையில் அரசர்களாக ஆண்டுவந்துள்ளனர்.
அவ்வப்போது இனக்கலவரம் மதக்கலவரம் வகுப்புவாதக்கலவரம் என்பன இடம்பெற்றுவந்திருக்கின்றன. ஆனாலும் அண்மையில் இடம்பெற்றது சர்வதேசத்துடன் தொடர்புடைய பயங்கரவாதம்.
அதனால் மக்கள் மத்தியில் இன்னமும் அச்சம் நிலைகொண்டுள்ளது. பாடசாலைகள் முறையாக இயங்கவில்லை.
இன்றும் அரசியல்வாதிகள் சிலர் இனவாதத்தைக்கக்குகின்றனர். சமுகத்தை ஒன்றுபடுத்தவேண்டிய அரசியல்வாதிகள் சுயலாபத்திற்காக மக்களைப் பிழையாக பயன்படுத்துகின்றனர்.
இன்னமும் பிரிந்து பிரிந்து நாட்டைக்குட்டிச்சுவராக்க வேண்டாம். எனவே சமயத்தலைவர்கள் அனைவரும் இப்படியான சமாதான அமைப்புகள் மூலம் ஒன்றிணைந்து நாட்டுமக்களுக்கு நல்லசெய்திகளைச் சொல்லவேண்டும்.