ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்-
சிரேஷ்ட எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான பண்ணாமத்து கவிராயர் என்று தமிழ் இலக்கிய உலகில் அறியப்பட்ட ஆங்கில ஆசிரியரான எஸ்.எம். பாரூக்கின் மறைவுச் செய்தி கிடைத்தவுடன் அவருக்காக நான் பிரார்த்தனை செய்தேன். அவரது ஆங்கிலப் புலமையானது, வியக்கத்தக்க மொழிபெயர்ப்பு கவிதைகளை தமிழ் இலக்கியப் பரப்புக்கு தந்துள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
பண்ணாமத்துக் கவிராயர் மத்திய மாகாணத்தின் மாத்தளை மாவட்டத்தில் பிறந்தவர். மாத்தளையின் முன்னைய பெயரான "பண்ணாமம்" என்ற பெயரை அடைமொழியாகக் கொண்டு தனது மாவட்டத்தின் பெயரை உலகறியச் செய்தவர். கவிஞராக, சிறுகதையாளராக, மொழிபெயர்ப்பாளராக, பத்தி எழுத்தாளராக இலக்கியத்தின் வெவ்வேறு தளங்களில் பயணம் செய்து வெற்றி கண்டவர்.
1960ஆம் ஆண்டு தொடக்கம் கலை, இலக்கியத் துறையில் தனது பங்களிப்புகளை வழங்கிவந்த அவர், ஒரு பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியராவர். மறைந்த எழுத்தாளர் ஏ.ஏ. லத்தீப் நடாத்திய ‘இன்ஸான்’ பத்திரிகையில் சிறிதுகாலம் பணிபுரிந்தார். 2016ஆம் ஆண்டின் வாழ்நாள் சாதனையாளருக்கான கொடகே விருதை பெற்றுக்கொண்ட இவரின் காற்றின் மௌனம் என்ற மொழிபெயர்ப்பு கவிதைகள் அடங்கிய தொகுப்பு 1996ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அனுசரணையில் மருதமுனை கலை, இலக்கிய மன்றங்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 2016ஆம் ஆண்டு மருதமுனையில் நடைபெற்ற இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன்விழா நிகழ்வில் பண்ணாமத்து கவிராயர் முன்னிலையாளராக கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பாக வழிநடாத்தினார்.
பைஸ் அஹமது பைஸ், அல்லாமா இக்பால் ஆகியோரின் கவிதைகள் மற்றும் பலஸ்தீன எழுச்சிக் கவிதைகள் போன்றவற்றை தமிழ் இலக்கியப் பரப்புக்கு இவரது மொழிபெயர்ப்பின் மூலமே நுகரக் கிடைத்தது எனலாம். ஆற்றலும் ஆளுமையும் கொண்ட சிறந்ததொரு எழுத்தாளனை இலங்கை தமிழ் இலக்கியப் பரப்பு இழந்து நிற்கிறது.
இவரது இழப்பில் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். அத்துடன் அவருடைய மறுமை வாழ்வுக்காகவும் பிரார்த்திக்கின்றேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
--