அனைத்து முஸ்லிம் அரசியல் கட்சிகளிடமும் இஸ்லாமிய இயக்கங்களிடமும் மன்றாட்டமாய் ஒரு கண்ணீர் வேண்டுகோள்!


எஸ்.ஹமீத்-
ல்லா முஸ்லிம் கட்சிகளும் உடனடியாக இணைந்து தனித்த, தனித்துவ, தன்மானமிக்க ஒரே முஸ்லிம் அரசியல் கட்சியாகப் புதிய பரிணாமம் எடுங்கள். அவ்வாறே சகல இஸ்லாமிய இயக்கங்களும் ஒரே குடையின் கீழ் ஒன்றுபட்டு சக்திவாய்ந்த, ஒற்றுமை நிறைந்த, உன்னதமிக்க ஒரே இயக்கமாகுங்கள். இதுவே இப்போதைக்கும் எதிர்காலத்துக்கும் இலங்கைவாழ் இஸ்லாமிய உம்மத்துக்கு இன்றியமையாத தேவையாகும்.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஒரு பத்து வீதம் கூட முழுமையாக இல்லாத நமது சமூகம் பல பத்து அரசியல் கட்சிகளாகவும் அதனைவிட அதிகமான ஜமாஅத்களாகவும் சிதறிச் சின்னாபின்னமாகக் கிடப்பதுதான் நமது இன்றைய சீரழிவுக்குப் பிரதான காரணமென்பது சிந்தனை வளமுள்ளோர்க்குத் தெளிவாகவே புரியும்.
நீட்டுவதும் ஆட்டுவதும் கொண்டும், தக்பீரை நெஞ்சிலா, வயிற்றிலா கட்டுவது என்பதிலும், தராவீஹ் எட்டு ரக்அத்தா, இருபது ரக்அத்தா என்பது போன்ற சிறிய விடயங்களிலும் பிளவுண்டு பல்வேறு கூட்டங்களாகப் பிரிந்து நிற்கின்ற நாம் இனியாவது ஓரணியாகத் திரண்டு, உரிய ஒரே தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றுபடாவிட்டால், எதிர்காலம் பல சஹ்ரான் போன்ற பயங்கரவாதிகளை நமது சமூகத்திற்குள்ளிருந்து உற்பத்தி செய்யும் என்பது நிதர்சனம்.
ஒற்றுமைப்பட்ட ஒத்த அமைப்புக்குள்ளிருந்து அவரவர் தாம் சரியென்று விளங்கிக்கொண்ட வகையில் தங்கள் வணக்க வழிபாடுகளை மேற்கொள்ளட்டும். அல்லாஹ் உள்ளங்களை நன்கறிந்தவன். விரலை ஆட்டினானா, இல்லையா என்பதை மட்டும் வைத்து ஒரு உண்மையான தொழுகையாளிக்கு சொர்க்கமா, நரகமா என்று, அனைத்தும் அறிந்த அந்த அல்லாஹ் தீர்மானம் செய்யவே மாட்டான் என்ற நம்பிக்கை இல்லாதவன் அல்லாஹ்வின் மகத்தான ஆளுமையைக் கொச்சைப்படுத்துகிறான் என்பதுதான் நமது நிலைப்பாடு.
இவ்வாறுதான் ஏனைய முரண்பாடுகளிலும் உடன்பாட்டோடு, ஒன்றுபட்டு, ஒரே தனித்த இஸ்லாமிய ஜமாஅத் ஆவோம்! தப்லீக், தவ்ஹீத் என்பது போன்ற பிரிவினைப் பெயர்கள் களைந்து ‘ஜமாஅத்துல் முஸ்லிம் உம்மத்’ என்ற ஒரே பெயர் கொள்வோம்!
இவ்வாறே, முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், கிழக்கு காங்கிரஸ், மேற்குக் காங்கிரஸ், நல்லாட்சிக்கான அமைப்பு, பொல்லாட்சிக்கான கொழுப்பு , வடக்குக்கான பொழைப்பு, தெற்குக்கான உழைப்பு என்றெல்லாம் இயங்கும் பன்னூறு அரசியல் கட்சிகளும் அல்லாஹ்வின் பெயரால், சமூகத்தின் நலனை மட்டும் கருத்திற் கொண்டு ஒரே அரசியல் கட்சியாக உருவாகவும் உருமாறவும் வேண்டும். இந்த ஒரே கட்சிக்குள் கபீர் ஹாஷிமும் ஹலீமும் ஹஸனலியும் வை.எல்.எஸ். ஹமீதும் பௌஸியும் மரைக்காரும் றஹ்மானும் பசீர் சேகுதாவூதும் அதாவுல்லாஹ்வும் அவர்களது சகாக்களும் ஹக்கீமும் ரிசாதும் அவர்தம் மொத்த ஆதரவாளர்களும் இன்னுமுள்ள அனைத்து முஸ்லிம் வாக்காளர்களும் உள்வாங்கப்பட வேண்டும். ஒரேகட்சி...ஒரே சின்னம்....ஒரே கொள்கை!
இன்ஷா அல்லாஹ்...இந்த மாற்றங்கள் நடந்தால், எண்ணிப் பாருங்கள்...தற்போது கவிழ்ந்து தொங்கும் நமது தலைகள் நிமிர்ந்து உயரும். நம் அச்சம் அகலும். நமது சமூகத்தின் இருள் மடியும். வெளிச்சம் பரவிப் பரவசம் தரும். நமக்கான உரிமைகள் நமது காலடி தேடித் தானாகவே ஓடிவரும்!
‘ஒற்றுமை என்னும் கயிறைப் பற்றிப் பிடியுங்கள்!’
இது என்னைப் போன்ற பல இலட்சம் இஸ்லாமிய இதயங்களின் ஏக்கத்துடன் கூடிய வேண்டுகோள். கண்ணீரோடு சமர்ப்பிக்கும் விண்ணப்பம்.

நீங்கள் எல்லோரும் சேர்ந்து நிறைவேற்றுவீர்களா?
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -