உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலுடன் தொடர்புபட்டவர்களை காட்டிக்கொடுத்து அவா்களை கைது செய்வதற்கு முஸ்லிம் சமூகம் வழங்கி வரும் ஒத்துழைப்பு பாராட்டத்தக்கது என கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவருமான எம்.எஸ்.சுபையிர் தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்ட அசாதாரன நிலைமை காரணமாக கிழக்கு மாகாண ஆளுநரினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாதுகாப்பு தொடர்பான விசேட கூட்டம் ஆளுநர் தலைமையில் திருகோணமலையில் இடம்பெற்ற போது கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலினால் அப்பாவி பொதுமக்கள் பலியாகியுள்ளனர். இந்த தாக்குதலினை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் வன்மையாகக் கண்டிப்பதுடன், தாக்குதலுடன் தொடர்புபட்டவர்களை காட்டிக்கொடுத்து அவா்களை கைது செய்வதற்கும் ஒத்துழைப்பு வழங்கிவருகின்றது. இந்த விடயத்தில் முஸ்லிம் சமூகத்தின் செயற்பாடு குறித்து நாட்டினுடைய அரசியல் தலைவர்களும், பாதுகாப்பு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
ஒழுக்கமற்ற ஒரு அறைகுறை மத போதகரால் முன்னெடுக்கப்பட்ட குறித்த தாக்குதலினை இந்த நாட்டிலே உள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களும் மிக வன்மையாக கண்டித்துள்ளனர். அத்துடன் தாக்குதலுடன் தொடர்பு பட்டவர்களை பிடிப்பதற்கும், அவர்கள் சந்தேகத்தின் பேரில் நடமாடிய இடங்களை காட்டிக்கொடுத்து அவர்களை அழிப்பதற்கும் பாதுகாப்பு தரப்பினருக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். இது ஒரு முன்மாதிரியான பாராட்டத்தக்க செயற்பாடாகும்.
குறித்த தாக்குதலினை திட்டமிட்டு மேற்கொண்டவர் என அடையாளம் காணப்பட்ட சஹ்றான் என்பவர் இந்தப்பிராந்தியத்திலே வாழுகின்ற முஸ்லிம்களுக்குள் மார்க்க முரண்பாடுகளை தோற்றுவித்து பல வன்முறை சம்பவங்களிலும் ஈடுபட்டு பல பிரச்சினைகளையும் ஏற்படுத்திய ஒருவராவார். அவர் இந்தப்பிராந்தியத்தில் வாழுகின்ற மக்களின் இயல்பு நிலையை கெடுக்கின்ற ஒருவராகவும் செயற்பட்டுள்ளார். அவரது செயற்பாடுகளுக்கு எதிராகவும், அவரை கைது செய்யுமாறும் கோரி காத்தான்குடியில் 2017ஆம் ஆண்டு மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர்.
குறிப்பாக சஹ்றானின் செயற்பாடுகள் குறித்து பல்வேறு தரப்பினராலும் முறைப்பாடுகள் செய்யப்பட்டும், அவர் காத்தான்குடி பிரதேசத்தில் வன்முறை சம்பவத்துடன் தொடர்பு பட்டிருந்தும் கைது செய்யப்படவில்லை. ஏன் அவர் கைது செய்யப்படவில்லை என்பது புரியாமலுள்ளது. தாங்கள் சஹ்றானுடைய செயற்பாடுகள் குறித்து தெரியப்படுத்தியும் ஏன் அவை கவனத்தற்கொள்ளப்படவில்லை என பலரும் இன்று கேள்வியெழுப்புவதனை அவதானிக்க முடிகிறது.
கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தமது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்தது. இந்த பிரதிநிதித்துவத்தை இழப்பதற்கும் சஹ்றான் என்பவரே பிரதான காரணமாகும். அவர் தேர்தலின் போது மேற்கொண்ட தீவிர பிரச்சாரத்தினாலே நாம் தமது அரசியல் அந்தஸ்ததை இழக்க வேண்டியேற்பட்டது.
குறிப்பாக, இந்த நாட்டிலே வாழுகின்ற முஸ்லிம் சமூகம் நாட்டுக்குள் பிரிவினையை ஏற்படுத்தவோ அல்லது இந்த நாட்டை துண்டாடுவதற்கோ துணைபோன வரலாறுகள் கிடையாது. அனைவரும் இந்த நாட்டு பிரஜைகள் என்ற அடிப்படியில் ஐக்கிய இலங்கைக்குள் ஒற்மையாக வாழ்வதனையே விரும்புகின்றனர்.
கடந்த 30வருட காலம் இடம்பெற்ற கொடிய பயங்கரவாத யுத்தத்தின் போது இந்த நாட்டிலே வாழும் மக்கள் பல்வேறு இழப்புக்களை சந்தித்ததுடன், தமது நிம்மதிகளையும் தொலைத்து பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கினர். குறிப்பாக அந்த யுத்தத்தினால் சிங்கள இரானுவ வீரர்களும், திமிழ் மக்களும் அதிகமாக பாதிக்கப்பட்டதுடன், நாட்டில் வாழும் மூவின மக்களும் பாதிக்கப்பட்டனர்.
குறிப்பாக வட கிழக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் தமது உயிர், உடமைகளை இழந்து அகதிகளாக ஆக்கப்பட்டனர். யுத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்களை உணர்ந்த ஒரு சமூகமாக முஸ்லிம் சமூகம் உள்ளது. குறிப்பாக யுத்தத்தினால் எதனையும் சாதிக்க முடியாது என்பதனையும் முஸ்லிம் சமூகம் நன்கறிந்துள்ளது.
இவ்வாறான நிலையில் ஒரு கும்பலினால் மேற்கொள்ப்பட்ட குறித்த தாக்குதலினை வைத்து இந்த நாட்டிலே வாழும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தினையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்க முடியாது. இன்று சிலர் முஸ்லிம் சமூகத்தின் மீது பழி சுமத்தி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர். நாட்டில் மேலும் ஏற்படவிருந்த ஆபத்தினை முஸ்லிம் மக்களே காட்டிக்கொடுத்து தடுத்தனர் என்கின்ற வரலாற்று சம்பவத்தினை வங்குரோத்து அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்.
யுத்தத்தினை ஒருபோதும் விரும்பாத முஸ்லிம் சமூகத்தின் ஆதரவுடன் தீய சக்திகளை அடக்குவதற்கு சகல தரப்பினரும் முன்வர வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.