கெக்கிராவ மடாடுகம பிரதேசத்தில் இயங்கி வந்த பள்ளிவாசல் ஒன்றை பிரதேசவாசிகள் சிலர் உடைத்தார்கள் எனும் செய்தியை கேள்வியுற்று பெரும் வேதனையுற்றேன்.
நாட்டில் இன்று ஏற்பட்டிருக்கும் துரதிஸ்டமான சூழ்நிலையில் சிறுபான்மையினங்கள் பெரும் துயரத்தோடும் சிரமத்தோடும் வாழ்ந்து வரும் சூழ்நிலையில் இவ்வாறான செயற்பாடுகள் ஆதிக்க சக்திகளுக்கு பிழையான முன் உதாரணங்களை உருவாக்கி விடுகின்ற அபாயங்களை நாம் சிந்திக்கவேண்டும். இவ்வாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புனர்வாழ்வு மீள் குடியேற்றம் வடக்கு அபிவிருத்தி முன்னாள் பிரதி அமைச்சருமான கெளரவ காதர் மஸ்தான் அவர்கள் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது.
புனித ரமலான் நோன்பு அநுஷ்டிக்கும் நாங்கள் எங்களுக்குள் கருத்து முரண்பாடுகளை வளர்த்து வீணான செயல்பாடுகளுக்கு காரணமாய் அமைந்தது விடக் கூடாது.
இஸ்லாமிய கோட்பாடுகளுக்குட்பட்ட தஃவா இயக்கங்கள் இந்த சமூகத்தின் விடிவுக்காக தம்மாலான சேவைகளை சிரமத்துடன் செய்து வரும் வேளையில் இவ்வாறான மோசமான செயற்பாடுகள் எமது சமூகத்தின் வீழ்ச்சிக்கே வழிசமைக்கும்.
ஒற்றுமையெனும் கயிற்றை பற்றிப்பிடியுங்கள் எனும் புனித குர்ஆனுடைய போதனையை பற்றிப்பிடித்து சகோதர சமூகங்களுக்கு நாம் முன்னுதாரணமாக விளங்க வேண்டும்.
எமக்கிடையில் ஏதாவது பிளவுகள் ஏற்பட்டால் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, வக்பு சபை ,பள்ளிபரிபாலன சபைகள் போன்றவற்றின் ஆலோசனையின் அடிப்படையில் அமைதித் தீர்வுகளையே காணவேண்டுமே தவிர அழிவு வழியில் அல்ல என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.
அப்பாவிகளை பிழையாக காட்டிக்கொடுத்தல்,சவாலான அறிக்கைகளை விடுதல்,ஏட்டிக்குப் போட்டியான பத்வாக்கள் வழங்கள் என்பனவற்றை கைவிட்டு அல்லாஹ்வும் அவனது றஸூலும் காட்டிய பாதையில் பயணித்து ஈருலக வெற்றிகளையும் அடைவோம் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ காதர் மஸ்தான் அவர்கள் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.